சர்வதேச கடல் எல்லை விஷயத்தில் மீனவர்களுக்கு கவனம் அதிகம் தேவை

posted in: அரசியல் | 0

புதுடில்லி : “”சர்வதேச கடல் எல்லையைத் தாண்டும் போது மீனவர்கள் அதிக கவனமும், பொறுப்பும் கொண்டிருக்க வேண்டும்.

இலங்கை கடல் பகுதிக்குள் சென்று, இந்திய மீனவர்கள் மீன் பிடிக்கும் போதுதான், அவர்கள் அந்நாட்டு கடற்படையினரால் கொடுமைபடுத்தப்படும் மற்றும் கைது செய்யப்படும் சம்பவங்கள் நிகழ்கின்றன,” என, வெளியுறவு அமைச்சர் கிருஷ்ணா கூறியுள்ளார்.

இலங்கை கடற்படையினரால் இந்திய மீனவர்கள் தாக்கப்படும் சம்பவம் தொடர்பாக, லோக்சபாவில் நேற்று அறிக்கை சமர்ப்பித்த வெளியுறவு அமைச்சர் கிருஷ்ணா கூறியதாவது: நமது மீனவர்களுக்கு எதிராக இலங்கை கடற்படையினர் பலத்தை பிரயோகப்படுத்துவதை நான் நியாயப்படுத்தவில்லை. இருந்தாலும், இலங்கைப் பகுதிக்கு சென்று மீன் பிடிக்காமல் நாமும் எச்சரிக்கை உணர்வோடு இருக்க வேண்டும். ஏனெனில், அந்தப் பகுதியில் தான் இலங்கை மீனவர்களும் மீன் பிடிக்கின்றனர். இந்தப் பிரச்னை மனிதாபிமான மற்றும் வாழ்வாதார ரீதியானவை என்பதால், மீன் பிடி ஏற்பாடுகள் தொடர்பாக, கடந்த 2008ம் ஆண்டில் இந்திய – இலங்கை அரசுகள் கூட்டாக அறிக்கை ஒன்றை வெளியிட்டன. அதன்படி, இரு நாட்டு மீனவர்களும் தங்களின் சர்வதேச கடல் எல்லையை தாண்டுவதில்லை என, முடிவு செய்யப்பட்டது.

இதன்பின், 2009 மற்றும் 2010ம் ஆண்டில், இந்திய மீனவர்களை இலங்கை கடற்படையினர் தாக்குவது குறைந்தது. ஆனால், இந்த ஆண்டில் நடந்த சம்பவங்கள் கவலை அளிப்பதாக, பீதியை ஏற்படுத்துவதாக உள்ளன. மீனவர்கள் தாக்கப்படும் பிரச்னை தொடர்பாக, வரும் மார்ச் மாதத்தில், கூட்டுப் பணிக்குழு ஒன்றை ஏற்படுத்த இந்தியாவும், இலங்கையும் தீர்மானித்துள்ளன. அதன் பிறகாவது பிரச்னை முடிவுக்கு வரும் என, நம்பப்படுகிறது.டிரிவேலி பல்கலைக் கழக மாணவர்கள் பிரச்னையை பொறுத்தமட்டில், அவர்களின் கால்களில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கருவிகளை நீக்குவது துவங்கியுள்ளது. அத்துடன் அந்த மாணவர்களை வேறு பல்கலைக்கழகங்களுக்கு மாற்ற ஏற்பாடு செய்வதாகவும் அமெரிக்க அரசு உறுதி அளித்துள்ளது.இவ்வாறு கிருஷ்ணா கூறினார்.

இதற்கிடையில், சர்வதேச கடல் எல்லையைத் தாண்டி, இந்திய பகுதிக்குள் மீன் பிடித்ததாக கைது செய்யப்பட்ட இலங்கை மீனவர்கள் 16 பேர் நேற்று அந்நாட்டு அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர். இந்த மீனவர்களின் சிறைவாசம் 2011 ஜனவரி 31ம் தேதியுடன் முடிவடைந்ததை அடுத்து, அவர்களும், அவர்களின் படகுகளும் இலங்கை கடற்படையிடம் ஒப்படைக்கப்பட்டது. இதற்கு முன், 94 இலங்கை மீனவர்களும், அவர்களின் படகுகளும் இலங்கை ராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டன.

இந்நிலையில், மீனவர்கள் பிரச்னை தொடர்பாக நேற்று நிருபர்களிடம் பேசிய இலங்கை அதிபர் ராஜபக்ஷே கூறியதாவது:மீனவர்கள் விவகாரத்தால், இந்தியா – இலங்கை இடையே பூசல் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுவது தவறானது. ஏழை மீனவர்கள், மீன்களை தேடி அலையும் போது, சர்வதேச கடல் எல்லையை தாண்டி விடுகின்றனர். மீனவர்கள் எல்லை தாண்டும் பிரச்னை சுமுகமான வகையில் தீர்க்கப்படும். விரைவில் அமைக்கப்பட உள்ள கூட்டுப் பணிக்குழு இந்தப் பிரச்னை குறித்து விவாதிக்கும்.மீனவர்கள் பிரச்னை புதிதாக உருவான பிரச்னை அல்ல. விடுதலைப் புலிகளுடன் போர் நடந்து கொண்டிருந்த போது, நம் நாட்டு மீனவர்கள் ஆழ்கடல் பகுதிக்குச் சென்று மீன்பிடிக்க முடியவில்லை. இப்போது அவர்கள் செல்கின்றனர். அதனால், இது புதிய பிரச்னை போல தோன்றுகிறது. இந்திய மீனவர்களை இலங்கை கடற்படையினர் சுடவில்லை. இதை தனிப்பட்ட முறையில் நான் அறிவேன்.இவ்வாறு ராஜபக்ஷே கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *