உங்களுக்கு 60, எங்களுக்கு 234: மம்தாவின் அதிரடியால் மே.வங்க காங்., கலக்கம்

posted in: அரசியல் | 0

மேற்கு வங்கத்தில், திரிணமுல் காங்கிரஸ் தலைவர் மம்தாவின் அதிரடியான அரசியல் நடவடிக்கைகளால், அம்மாநில காங்., கட்சியினர் பெரும் கலக்கம் அடைந்துள்ளனர்.


காங்கிரசுக்கு மிக குறைந்த தொகுதிகளை மட்டுமே கொடுக்க, அவர் முன்வந்துள்ளார். மேலும், தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையின்போது, நிபந்தனை எதுவும் விதிக்க கூடாது என்றும், காங்கிரஸ் மேலிடத்திடம் கண்டிப்பாக வலியுறுத்தியுள்ளார்.

மேற்கு வங்க மாநிலம், கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக, இடதுசாரி கட்சிகளின் கோட்டையாக விளங்கி வருகிறது. இந்த கோட்டையை தகர்த்து விட வேண்டும் என்ற நோக்கத்துடன், மம்தா அரசியல் காய் நகர்த்தி வருகிறார். உள்ளாட்சி தேர்தல்களிலும், கடந்த லோக்சபா தேர்தலிலும் அவரது கட்சிக்கு கிடைத்த கணிசமான வெற்றி, அவருக்கு பெரும் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. அந்த நம்பிக்கையுடன், தற்போது சட்டசபை தேர்தல் களத்தை சந்திக்க வந்துள்ளார். காங்., கட்சியுடன் கூட்டணி அமைத்து, தேர்தலை சந்திக்கிறார். காங்., மேலிடமும், தங்களுக்கு தேசிய அளவில் பெரும் தொல்லை கொடுத்து வரும், இடதுசாரி கட்சிகளுக்கு, பாடம் கற்பிக்க, இந்த வாய்ப்பை நன்றாக பயன்படுத்திக் கொள்ள முடிவு செய்துள்ளது. இரு கட்சிகளுக்கும் இடையே, தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை துவங்கி விட்டது.

மேற்கு வங்க மாநில காங்., தலைவர் மனாஸ் புனியா, “மொத்தம் உள்ள 294 தொகுதிகளில், எங்கள் கட்சிக்கு 98 தொகுதிகளை ஒதுக்க வேண்டும்’என, மீடியாக்களுக்கு பேட்டி கொடுத்தது, மம்தாவுக்கு கடும் எரிச்சலை ஏற்படுத்தியுள்ளது. நிலைமை விபரீதம் ஆவதை உணர்ந்த காங்., மேலிடம், “தொகுதி பங்கீடு தொடர்பான பிரச்னைகளை எல்லாம் நாங்கள் பார்த்துக் கொள்கிறோம். நீங்கள் அதில் தலையிட வேண்டாம்’என, கறாராக மனாஸ் புனியாவிடம் கூறி விட்டது.

யாருக்கு எத்தனை சீட்?: கூட்டணி அரசாக இல்லாமல், தனி பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று, மேற்கு வங்கத்தின் முதல்வராக வேண்டும் என்பது தான், மம்தாவின் விருப்பம். அதற்கு வசதியாக, அதிகமான தொகுதிகளில் திரிணமுல் காங்., வேட்பாளர்களை நிறுத்த, மம்தா முடிவு செய்துள்ளார். ஆனால், மேற்கு வங்க மாநில காங்., தலைவர்களின் கணக்கு வேறு மாதிரியாக உள்ளது. குறைந்தது நூறு தொகுதிகளிலாவது காங்., போட்டியிட வேண்டும் என, அவர்கள் விரும்புகின்றனர். மம்தா இதை ஏற்றுக் கொள்ளவில்லை. மொத்தம் உள்ள 294 தொகுதிகளில், 234 தொகுதிகளில் திரிணமுல் காங்., போட்டியிடும் என்றும், மீதமுள்ள 60 தொகுதிகளை காங்கிரசுக்கு ஒதுக்கலாம் என்றும் அவர் திட்டமிட்டுள்ளார். மம்தாவின் இந்த அதிரடி அரசியல் கணக்கு, மேற்கு வங்க மாநில காங்., தலைவர்களுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும், தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தையின்போது, காங்., சார்பில் எந்த நிபந்தனையும் விதிக்க கூடாது என்பது மம்தாவின் அடுத்த அதிரடி நிபந்தனை. இதற்கும் காங்., மேலிடமும் ஒப்புக் கொண்டு விட்டது. ஆரம்ப கட்டத்திலேயே, மேற்கு வங்க காங்., தலைவர்கள் ஏட்டிக்கு போட்டியாக பேசி வருவதால், அவர்களுடன் பேச்சுவார்த்தையை தொடர, மம்தா விரும்பவில்லை. மேலிட தலைவர்களுடன் மட்டுமே இதுகுறித்து அவர் பேச முடிவு செய்துள்ளார்.

கசப்பான அனுபவம்: தொகுதி பங்கீடு குறித்த விஷயத்தில், காங்., கட்சியுடன் இந்தளவுக்கு கண்டிப்புடன் மம்தா நடந்து கொள்வதற்கு என்ன காரணம் என்பது குறித்து, திரிணமுல் காங்., வட்டாரங்கள் கூறியதாவது: சிலிகுரியில் நடந்த உள்ளாட்சி தேர்தலில் திரிணமுல் – காங்., கூட்டணி அமைத்து போட்டியிட்டன. தேர்தல் முடிந்தவுடன், திடீரென மார்க்சிஸ்ட் கட்சியின் ஆதரவை பெற்று, உள்ளாட்சி அமைப்பில், காங்., அதிகாரத்தில் அமர்ந்து விட்டது. கூட்டணி அமைத்து போட்டியிட்ட திரிணமுல்லை, காங்கி., கைவிட்டு விட்டது. இந்த கசப்பான அனுபவத்தை மம்தா மறக்கவில்லை. அதனால், தான் தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க வேண்டும் என்பதில் மம்தா உறுதியாக உள்ளார். இவ்வாறு திரிணமுல் காங்., வட்டாரங்கள் கூறுகின்றன.

“கூட்டணியில் இதெல்லாம் சகஜம்’: மேற்கு வங்க மாநிலத்துக்கான காங்., மேலிட பொறுப்பாளர் ஷகில் அகமது கூறியதாவது: தேர்தலில் கூட்டணி அமைத்து போட்டியிடும்போது, கட்சிகளுக்கும் கருத்து வேறுபாடு ஏற்படுவது இயல்பானது தான். மேற்கு வங்கத்தை பொறுத்தவரை, தொகுதி பங்கீடு விஷயத்தில், மம்தாவுடன், காங்கிரசுக்கு எந்த பிரச்னையும் இல்லை. மேற்கு வங்கத்தைப் பற்றி, மற்றவர்களைவிட, மம்தாவுக்கு நன்றாக தெரியும். இடதுசாரி கட்சிகளின் ஆட்சியை அகற்ற வேண்டும் என்பது தான், எங்கள் நோக்கம். அதற்கு தொகுதி பங்கீடு விவகாரம் ஒரு தடையாக இருக்காது. இவ்வாறு ஷகீல் அகமது கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *