சென்னை : மாநில தகவல் பெறும் கமிஷனர்களாக நியமிக்கப்பட்ட மூவரும், வழக்கு முடியும் வரை பதவியேற்க மாட்டார்கள் என சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
மனுவுக்குப் பதிலளிக்கும்படி, எதிர்க்கட்சித் தலைவர் ஜெயலலிதா உள்ளிட்டோருக்கு நோட்டீஸ் அனுப்பவும் உத்தரவிடப்பட்டுள்ளது. சென்னையைச் சேர்ந்த வக்கீல் விஜயலட்சுமி தாக்கல் செய்த மனு, தலைமை நீதிபதி இக்பால், நீதிபதி சிவஞானம் அடங்கிய, “முதல் பெஞ்ச்’ முன் விசாரணைக்கு வந்தது.
மனுதாரர் சார்பில் வக்கீல் மணிகண்டன் வரதன், அரசு சார்பில் அட்வகேட் ஜெனரல் பி.எஸ்.ராமன் ஆஜராகினர். “முதல் பெஞ்ச்’ பிறப்பித்த உத்தரவு: மாநில தகவல் பெறும் கமிஷனர்களாக மூவர் நியமிக்கப்பட்டது தொடர்பான ஆவணங்களை நாங்கள் பார்த்தோம். மூவரையும் நியமித்த முடிவு குறித்தும், இவர்கள் மூவரும் பதவியேற்கலாமா அல்லது தேர்தல் கமிஷன் முடிவுக்கு அரசு காத்திருக்க வேண்டுமா என்பது குறித்தும் தேர்தல் கமிஷனுக்கு மாநில தேர்தல் கமிஷனர் மூலம் அனுப்பப்பட்டுள்ளதாக, அட்வகேட் ஜெனரல் குறிப்பிட்டுள்ளார். தேர்தல் கமிஷன் என்ன முடிவெடுத்தாலும், அட்வகேட் ஜெனரல் அளித்த உத்தரவாதத்தின்படி, இந்த ரிட் மனு பைசல் செய்யப்படும் வரை, மூன்று பேரும் பதவியேற்க மாட்டார்கள். இந்த மனு மீதான விசாரணை 16ம் தேதிக்கு தள்ளி வைக்கப்படுகிறது. தமிழக அரசு மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் ஜெயலலிதாவுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிடப்படுகிறது. இவ்வாறு “முதல் பெஞ்ச்’ உத்தரவிட்டுள்ளது. ஐகோர்ட்டில் வக்கீல் விஜயலட்சுமி தாக்கல் செய்த மனுவில், “மாநில தகவல் பெறும் கமிஷனர்களாக ராமையா, மனோகரன், ஆறுமுக நயினார் நியமிக்கப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவு கடந்த 1ம் தேதி பிறப்பிக்கப்பட்டுள்ளது. அவசர கதியில் நியமிக்கப்பட்டுள்ளனர். தகவல் பெறும் உரிமை சட்டத்தில் கூறியுள்ள வழிமுறைகளின்படி இவர்கள் நியமிக்கப்படவில்லை. எனவே, மூன்று பேரும் கமிஷனர்களாக செயல்பட தடை விதிக்க வேண்டும்; இவர்களது நியமனத்தை ரத்து செய்ய வேண்டும்’ என கூறப்பட்டுள்ளது. அட்வகேட் ஜெனரல் பி.எஸ்.ராமன் வாதாடும் போது, “கமிஷனர்கள் நியமிப்பது தொடர்பாக, மார்ச் 1ம் தேதி கூட்டம் நடப்பதாக எதிர்க்கட்சித் தலைவருக்கு தெரிவிக்கப்பட்டது. அதற்கு அவர் பதில் கடிதம் அனுப்பினார். கூட்டத்தை தள்ளி வைக்க வேண்டும் என அதில் கூறப்பட்டது. ஆனால், திட்டமிட்டபடி 1ம் தேதியன்று கூட்டம் நடக்கும் என எதிர்க்கட்சித் தலைவருக்கு அரசு தரப்பில் பதில் அனுப்பப்பட்டது’ என்றார்.
Leave a Reply