இலங்கை அரசுக்கு தென்கொரியா பெரும் எண்ணிக்கையிலான ஆயுதங்களையும் கற்றல் உபகரணங்களையும் நேற்று வழங்கியது. இவற்றை ஏற்றிய இரண்டு கப்பல்கள் தென் கொரியாவில் இருந்து நேற்றுக்காலை 8 மணிக்கு கொழும்புத் துறைமுகத்தை வந்தடைந்தன.
ஒரு கப்பலில் பெரும் எண்ணிக்கையிலான ஆயுதங்களும், மற்றையதில் 50 கணினிகள் உள்ளிட்ட கற்றல் உபகரணங்களும் அடங்கியிருந்தன.
இலங்கைக் கடற்படையினர் 21 துப்பாக்கி வேட்டுக்களைத் தீர்த்து மரியாதை செலுத்தி இந்தக் கப்பல்களை வரவேற்றனர்.
இலங்கைக்கான தென்கொரியத் தூதுவர் மற்றும் கொழும்பில் உள்ள தென்கொரிய மக்கள் ஆகியோரும் கொழும்பு துறைமுகத்திற்குச் சென்று இந்தக் கப்பல்களை வரவேற்றனர்.
இந்தப் பொருள்கள் அனைத்தும் தென்கொரியாவால் இலங்கைக்கு நட்புறவு அடிப்படையில் அன்பளிப்பாக வழங்கப்பட்டன என்று தெரிவிக்கப்படுகிறது.
இந்தக் கப்பல்கள் மூன்று நாட்களுக்கு கொழும்புத் துறைமுகத்தில் தரித்து நிற்கும். 18 ஆம் திகதி இவை இலங்கையை விட்டுப் புறப்படும் என தெரிவிக்கப்படுகிறது.
இக்கப்பலில் வந்துள்ள தென்கொரிய கடற்படையினருக்கும், இலங்கைக் கடற்படையினருக்கும் இடையில் கப்பல் தரித்து நிற்கும் 3 நாட்களும் நட்புறவு விளையாட்டுப் போட்டி ஒன்றும் இடம்பெறவுள்ளது.
இக்கப்பலில் வந்த உயரதிகாரிகள், பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ மற்றும் பொலிஸ் மா அதிபர் ஆகியோரையும் சந்தித்துப் பேசுவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது
Leave a Reply