புதுடில்லி: ரிலையன்ஸ் இன்போகாம் தலைவர் அனில் அம்பானியிடம், சி.பி.ஐ., அதிகாரிகள் நேற்று விசாரணை நடத்தினர். இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக இந்த விசாரணை நடைபெற்றது.
சுவான் டெலிகாம் நிறுவனம், “2ஜி’ ஸ்பெக்ட்ரம் லைசென்சுக்கு விண்ணப்பிக்கும் முன்னர், அந்த நிறுவனத்தில், 9.9 சதவீத பங்குகளை அனில் அம்பானியின் ரிலையன்ஸ் இன்போகாம் நிறுவனம் கொண்டிருந்தது. டி.பி.ரியால்டி குரூப்பால் உருவாக்கப்பட்ட சுவான் நிறுவனத்தின் தலைவர் ஷாகித் உஸ்மான் பால்வா தற்போது, சி.பி.ஐ., காவலில் உள்ளார். சுவான் நிறுவனத்திற்கும் கலைஞர் “டிவி’க்கும் உள்ள நிதித் தொடர்புகள் குறித்தும் சி.பி.ஐ., விசாரித்ததாக கூறப்பட்டது. இந்நிலையில், ரிலையன்ஸ் இன்போகாம் நிறுவனத்தின் தலைவர் அனில் அம்பானி நேற்று, டில்லியில் உள்ள சி.பி.ஐ., தலைமை அலுவலகத்திற்கு வந்தார். அவரிடம் “2ஜி’ ஸ்பெக்ட்ரம் தொடர்பாக இரண்டு மணி நேரத்திற்கு மேலாக சி.பி.ஐ., அதிகாரிகள் விசாரணை நடத்தினர். சுவான் டெலிகாம் தொடர்பான சில ஆவணங்கள் குறித்து அனில் அம்பானியிடம் விளக்கம் கேட்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
அதேநேரத்தில், அம்பானி குரூப் நிறுவனங்கள் தரப்பில் நேற்று வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: அனில் அம்பானி வாரம் ஒரு முறை டில்லி செல்வார். அதேபோல், இந்த வாரம் டில்லி சென்ற போது, நேற்று சி.பி.ஐ., அதிகாரிகளைச் சந்தித்தார். 2001 முதல் 2010 வரை நடைபெற்ற தொலை தொடர்பு விவகாரங்கள் தொடர்பாக அவரிடம் விளக்கம் கேட்கப்பட்டது. சி.பி.ஐ., அலுவலகத்தில் ஆஜராக வேண்டும் என, அம்பானிக்கு சம்மன் எதுவும் அனுப்பப்படவில்லை. ரிலையன்ஸ் டெலிகாம் அல்லது ஆர்காம் அல்லது ரிலையன்ஸ் தொடர்பான வேறு எந்த நிறுவனங்களோ அல்லது அதனுடன் இணைந்த மற்ற நிறுவனங்களோ, ஸ்பெக்ட்ரம் லைசென்ஸ் வழங்கப்பட்ட 2008ம் ஆண்டு ஜனவரியில் சுவான் டெலிகாம் லிமிடெட் நிறுவனத்தில், எந்த விதமான பங்குகளையும் கொண்டிருக்கவில்லை. “2ஜி’ லைசென்சை சுவான் நிறுவனத்திற்கு வழங்கியதன் மூலம், அம்பானி குரூப் நிறுவனங்கள் எதுவும் பண ரீதியான சலுகைகளையோ அல்லது வேறு சலுகைகளையோ, நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ பெறவில்லை. மேலும், “2ஜி’ விவகாரம் தொடர்பான வேறு 13 லைசென்ஸ் பெற்ற நிறுவனங்களுடனும் எங்கள் குரூப் நிறுவனங்களுக்கு தொடர்பு இல்லை. இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Leave a Reply