சென்னை : துணை கலெக்டர், டி.எஸ்.பி., உள்ளிட்ட பணியிடங்களுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு நியமிக்கப்பட்ட 83 பேரின் நியமனங்களை, சென்னை ஐகோர்ட் ரத்து செய்துள்ளது.
தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.,) கடந்த 2000ம் ஆண்டு டிசம்பர் 27ம் தேதி குரூப்-1 பணியிடங்களுக்கான அறிவிப்பாணையை வெளியிட்டது. துணை கலெக்டர், டி.எஸ்.பி., வணிகவரி அதிகாரி, கூட்டுறவு சங்கங்களின் துணை பதிவாளர் உள்ளிட்ட பணியிடங்களுக்காக இந்த அறிவிப்பாணை வெளியிடப்பட்டது.
மொத்தம் 91 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டு, நியமிக்கப்பட்டனர். இதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. தேர்வு எழுதுபவர்களுக்கு விதிக்கப்பட்ட நிபந்தனைகளை மீறி கலர் பேனா, ஸ்கெட்ச் பேனா, பென்சில் பயன்படுத்தியது, அறிவிப்பாணையில் கூறியபடி விடைத்தாள் திருத்தத்தில் “ஸ்கேலிங்’ முறையை பின்பற்றாதது என, மனுதாரர்கள் தரப்பில் குற்றம் சாட்டப்பட்டது.
இம்மனுக்களை விசாரித்த ஐகோர்ட், நிபந்தனைகளை மீறியதற்காக விடைத்தாள் செல்லாது என கூற முடியாது என்றும் “ஸ்கேலிங்’ முறையை பின்பற்றாததால் தேர்வு பாதிக்கப்படாது என்றும் உத்தரவிட்டது. 2009ம் ஆண்டு ஜூலை மாதம் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதை எதிர்த்து ஐகோர்ட்டில் நடராஜன், மாதவன் ஆகியோர் அப்பீல் மனுக்கள் தாக்கல் செய்தனர். கடந்த 2000-01ம் ஆண்டுக்கான குரூப்-1 தேர்வு மூலம் நியமிக்கப்பட்டதை ரத்து செய்ய வேண்டும் என்றும், தேர்வில் நடந்த முறைகேடுகள், மோசடிகளை சி.பி.ஐ., விசாரிக்க வேண்டும் என்றும் மனுக்களில் கோரப்பட்டது.
அப்பீல் மனுக்களை விசாரித்த நீதிபதிகள் தர்மாராவ், அரிபரந்தாமன் அடங்கிய “டிவிஷன் பெஞ்ச்’ பிறப்பித்த உத்தரவு: குரூப்-1 தேர்வு மூலம் நியமிக்கப்பட்டவர்களுக்கு வழக்கு பற்றி தெரிவதற்காக, அவர்களின் பெயரை குறிப்பிட்டு ஆங்கிலப் பத்திரிகையில் விளம்பரம் வெளியிடப்பட்டது. அவர்கள் யாரும் நேரிலோ, வக்கீல் மூலமாகவோ ஆஜராகவில்லை. குரூப்-1 பணிகளுக்கான தேர்வு நடைமுறை வெளிப்படையாக இருந்திருக்க வேண்டும்.
தேர்வில் கலந்து கொள்பவர்களுக்கு விதிக்கப்பட்ட நிபந்தனைகளை மீறியவர்களின் விடைத்தாளை, டி.என்.பி.எஸ்.சி., நிராகரித்திருக்க வேண்டும். நிபந்தனைகளை மீறியவர்களின் விடைத்தாள்களை எப்படி அனுமதித்து, திருத்தினர் என்பதற்கு டி.என்.பி.எஸ்.சி., தரப்பில் விளக்கம் அளிக்கவில்லை. எனவே, தேர்வு சரியாக நடக்கவில்லை என்கிற முடிவுக்கு தான் எங்களால் வர முடிந்தது.
தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள், பல ஆண்டுகளாக பணியாற்றி வருகின்றனர் என்பது எங்களுக்கு தெரியும். அதற்காக சட்டவிரோதமான, முறையற்ற நியமனங்கள் தொடர வேண்டும் என்பது அர்த்தமல்ல. சட்டவிரோத நியமிக்கப்பட்டவர்கள், உரிமை கோர முடியாது. முறைகேடுகளில் ஈடுபட்டதற்காகவும், விதிமுறைகளை மீறியதற்காகவும் தான் இந்த தேர்வை ரத்து செய்கிறோம்.
எனவே, எஸ்.விசாகன், சி.சியாமளாதேவி, ஆர்.பாண்டியராஜன், கே.கிங்ஸ்டின், கே.பிரபாகர், டி.பத்மாவதி, எம்.ஜெயராமன், கே.வரதராஜன் ஆகிய எட்டு பேர் தவிர 83 பேரது தேர்வு மற்றும் நியமனம் ரத்து செய்யப்படுகிறது. முறைகேடுகள், விதிமுறைகளை மீறியதற்காக இந்த 83 பேரது நியமனம் ரத்து செய்யப்படுகிறது.
விதிமுறைகளை மீறியவர்களின் விடைத்தாளை ஒதுக்கி வைத்திருந்தால், தங்களுக்கு நியமனம் கிடைத்திருக்கும் என மனுதாரர்கள் நிரூபித்துள்ளனர். எனவே, நிபந்தனைகளை மீறாதவர்களின் விடைத்தாளை மட்டும் மீண்டும் மதிப்பீடு செய்து, புதிய தகுதி பட்டியலை தயாரித்து, நியமனம் செய்ய வேண்டும். விடைத்தாளை மறுமதிப்பீடு செய்து, மெரிட் அடிப்படையில் மனுதாரர்களை நியமிக்க வேண்டும். ஆறு வாரங்களுக்குள் இந்தப் பணிகளை முடிக்க வேண்டும். இவ்வாறு “டிவிஷன் பெஞ்ச்’ உத்தரவிட்டுள்ளது.
Leave a Reply