மும்பை:நாட்டின் பங்கு வர்த்தகம், செவ்வாய்கிழமை அன்று, மிகவும் சிறப்பாக இருந்தது. காலையில் பங்கு வர்த்தகம் துவங்கியதிலிருந்தே, பல துறைகளை சேர்ந்த நிறுவனப் பங்குகள், அதிக விலைக்கு கைமாறின.
இந்நிலை, வர்த்தகம் முடியும் வரை நீடித்தது. இதுநாள் வரை கரடியின் பிடியில் இருந்த பங்குச் சந்தையில், தற்போது காளை தலைகாட்டத் துவங்கியுள்ளது.மத்திய பட்ஜெட்டில், உற்பத்தி வரி அதிகரிக்கப்படவில்லை. அடிப்படை கட்டமைப்பு துறைகளுக்கு ஊக்கமளிக்கும் வகையில், அறிவிப்புகள் இருந்ததையடுத்தும், பொதுத்துறை வங்கிகளின் முதலீட்டை அதிகரித்து கொள்ள 6,000 கோடி ரூபாய் வழங்கப்படும் என்ற அறிவிப்பாலும், மோட்டார் வாகனங்கள், வங்கி, அடிப்படை கட்டமைப்பு, நுகர்வோர் சாதனங்கள் உள்ளிட்ட பல துறைகளை சேர்ந்த நிறுவனப் பங்குகளின் விலை அதிகரித்திருந்தது.அன்னிய நிதி நிறுவனங்கள், நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும், இந்திய பங்குச் சந்தைகளில் முதலீடு செய்ய துவங்கியுள்ளன. நிறுவனங்களுக்கான கூடுதல் வரி, 7.5 சதவீதத்திலிருந்து 5 சதவீதமாக குறைக்கப்படுகிறது என்ற அறிவிப்பும், பங்கு வர்த்தகத்திற்கு வலுச்சேர்த்தது. உலகின் பல்வேறு நாடுகளிலும், பங்கு வர்த்தகம் சூடுபிடித்து காணப்பட்டது.இதுபோன்ற பல்வேறு சாதகமான அம்சங்களால், மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண், வர்த்தகம் முடியும் போது, 623.10 புள்ளிகள் அதிகரித்து, 18,446.50 புள்ளிகளில் நிலை பெற்றது. வர்த்தகத்தின் இடையே அதிகபட்சமாக 18,478.68 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக 18,964.39 புள்ளிகள் வரையிலும் சென்றது. வெள்ளி, திங்கள் ஆகிய இரண்டு வர்த்தக தினங்களில், இப்பங்குச் சந்தையின் குறியீட்டு எண், 191 புள்ளிகள் அதிகரித்திருந்தது. இந்நிலையில், நீண்ட நாள்களுக்கு பிறகு, ‘சென்செக்ஸ்’ கணக்கிட உதவும் 30 நிறுவனப் பங்குகளின் விலையும் அதிகரித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.தேசிய பங்குச் சந்தையிலும் வர்த்தகம் நன்கு இருந்தது. இப்பங்குச் சந்தையின் குறியீட்டு எண் ‘நிப்டி’ 189.05 புள்ளிகள் உயர்ந்து, 5,522.30 புள்ளிகளில் நிலை கொண்டது. வர்த்தகத்தின் இடையே அதிகபட்சமாக 5,533.05 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக 5,373.55 புள்ளிகள் வரையிலும் சென்றது.
Leave a Reply