தமிழகத்தில், தி.மு.க.,வுடனான கூட்டணியில், காங்கிரசுக்கு ஒதுக்கப்படும் இடங்கள் எவ்வளவு என்பது குறித்து, திரிணமுல் காங்கிரஸ் மிகவும் கவனமாக கூர்ந்து கவனித்து வருகிறது.
மேற்கு வங்கத்தில், 90 இடங்கள் வரை காங்கிரஸ் கேட்டு வருகிறது.ஆனால், திரிணமுல் காங்கிரஸ் தலைவர் மம்தாவோ, 40 இடங்களுக்கு மேல் தர தயாராக இல்லை. இந்த சூழ்நிலையில், தி.மு.க., மிகவும் குறைந்த இடங்களை அளித்தால், அது, மேற்கு வங்கத்தில் எதிரொலிக்கும் என, காங்கிரஸ் கருதுகிறது.தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுவிட்ட நிலையிலும் கூட, தமிழகத்திலும், மேற்கு வங்கத்திலும் தனக்கான தொகுதிகளின் எண்ணிக்கை எத்தனை என்பதை இறுதிசெய்ய முடியாமல் தவித்து வருகிறது. எக்காரணம் கொண்டும் காங்கிரசுக்கு அதிக இடங்களை அளித்துவிடக் கூடாது என, தி.மு.க.,வும், திரிணமுல் காங்கிரசும் கவனமாக காய் நகர்த்தி வருகின்றன. இதனால், காங்கிரஸ் சிக்கலில் இருக்கிறது.
தி.மு.க.,வுடன் மூன்று கட்ட பேச்சுவார்த்தைகள் நடத்தியும், 53லிருந்து 57 தொகுதிகள் வரை கிடைக்கும் என்ற நிலை பேசப்படுகிறது. கூட்டணி ஆட்சி என்று இப்போது பேசுவதில் தி.மு.க., அக்கறைப்படவில்லை.அதோடு, தமிழகத்தில் பங்கு கேட்டால், புதுச்சேரியிலும் ஆட்சியில் பங்கு தர வேண்டும் என, தி.மு.க,, தரப்பில் கூறப்பட்டதாக தெரிகிறது.மேலிட பொறுப்பாளர், சென்னையில் பேசிவிட்டு டில்லி திரும்பியுள்ளார். ஆனாலும், இன்னும் இறுதி முடிவு எடுக்கமுடியவில்லை. இந்நிலையில், தி.மு.க.,வுக்கு தாங்கள் மிகவும் அடிபணிந்து போய்விட்டதாகவும், தாங்கள் கேட்ட எண்ணிக்கையிலிருந்து மிகவும் குறைத்து தர பார்க்கிறது எனவும், தமிழக காங்கிரசின் சிதம்பரம், வாசன் உள்ளிட்ட முக்கிய தரப்பினர் கூட கடும் அதிருப்தியில் உள்ளதாக கூறப்படுகிறது.
இந்த சூழ்நிலையில், தமிழகத்தில் தி.மு.க.,வுடனான தொகுதிப் பங்கீட்டின் ஒவ்வொரு கட்டத்தையும் அங்குலம் அங்குலமாக திரிணமுல் காங்கிரஸ் கூர்ந்து கவனித்து வருகிறது. மேற்கு வங்கத்தில், 90 தொகுதிகள் வரை தங்களுக்கு வேண்டுமென காங்கிரஸ், மம்தாவிடம் கேட்டு வருகிறது.ஆனால், அவரோ, 40 தொகுதிகளுக்கு மேல் வழங்கத் தயாராகவே இல்லை. ஆனாலும் அங்கும் பேச்சுவார்த்தை இழுபறியில் போய்க் கொண்டிருக்கிறது. இந்நிலையில், தி.மு.க.,விடம் குறைந்த தொகுதிகளை பெற்றால், அது, மம்தாவுடனான பேரத்தில் கடுமையான அடி விழும் என்ற அச்சம் காங்கிரசுக்கு வந்துள்ளது.
தற்போதைய சூழ்நிலையில், தி.மு.க.,வின் உறுதிக்கு முன்னால், காங்கிரஸ் பெரிய எண்ணிக்கையை பெற்று விட முடியுமா என தெரியவில்லை. இதனால், மேற்கு வங்கத்திலும் தங்களால் மம்தாவிடம் நிறைய இடங்களை பெற முடியாமல் போய்விடுமோ என்ற எண்ணம், காங்கிரசுக்கு வந்திருப்பதாகக் கூறப்படுகிறது.- நமது டில்லி நிருபர் –
Leave a Reply