போலி ஆவணம் மூலம் ரூ.1.52 கோடி மோசடி : தென்காசி இந்தியன் வங்கி மாஜி அதிகாரி கைது

posted in: கோர்ட் | 0

மதுரை:தென்காசி இந்தியன் வங்கி கிளையில், போலி ஆவணம் மூலம் ஒரு கோடியே 52 லட்சம் ரூபாய் மோசடி செய்ய உடந்தையாக இருந்ததாக, மாஜி முதன்மை மேலாளரை சி.பி.ஐ.,யினர் கைது செய்தனர். அவர், மதுரை சி.பி.ஐ., கோர்ட் உத்தரவுப்படி ரிமாண்ட் செய்யப்பட்டார்.

திருநெல்வேலி மாவட்டம் தென்காசியை சேர்ந்தவர் வி. ஈஸ்வர் (59). இவர், தென்காசியில் இந்தியன் வங்கி கிளையின் முதன்மை மேலாளராக இருந்தார். இந்த வங்கியில், தென்காசி எஸ்.ஏ.எஸ்., அண்ட் கம்பெனி, சாகுல் அமீது ராவுத்தர் அண்ட் சன்ஸ் ஆகிய மளிகை பொருள் மொத்த வியாபார நிறுவனங்கள் “ஓப்பன் கேஸ் கிரடிட்’ (ஒரு கோடியே 25 லட்சம் ரூபாய்க்கு மேல் வணிகம் செய்யும் நிறுவனங்களுக்கான கடன் வழங்கும் திட்டம்) கணக்கு வைத்திருந்தன.இந்த கணக்கு வைத்திருக்கும் நிறுவனங்களுக்கு 90 லட்சம் ரூபாய் வரை வங்கி கடன் வழங்கலாம். இதன்படி, எஸ்.ஏ.எஸ்., நிறுவனத்திற்கு 90 லட்சம் ரூபாய், சாகுல் அமீது நிறுவனத்திற்கு 40 லட்சம் ரூபாயை, முதன்மை மேலாளர் ஈஸ்வர் 2007 மார்ச் 20ல் வழங்கினார். இந்நிறுவனங்கள் போலி ஆவணம் தாக்கல் செய்து மோசடி செய்ததாகவும், அதற்கு ஈஸ்வர் துணையாக இருந்தார், வட்டியுடன் ஒரு கோடியே 52 லட்சம் ரூபாய் மோசடிக்கு ஈஸ்வர் துணையாக இருந்துள்ளார், என, தணிக்கையின் போது கண்டுபிடிக்கப்பட்டது.

திருநெல்வேலி வட்டார இந்தியன் வங்கி அதிகாரி புகார்படி, இரண்டு நிறுவனங்களின் உரிமையாளர்கள் ஜாஸ்மின், ஷேக்மன்சூர், இஸ்மாயில் கனி, ஆர்டிபால் உட்பட ஒன்பது பேரை சி.பி.ஐ.,யின் பொருளாதார குற்றப் பிரிவு அதிகாரிகள் சமீபத்தில் கைது செய்தனர்.பணியில் இருந்து ஓய்வு பெற்ற, ஈஸ்வர் தென்காசியில் வசித்து வந்தார். அவரை, சி.பி.ஐ.,யினர் நேற்று கைது செய்தனர். அவர், மதுரை சி.பி.ஐ., கோர்ட்டில் நேற்று ஆஜர்படுத்தப்பட்டார். அவரை, வரும் 22ம் தேதி வரை ரிமாண்ட் செய்து நீதிபதி எம்.பி. ஜெகநாதன் உத்தரவிட்டார்.ஈஸ்வரை மூன்று நாட்கள் சி.பி.ஐ., காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி, சி.பி.ஐ., தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அரசு வக்கீல் ஆஜராகாததால் மனு மீதான விசாரணையை இன்று தள்ளி வைத்து நீதிபதி உத்தரவிட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *