வாஷிங்டன் : “வரும் 2020ம் ஆண்டில் இந்தியாவில் கடும் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படலாம்’ என, அமெரிக்க வெளியுறவு அமைச்சக உயரதிகாரி ராபர்ட் பிளேக் கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் கூறியதாவது: வரும் 2025ம் ஆண்டில், உலக நாடுகளில் மூன்றில் இரண்டு பங்கு நாடுகள் தண்ணீர் பற்றாக்குறையை சந்திக்கலாம். அதாவது கிடைக்கும் தண்ணீரின் அளவு, தேவையை விட குறைவாக இருக்கும். குறிப்பாக ஆசிய நாடுகளில் தண்ணீர் பற்றாக்குறை அதிகளவில் இருக்கும்.
அதுவும் 2020ம் ஆண்டில் இந்தியாவில் கடும் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும். இந்த தண்ணீர் பற்றாக்குறையால் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியிலும் பாதிப்பு ஏற்படும். திபெத்திய பீடபூமியில் உள்ள பனிக்கட்டிகள் உருகுவதால், ஆசியாவில் 150 கோடி மக்களுக்கு தண்ணீர் கிடைக்கிறது. சிந்து, கங்கை, பிரம்மபுத்திரா உட்பட ஒன்பது நதிகளுக்கு இதன் மூலம் தண்ணீர் வருகிறது. அந்த தண்ணீரை ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், நேபாளம் மற்றும் வங்கதேசத்தை சேர்ந்த ஏராளமான நகரங்கள் மற்றும் கிராமங்களின் மக்கள் பயன்படுத்தி பலனடைகின்றனர்.
பனிக்கட்டிகள் சிறியவையாகும் போது, கிடைக்கும் தண்ணீரின் அளவும் குறைந்து விடும். குறிப்பாக இதர நீர் ஆதாயங்கள் குறைவாக கிடைக்கும் வறட்சியான காலக்கட்டத்தில், நதிகளில் நீரோட்டம் குறைந்து பாதிப்பை ஏற்படுத்தும். காலநிலை மாற்றங்களாலும், பனிக்கட்டிகள் விரைவில் உருகி பாதிப்பை ஏற்படுத்தலாம். இவ்வாறு ராபர்ட் பிளேக் கூறினார்.
Leave a Reply