கேபி’யை இந்தியாவிடம்ஒப்படைக்க ரணில் யோசனை

posted in: உலகம் | 0

கொழும்பு:”விடுதலைப் புலிகள் அமைப்பின் மூத்த தலைவர்களில் ஒருவரான கே.பி.,யை, இந்திய அரசிடம் ஒப்படைக்க வேண்டும்’ என, இலங்கை எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கே கூறியுள்ளார்.

மேலும், தமிழகத்தில் விடுதலைப் புலிகள் பயிற்சி மையம் செயல்படுவதாக, இலங்கை பிரதமர் கூறியதையும் அவர் மறுத்துள்ளார்.
இலங்கை பிரதமர் ஜெயரத்னே, நேற்று முன்தினம் பேசுகையில், “தமிழகத்தில் விடுதலைப் புலிகளின் பயிற்சி மையங்கள் மூன்று இடங்களில் செயல்பட்டு வருகின்றன. புலிகளின் மூத்த தலைவர்களில் ஒருவரான நெடியவனின் உதவியுடன், இந்த பயிற்சி மையங்கள் இயங்கி வருகின்றன. மீண்டும் சிறிய அளவிலான தாக்குதல்களை நடத்துவதற்காக புலிகள் ஒருங்கிணைந்து வருகின்றனர்’ என்றார்.அவரின் இந்த பேச்சு, இலங்கையிலும், இந்தியாவிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில், இலங்கை பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கே இது குறித்து கூறியதாவது:இலங்கையில் விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்ட நிலையிலும், அவசர சட்டம் தொடர்ந்து அமலில் இருக்கிறது. இந்த சட்டத்தை விலக்கிக் கொள்ள, அரசு மறுக்கிறது. விடுதலைப் புலிகளின் செயல்பாடு இன்னும் தொடர்வதால், அவசர சட்டத்தை விலக்க முடியாது என, அரசு சார்பில் பிரசாரம் செய்யப்படுகிறது.
தமிழகத்தில் மூன்று இடங்களில் புலிகளின் பயிற்சி மையம் செயல்படுவதாகக் கூறுவது தவறானது. தமிழகத்தில் புலிகளின் பயிற்சி மையம் இருப்பதாக தகவல் கிடைத்தால், அது குறித்து இந்திய அரசிடம் தெரிவிக்கலாமே. நான் கேட்கிறேன், அந்த மூன்று பயிற்சி மையங்கள் எங்குள்ளது என்பதை பிரதமர் தெரிவிப்பாரா?
புலிகள் அமைப்புக்கு ஆயுதங்கள் வாங்குவதில் முக்கிய பங்கு வகித்த கே.பி., என அழைக்கப்படும் குமரன் பத்மநாதன், தற்போது இலங்கை அரசின் கட்டுப்பாட்டில் தானே உள்ளார். அவரை இந்தியாவிடம் ஒப்படைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு ரணில் விக்கிரமசிங்கே கூறினார்.
இது குறித்து இலங்கை அரசியல் வட்டாரங்கள் கூறுகையில், “இலங்கை அரசால் கைது செய்யப்பட்டுள்ள கே.பி., தற்போது அரசுக்கு ஆதரவான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளார். தமிழர்கள் அதிகம் வசிக்கும் வடக்கு மாகாணத்தில், அரசு ஆதரவு பணிகளில் அவர் ஈடுபட்டுள்ளார். எனவே, கே.பி., விவகாரம், அரசியல் பிரச்னையாக உருவெடுத்துள்ளது’ என்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *