எகிப்தில் அதிபர் முபாரக்கின் சர்வாதிகார ஆட்சிக்கு எதிராக மக்கள் புரட்சி நடந்தது. இதை தொடர்ந்து அங்கு ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. தற்போது இதே பாணியில் லிபியா, பக்ரைன், ஏமன் உள்ளிட்ட நாடுகளிலும் போராட்டத்தில் மக்கள் குதித்துள்ளனர்.
தற்போது இதே நிலை சீனாவிலும் ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சீனாவில் நடைபெறும் கம்யூனிச ஆட்சிக்கு எதிராக பொது மக்களும் இளைஞர்களும் போராடினார்கள். அப்போது அப்போராட்டம் ராணுவத்தின் இரும்பு கரம் கொண்டு அடக்கப்பட்டது.
எகிப்து, துனிசியா, லிபியா ஆகிய நாடுகளில் ஏற்பட்டுள்ள மக்கள் போராட்டத்தை தொடர்ந்து இங்கும் புரட்சி துளிர்க்கிறது. எகிப்தில் நடைபெற்ற போராட்டத்தின்போது அதிபர் முபாரக்குக்கு எதிராக இன்டர்நெட், எஸ்.எம்.எஸ். மூலம் செய்திகளை அனுப்பி மக்கள் ஒன்று திரண்டனர்.
அந்த போராட்டத்தை அந்நாட்டு அரசுகளால் அடக்க முடியவில்லை. அதே போன்ற பாணியை சீனாவில் நடைபெறும் ஆட்சிக்கு எதிரான அதிருப்தியாளர்கள் மறைமுகமாக பயன்படுத்த தொடங்கியுள்ளனர்.
பெய்ஜிங், ஷாங்காய் உள்ளிட்ட 27 நகரங்களின் இன்டர்நெட் மையங்களில் இளைஞர்கள் திரண்டு புரட்சிக்கான தகவல்களை அனுப்பினர். இதனால் ஷாங்காய்யில் உள்ள மக்கள் சதுக்கம், பெய்ஜிங்கில் உள்ள வாங் பு ஜிங் தெருவிலும் சிலர் திரண்டனர்.
தகவல் அறிந்தும் 100 வாகனங்களில் போலீசார் கொண்டு வரப்பட்டு குவிக்கப்பட்டனர். அவர்கள் போராட்டத்தில் ஈடுபட வந்தவர்களை அடித்து விரட்டினர். மேலும் தகவல் அனுப்ப இன்டர்நெட் மையங்களில் கூடியிருந்தவர்களையும் அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.
மேலும் ஷாங்காய் மக்கள் சதுக்கத்தில் கூடியிருந்த 7 பேரை கைது செய்தனர். புரட்சி அபாயத்தை தொடர்ந்து சீன அரசு “3 ஜி” அலைவரிசையும், ஜி.பி.ஆர்.எஸ். சேவையும் முடக்கி வைத்தது. முக்கிய நகரங்களில் சீருடை அணியாத போலீசார் ரோந்து சுற்றி வருகின்றனர்.
செய்திகள் வெளியாகாத வகையில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நிருபர்களை கெடுபிடி செய்தனர். வெளிநாட்டு நிருபர்கள் சிலர் தாக்கப்பட்டனர். அவர்களில் 3 பேருக்கு காயம் ஏற்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.
Leave a Reply