உலகில் ஆயுதக் குழுக்கள் மற்றும் ராணுவங்களிடையே ஏற்படும் மோதல்களால், 2 கோடியே 80 லட்சம் குழந்தைகளின் கல்வி தடைபட்டுள்ளது.
யுனெஸ்கோ அமைப்பு வெளியிட்ட அறிக்கை ஒன்று இந்த அதிர்ச்சியான தகவலை தெரிவிக்கிறது. மேலும் இதுபோன்று பாதிக்கப்படும் அந்த குழந்தைகள் பாலியல் வன்முறை போன்ற கொடுமையான சித்திரவதைகளுக்கு இலக்காகின்றன என்றும் அந்த அறிக்கை கூறுகிறது.
அமைதியின்மையும், ஆயுத மோதலும் அதிகமாக காணப்படும் ஏழை நாடுகளில்தான் இத்தகைய குழந்தைகள் அதிகமாக உள்ளனர். இதுபோன்ற வன்முறைகள் மனித இனத்தின் முன்னேற்றத்தை மிகவும் அடிப்படை நிலையில் பாதிக்கின்றன. மேலும் இத்தகைய பாதிப்புகளுக்கு எளிதில் குழந்தைகளே இலக்காகின்றனர்.
கடந்த 1999 முதல் 2008 வரையிலான காலகட்டத்தில் மொத்தம் 35 நாடுகள் ஆயுத மோதல்களால் பாதிக்கப்பட்டுள்ளன. அவற்றில் 15 நாடுகள் மத்திய மற்றும் வடஆப்ரிக்க நாடுகள். இதுபோன்ற மோதல்களில் மிக எளிதாக இலக்காவது வகுப்பறைகள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள்தான். ஆப்கானிஸ்தானில் கடந்த 2008 ம் 347 பள்ளிகளின் மீதும், 2009 ம் ஆண்டில் 613 பள்ளிகளின் மீதும் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன. வடமேற்கு பாகிஸ்தானிலும் பள்ளிகளின்மீது தாக்குதல் நடத்தப்படுகின்றன.
மேலும் ஆயுதமோதல் நடக்கும் நாடுகளில் பெண் குழந்தைகள் பள்ளிகளுக்கு செல்வது மிகவும் சவாலான ஒரு விஷயம். ஏனெனில் அவர்கள் பெரியளவிலான பாலியல் வன்முறைக்கு ஆளாகிறார்கள். பெண் குழந்தைகள் மீதான பாலியல் வன்முறையில் சாட், காங்கோ குடியரசு, லைபீரியா, ருவாண்டா மற்றும் சியராலியோன் போன்ற ஆப்ரிக்க நாடுகள் முக்கியமானவை. மேலும் இதுபோன்ற நாடுகளில் மனிதாபிமான உதவிகள் முறையாக கிடைப்பதிலும், தேசிய பாதுகாப்பை உறுதிசெய்யும் விஷயத்திலும் அலட்சியம் நிலவுகிறது.
இதுபோன்ற ஏராளமான பேரதிர்ச்சி தரும் விஷயங்களை அந்த யுனெஸ்கோ அறிக்கை தெரிவிக்கிறது.
Leave a Reply