உள்நாட்டு கலவரம் வெடித்துள்ள லிபியாவில் 18 ஆயிரம் இந்தியர்கள் வசித்து வருகின்றனர். அவர்களை பத்திரமாக மீட்டு வர மத்திய அரசு தேவையான முயற்சிகளை மேற்கொண்டு உள்ளது.
லிபியாவில் 18,000 இந்தியர்கள் உள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் தலைநகர் டிரிபோலியிலும், அதன் புறநகர்ப் பகுதிகளிலும் வசித்து வருகின்றனர். டிரிபோலியில் தான் அதிக பட்ச இராணுவ அடக்குமறை உள்ளது. எனவே அங்குள்ள இந்தியர்கள் மீட்க உடனடி நடவடிக்கைத் தொடங்கப்படும் என்று அயலுறவு அமைச்சகம் அறிவித்துள்ளது.
கடல் வழியாகவும் மற்றும் விமானம் மூலமாகவும் இந்தியர்கள் வெளியேற்றப்படுவார்கள் என்று அயலுறவு அமைச்சகம் கூறியுள்ளது. ஸ்கோஷியா பிரின்ஸ் எனும் கப்பல் இதற்காக ஈடுபடுத்தப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. முதல் கட்டமாக பயணிகள் கப்பல் ஒன்றை லிபியாவுக்கு அனுப்பி வைத்து உள்ளனர். அந்த கப்பல் இப்போது எகிப்து சென்றடைந்து உள்ளது.
இன்னும் 2 அல்லது 3 நாளில் கப்பல் லிபியா சென்றடையும். இந்த கப்பலில் 1000 பேரை மட்டுமே எற்றி வர முடியும். எனவே மற்றவர்களை மீட்டு வர இந்திய போர் கப்பல்களை அனுப்ப திட்டமிட்டு உள்ளனர்.
இதற்கு தேவையான போர் கப்பல்களை தயாராக வைத்திருக்கும்படி இந்திய வெளியுறவு துறை கடற்படைக்கு உத்தரவிட்டு உள்ளது. விரைவில் போர் கப்பல்கள் லிபியாவுக்கு புறப்படும் என எதிர் பார்க்கப்படுகிறது.
லிபியாவில் இருந்த 3 ஆயிரம் சீனர்களை அருகில் உள்ள துனிசியா நாட்டுக்கு தரை மார்க்கமாக வரவழைத்து அங்கிருந்து விமானம் மூலம் சீனா அழைத்து வர ஏற்பாடு செய்துள்ளனர். அதே போல இந்தியர்களையும் துனிசியா நாட்டுக்கு வரவழைத்து அழைத்து வரலாமா? என்ற யோசனையும் உள்ளது.
லிபியாவிலுள்ள இந்தியர்களின் நிலை குறித்து பேசிய அயலுறவு அமைச்சர் கிருஷ்ணா கூறுகையில்,“லிபியாவிலுள்ள இந்தியர்கள் அனைவரும் பாதுகாப்பாக உள்ளனர். அவர்களில் நாட்டை விட்டு வெளியேற நினைக்கும் அனைவரையும் பாதுகாப்பாக அழைத்து வருவோம். அதற்காக எந்தக் கட்டணமும் அவர்களிடம் வசூலிக்கப்படமாட்டாது” என்றார்.
Leave a Reply