வாஷிங்டன்: டிரிவேலி பல்கலைக்கழக விசா மோசடியால் பாதிக்கப்பட்ட இந்திய மாணவர்கள் விவகாரத்திற்கு, நல்ல முறையில் தீர்வு வழங்கப்படும் என்று, அமெரிக்கா உறுதியளித்துள்ளது.
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் டிரிவேலி பல்கலைக்கழகம் செய்த விசா மோசடியால், ஆயிரத்துக்கும் மேற்பட்ட இந்திய மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் இதுகுறித்து, அமெரிக்காவுக்கான இந்திய தூதர் மீரா சங்கர், அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஹிலாரி கிளிண்டனிடம், இந்தியாவின் கவலையைத் தெரிவித்தார்.தொடர்ந்து, ஹிலாரியிடம் இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா தொலைபேசியில் இதுகுறித்து பேசினார்.இதையடுத்து, இந்திய வெளியுறவுச் செயலர் நிருபமா ராவ், அமெரிக்க வெளியுறவு சார்பு செயலர் வில்லியம் பர்ன்சை நேற்று சந்தித்துப் பேசினார்.
இதுபற்றி செய்தியாளர்களிடம் ராவ் கூறியதாவது:துரதிர்ஷ்டவசமாக நடந்து விட்ட இச்சம்பவத்தால் பாதிக்கப்பட்ட இந்திய மாணவர்களின் நலன் குறித்த இந்திய அரசின் கவலையை, பர்ன்சிடம் எடுத்துரைத்தேன். இதுபோன்ற மிக மிக அரிதான, மிகவும் சிக்கலான பிரச்னைக்கு நல்ல முறையில் தீர்வு காண அமெரிக்க அரசு விரும்புவதாக பர்ன்ஸ் உறுதியளித்தார்.இந்திய அரசின் தொடர்ந்த வலியுறுத்தல் மற்றும் அழுத்தத்தால் பாதிக்கப்பட்ட மாணவர்கள், நம்பகமான பல்கலைகளில் சேர்க்கப்படுவது உள்ளிட்ட நல்ல தீர்வுகள் விரைவில் கிடைக்கும்.மாணவர்களின் எதிர்காலம் எவ்விதத்திலும் பாதிக்கப்படக் கூடாது. இவர்கள் எந்த சட்டவிரோதமான செயல்களிலும் ஈடுபடவில்லை. அதனால் இவர்கள் பிற பல்கலைகளில் சேர்த்துக் கொள்ளப்பட வேண்டும் என்பதும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
இவ்விவகாரத்தால், அமெரிக்காவில் இந்திய மாணவர்களைப் பற்றி எதிர்மறையான எண்ணங்கள் உருவாகாது.ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா நிரந்தர உறுப்பினராவதற்கு சரியான தருணத்தில் அமெரிக்கா ஆதரவுக் கரம் நீட்டியுள்ளது. அமெரிக்க அதிபர் ஒபாமாவின் இந்த உதவியை இந்தியா பாராட்டுகிறது.இவ்வாறு நிருபமா ராவ் தெரிவித்தார்.
Leave a Reply