சென்னை : “ஹசன் அலி கறுப்பு பண புகாரில் எனக்கு தொடர்பு இருப்பதாக வெளியான செய்தி தவறானது’ என்று குறிப்பிட்டு, அ.தி.மு.க., பொதுச் செயலர் ஜெயலலிதா, வக்கீல் மனோஜ்பாண்டியன் எம்.பி., மூலம், “மிட்டே’ ஆங்கிலப் பத்திரிகை மற்றும் முரசொலி, கலைஞர் “டிவி’க்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
ஜெயலலிதா சார்பில் அனுப்பப்பட்டுள்ள வக்கீல் நோட்டீசில் கூறியிருப்பதாவது: ஹசன் அலியின் பல்லாயிரம் கோடி வரி ஏய்ப்பில், தென் மாநில பெண் முதல்வர் சம்பந்தப்பட்டுள்ளார் என, “மிட்டே’ பத்திரிகை செய்தியாக வெளியிட்டுள்ளது.இதை முரசொலி பத்திரிகை, “சுவிஸ் வங்கியில் தொழிலதிபர் ஹசன் அலி கான் பதுக்கி வைத்துள்ள 35 ஆயிரம் கோடி ரூபாய் கறுப்பு பணம் ஜெயலலிதாவுக்கு சொந்தமானது’ என, செய்தி வெளியிட்டுள்ளது. கலைஞர் “டிவி’யிலும் இச்செய்தி ஒளிபரப்பப்பட்டுள்ளது. ஜெயலலிதாவுக்கும், ஹசன் அலிக்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. திட்டமிட்டு காழ்ப்புணர்ச்சியோடு ஜெயலலிதா பெயரை இதில் இணைத்து அவதூறு பரப்பப்பட்டுள்ளது.
வெளிநாட்டு வங்கிகளில் பணம் பதுக்கி வைத்திருப்பவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என, ஜெயலலிதா வலியுறுத்தி வருகிறார். அப்படிப்பட்டவர் இச்செய்தி மூலம் களங்கப்படுத்தப்பட்டுள்ளார். இச்செய்தியை வெளியிட்டமைக்காக வருத்தம் தெரிவிக்க வேண்டும். இல்லையென்றால், சிவில் மற்றும் கிரிமினல் வழக்கு தொடரப்படும். இவ்வாறு நோட்டீசில் கூறப்பட்டுள்ளது.
Leave a Reply