முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார் என்றொரு பழமொழி உண்டு. முயற்சி செய்யாமல் எளிதில் கிடைக்கும் பொருள் நிலைக்காது.
முயற்சி பெற்ற பொருள் விலகாது என ஆன்றோர்கள் கூறுவார்கள். ஆனால் இன்றைய காலகட்டத்தில் நாம் பெரும்பாலானவற்றை மிகவும் எளிதாகவும், நமக்கு ஏற்ப வசதியாகவும் பெருகிறோம்.
உதாரணமாக, சாப்பிடும் பொருளில் கூட உபயோகத்திற்கு தயாராக உள்ள (ரெடிமேட் புட்ஸ்) பொருட்களை வாங்கி பயன்படுத்துகிறோம்.
தினம் தினம் இவ்வாறான பொருட்கள் அறிமுகமாகி வருகின்றன. இது போன்ற வாழ்க்கை மனித இனத்திற்கு ஏற்றதா? இவ்வாறு எளிதல் கிடைக்கும் பொருட்களால் நம்முடைய நேரம் மிச்சமாகும், வேலைப்பளு சுருங்கும். இதே போல் உங்கள் உடல் மற்றும் மூளையின் இயக்கம் குறைய ஆரம்பிக்கும்.
மனித இனத்தின் வரலாற்றை புரட்டிப் பார்த்தால் ஒவ்வொரு வெற்றிக்கும் கடுமையான முயற்சி தான் படிக்கட்டுகளாக இருந்திருக்கும். கடந்த 200 ஆண்டுகளாக கடுமையான ஊக்கம், தன்னம்பிக்கை, விடாமுயற்சி போன்றவற்றின் வாயிலாக நாடு, குடும்பம்போன்றவை தழைத்தோங்கின. அடுத்த தலைமுறையில் செல்வ செழிப்பும், சுதந்திரமும் நிரம்பியிருக்கலாம். ஆனால் அவை தன்னிறைவு மற்றும் தன்னலமாக இருக்கும்.
தன்னலமானது, சோம்பல், அக்கறையின்மை, மற்றவர்களை சார்ந்திருத்தல் போன்ற வற்றிற்கு வழிவகுக்கும். அடுத்தடுத்த தலைமுறைக்கு சுழற்சி முறையில் இது நடந்து கொண்டே இருக்கும். இந்த சுழற்சியில் நீங்கள் எந்த இடத்தில் உள்ளீர்கள் என்பதை உணருங்கள். இந்த நொடியிலிருந்து சவால்களை சந்திக்க தயாராகுங்கள்.
ஆற்றலை பெற தொழுங்கள் மற்றும் மனதில் திடமான நம்பிக்கையை வளர்த்துக் கொள்ளுங்கள். செயலை தொடங்குவதற்கு முன் திட்டமிடுங்கள். அதை ஆராயுங்கள். நம்பிக்கையுடன் கனவு காணுங்கள். பேச்சாளர் சிவ்கேரா கூறுகையில்,” ஒரு நிலத்தில் உள்ள களைகளை எடுப்பதற்கு இரண்டு வழிகள் உள்ளன. எளிய முறை, சற்று கடினமான முறை. எளிய முறையில், களைகளை பிடுங்கும் எந்திரம் மூலம் அவற்றை அகற்றலாம். அவ்வாறு செய்யும் போது, களைகளுடன் பயிரும் அகற்றப்படும். மீண்டும் களைகள் முளைப்பதற்கான வாய்ப்புகள் அதிகம்.
கடினமான முறையில், நிலத்தில் உங்கள் முழங்காலை வைத்து ஒவ்வொரு களையையும் அதனுடைய வேருடன் பிடுங்க வேண்டும். அதனால் களைகள் முளைக்கும் வாய்ப்புகள் மிக குறைவு. நிலத்தில் உள்ள பயிர்கள் பாலாவதை தடுக்கலாம். இவற்றில் எந்த முறையை நீங்கள் தேர்வு செய்வீர்கள்?.’ என்பார். ஆகவே உங்களுடைய எண்ணம், கடின முயற்சியை பொறுத்தே பலன் கிடைக்கும். முயற்சி செய்வீர்; வெற்றி பெறுவீர்.
Leave a Reply