சென்னைக்கு 240 டன் வெண்ணெய் சப்ளை ஆவின் ஒன்றியத்துக்கு ரூ.1.92 கோடி நஷ்டம்

சேலம்:சேலம், நாமக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில், ஆவின் வெண்ணெய்க்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. கடந்த மாதம் சென்னையில் உள்ள ஆவின் இணையத்துக்கு, 240 டன் வெண்ணெய் சப்ளை செய்ததால், சேலம் ஆவினுக்கு, 1.92 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில், சேலம் உட்பட, 17 ஆவின் ஒன்றியங்கள் உள்ளன. சேலம், விழுப்புரம், வேலூர், கிருஷ்ணகிரி, ஈரோடு, திருச்சி ஆகிய ஆறு ஆவின் ஒன்றியங்களில் இருந்து, அதிக அளவிலான பால், சென்னை இணையத்துக்கு அனுப்பப்படுகிறது. பால் பொருட்கள் உற்பத்தியிலும், இந்த ஆறு ஒன்றியங்கள் முன்னணியில் உள்ளன.சேலம் ஒன்றியத்துக்கு தினசரி பால் வரத்து, 3.40 லட்சம் லிட்டராக உள்ளது. சென்னை இணையத்துக்கு தேவையான பால் சப்ளை, பால் <பொருள் உற்பத்திக்கு போக மீதமுள்ள பால், உள்ளூர் தேவைக்காக, பாக்கெட்களில் அடைத்து விற்பனைக்கு அனுப்பப்படுகிறது.சேலம், ஆவினுக்கு சீரான பால்வரத்து இருக்கும் போது, நாள் ஒன்றுக்கு, 7 டன் வீதம் வெண்ணெய் தயாரிக்கப்படும். சேலம் ஒன்றியத்தில் மாதம் ஒன்றுக்கு அதிகபட்சம், 210 டன் வெண்ணெய் <தயார் செய்யப்படுகிறது. இலக்கை கடந்து வெண்ணெய் தயாரிப்பில், ஆவின் நிர்வாகம் தனி கவனம் செலுத்திய போதிலும், சேலம், நாமக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் ஆவின் வெண்ணெய்க்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.சேலம் ஆவின் மூலம் தயார் செய்யப்படும் பால்கோவா, வெண்ணெய், நெய், உள்ளிட்ட பால் பொருட்கள், விற்பனை செய்ய, 12 பாலகங்கள் அமைக்கப்பட்டுள்ளன. சமீபகாலமாக, ஆவின் பாலகங்களில் போதுமான அளவில் வெண்ணெய் கிடைப்பதில்லை. பெரும்பாலான நாளில், வெண்ணெய் இல்லையென, ஊழியர்கள் கை விரித்து விடுகின்றனர். சேலம் ஒன்றியத்தில், மாதத்துக்கு, 5 டன் வெண்ணெய் மட்டுமே விற்பனை செய்ய வேண்டும். மீதமுள்ள வெண்ணெயை மொத்தமாக சென்னை இணையத்துக்கு அனுப்ப வாய்மொழி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவுக்கு கட்டுப்பட்டு மாதந்தோறும், சேலம் ஆவினில் இருந்து, சென்னைக்கு கணிசமான அளவில் வெண்ணெய் அனுப்பப்படுவதால், ஆவின் வெண்ணெய்க்கு எப்போதும் கடும் கிராக்கியும், தட்டுப்பாடும் நிலவுகிறது. சேலம் ஆவினில் இருந்து, கடந்த ஜனவரி மாதத்தில், 240 டன் வெண்ணெய் சென்னை இணையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. நுகர்வோர் தேவை அதிகரித்துள்ள நிலையில், சென்னை இணையத்துக்கு ஒரு கிலோ வெண்ணெய், 120 ரூபாய்க்கு சப்ளை செய்யப்பட்டதால், 1.92 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.மாவட்ட ஆவின் தொழிலாளர் மற்றும் பணியாளர் சங்க செயலர் பார்த்தீபன் கூறியதாவது:வெளி மார்க்கெட்டில் ஆவின் வெண்ணெய் கிலோ, 200 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. அதே வெண்ணெய், சென்னை இணையத்துக்கு கிலோ 120 ரூபாய்க்கு குறைத்து விற்கப்படுகிறது. அதனால், சேலம் ஆவினுக்கு ஏற்படும் நஷ்டம் பணியாளர்களை தான் ஒட்டுமொத்தமாக பாதிக்கிறது. கடந்த ஜனவரி மாதம் மட்டும் 240 டன் வெண்ணெய் சென்னைக்கு அனுப்பி வைத்ததால், சேலம் ஆவினுக்கு, 1.92 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதே நிலை தொடர்ந்தால், ஆவின் நிறுவனம் எப்படி முன்னேறும், என்றார்.சேலம் ஆவின் விற்பனைப்பிரிவு உதவி பொது மேலாளர் ரமேஷ் கூறியதாவது:வெளி மார்க்கெட்டில் கிலோ வெண்ணெய், 200 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. அதே வெண்ணெய், சென்னை இணையத்துக்கு கிலோ 120 ரூபாய்க்கு மொத்தமாக சப்ளை செய்யப்படுகிறது, என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *