ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் முன்னாள் மத்திய மந்திரிகள்- 40 அதிகாரிகள் தொடர்பு; சிவராஜ்பட்டீல் கமிஷன் அறிக்கையில் தகவல்

posted in: அரசியல் | 0

ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் நடந்த தவறுகளை கண்டு பிடிக்க நீதிபதி சிவராஜ் பட்டீல் தலைமையில் ஒருநபர் கமிஷன் அமைக்கப்பட்டது.


2001-ம் ஆண்டு பாரதீய ஜனதா ஆட்சி காலத்தில் இருந்து 2008 வரை ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் நடந்த தவறுகளை ஆய்வு செய்ய வேண்டும் என ஒருநபர் கமிஷனுக்கு உத்தர விடப்பட்டு இருந்தது. அதன் படி விசாரணை நடத்தி அதன் அறிக்கையை மத்திய மந்திரி கபில்சிபலிடம் வழங்கியது. அறிக்கையில் உள்ள முக்கிய விவரங்கள் மத்திய மந்திரி கபில்சிபல் வெளியிட்டார். அதில் கூறப்பட்டுள்ள தகவல்கள் வருமாறு:-

ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் பாரதீய ஜனதா ஆட்சி காலத்தில் மந்திரிகளாக இருந்த அருண்ஷோரி, பிரமோத் மகாஜன், பின்னர் மந்திரியான ஆ.ராசா ஆகியோர் சம்பந்தப்பட்டுள்ளனர். இதில் 40 அதிகாரிகள் நேரடியாகவும் மறைமுகமாகவும் உடந்தையாக இருந்துள்ளனர். தொலை தொடர்பு துறை செயலாளராக இருந்த ஷியாமல் கோஷ், டி.எஸ்.மாத்தூர், வினோத் வைஷ், வெகுரியா ஆகியோர் விதிமுறைகளை மீறியும் மத்திய மந்திரிசபை முடிவுகளை மீறியும் உரிமங்களையும், 2-ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டையும் வழங்கி உள்ளனர்.

2003-ம் ஆண்டில் 2-ஜி லைசென்சுகளை வழங்க பல்வேறு கட்ட நடைமுறைகளை பின்பற்றும்படி தொலைதொடர்பு ஒழுங்கு முறை ஆணையம் சிபாரிசு செய்து இருந்தது. இதை அப்போதைய மந்திரி அருண்ஷோரி, வினோத் வைஷ் ஆகியோர் பின்பற்ற வில்லை. ஆனால் இந்த முடிவை அப்போதைய மந்திரிசபையும் ஏற்றுக் கொண்டுள்ளது.

இந்த ஒதுக்கீடு சம்பந்தமாக வினோத் வைஷ் தொலை தொடர்பு ஒழுங்கு முறை ஆணையத்திடம் எழுத்து பூர்வமாக ஆலோசனை பெறுவதற்கு பதிலாக டெலிபோன் மூலம் பேசி ஆலோசனை பெற்று உள்ளார். 2003 நம்பவர் மாதம் ஒதுக்கப்பட்ட 2-ஜி லைசென்சு தொடர்பாக தொலை தொடர்பு ஒழுங்கு முறை ஆணையம் தலைவர் தொலை தொடர்பு துறைக்கு கடிதம் எழுதி இருந்தார். ஆனால் அதை பின்பற்றாமல் 2001-ம் ஆண்டில் வழங்கப்பட்ட கட்டணத்திலேயே வழங்கி உள்ளனர்.

அது மட்டும் அல்லாமல் முதலில் விண்ணப்பித்தவருக்கு முதலில் கொடுப்பது என்ற முறைகளையும் பின் பற்றி உள்ளனர். டாடா டெலி சர்வீஸ், பாரதி செல்லுலார் போன்ற நிறுவனங்களுக்கு சாதகமாக தொலை தொடர்பு துறை முடிவுகளை எடுத்து உள்ளது. இதிலும் தொலை தொடர்பு ஒழுங்கு முறை ஆணைய சிபாரிசு பின் பற்றப்படவில்லை. 2002-ம் ஆண்டில் ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு செய்த போது விண்ணப்பங்களை சரிவர பரிசீலிக்காமல் ஒதுக்கி உள்ளனர். அப் போதைய மந்திரி பிரமோத் மகாஜன், அதிகாரிகள் ஷியாமல் கோஷ் ஆகியோர் விருப்பப்படி நடந்துள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *