ஸ்பெக்ட்ரம் ஊழல்: சிறப்பு நீதிமன்றம் அமைக்க சுப்ரீம் கோர்ட் உத்தரவு!

posted in: கோர்ட் | 0

டெல்லி: 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு முறைகேடுகள் தொடர்பாக விரிவான விசாரணை நடத்த சிறப்பு நீதிமன்றம் அமைக்குமாறு மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேலும் ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் பலனடைந்த மற்றவர்களையும் விசாரிக்குமாறும் சிபிஐக்கும், மற்ற விசாரணை அமைப்புகளுக்கும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த வழக்கை சிபிஐ விசாரித்து வரும் நிலையில், அதன் விசாரணையை உச்ச நீதிமன்றம் கண்காணிக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டில் பொது நல வழக்கு தொடரப்பட்டது.

இந்த மனுவை கடந்த டிசம்பர் 16ம் தேதி விசாரித்த நீதிபதிகள் சிங்வி, கங்குலி ஆகியோர் அடங்கிய பெஞ்ச், இந்த வழக்கை சி.பி.ஐ. மற்றும் விசாரணை அமைப்புகள் உரிய முறையில் தீவிரமாக விசாரிக்க வேண்டும் என்றும், அதை நாங்கள் நேரடியாக கண்காணிப்போம் என்றும், விசாரணையின் விவரங்களை பிப்ரவரி 10ம் தேதி (இன்று) சி.பி.ஐ. மற்றும் அமலாக்கப்பிரிவு ஆகியவை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டனர்.

இந்த உத்தரவுக்கு பின்னரே சி.பி.ஐ. தனது விசாரணையை தீவிரப்படுத்தி நிரா ராடியா, தொலை தொடர்புத்துறை முன்னாள்-இன்னாள் அதிகாரிகள், தொழிலதிபர்களின் வீடுகள், அலுவலகங்களில் ரெய்ட் நடத்தியது.

இதைத் தொடர்ந்து ராசா, அதிகாரிகள் சந்தோலியா, பெகுரியா, ஸ்வான் டெலிகாம் அதிபர் உஸ்மான் ஆகியோரை கைது செய்தது.

இந் நிலையில் கைதானவர்களிடம் நடத்திய விசாரணையில் கிடைத்த தகவல்கள் மற்றும் ரெய்டின்போது கிடைத்த தகவல்களை இன்று உச்ச நீதிமன்றத்தில் சிபிஐ தாக்கல் செய்தது.

மேலும் இந்த வழக்கில் முதல் தகவல் அறிக்கையான எப்ஐஆரை வரும் மார்ச் 31ம் தேதி தாக்கல் செய்வதாகவும் சிபிஐ அறிவித்தது.

இதையடுத்துப் பேசிய நீதிபதிகள், 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு முறைகேட்டால் லாபம் அடைந்த மற்றவர்கள் குறித்தும் சிபிஐ முழு விசாரணை நடத்த வேண்டும்.

இந்த வழக்கில் விரிவான விசாரணை நடத்த மத்திய அரசு சிறப்பு நீதிமன்றத்தை அமைக்க வேண்டும். இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களிடம் விசாரணை நடத்த சிபிஐ குறைந்த நாட்களே அவகாசம் கேட்பது ஏன்?. இதன்மூலம் சிபிஐயின் கைகள் கட்டப்பட்டுள்ளது தெளிவாகிறது.

இந்த முறைகேட்டில் சம்பந்தப்பட்ட யாரை வேண்டுமானாலும் விசாரிக்க சிபிஐக்கு சுதந்திரம் தரப்பட வேண்டும். சிபிஐயும் பண லாபம் பெற்ற அனைவரையும் முழுமையாக விசாரிக்க வேண்டும். பலர் தங்களையே நீதியாக நினைத்துக் கொண்டுள்ளனர். அவர்களை சட்டம் விடக்கூடாது.

இந்த விஷயத்தில் சிபிஐயின் வேகம் போதவில்லை. சிபிஐ தாக்கல் செய்யும் குற்றப் பத்திரிக்கை சரியில்லாவிட்டால் அதை நீதிமன்றம் ஏற்காது என்று நீதிபதிகள் தீர்ப்பளித்தனர்.

ஏலம் விடாமல் ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு செய்தது தவறு:

இந் நிலையில் ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு தொடர்பாக விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி சிவராஜ் பாட்டீல் தலைமையில் ஒரு நபர் கமிஷன் அமைக்கப்பட்டது. அவர் விசாரணை நடத்தி 143 பக்க அறிக்கையை மத்திய அமைச்சர் கபில் சிபலிடம் தாக்கல் செய்தார்.

அந்த அறிக்கையில் விவரம் வெளியாகி உள்ளது. அதில், ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டை ஏலம் விடாமல் முதலில் விண்ணப்பித்தவர்களுக்கு கொடுத்தது தவறு. இதில் வெளிப்படையான தன்மை இருந்திருக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *