லோக்சபா தேர்தலில் டெபாசிட் இழந்த தேமுதிகவுக்கு தனி சின்னம் தர முடியாது-தேர்தல் ஆணையம்

posted in: அரசியல் | 0

டெல்லி:லோக்சபா தேர்தலில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 40 தொகுதிகளிலும் டெபாசிட் தொகையை இழந்த தேமுதிகவுக்கு தனிச் சின்னம் தர முடியாது என்று தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.

கடந்த லோக்சபா தேர்தலின்போது சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவின் பேரில் தேமுதிகவுக்கு முரசு சின்னம் ஒதுக்கப்பட்டது. இந்த சின்னத்தின் கீழ் போட்டியிட்ட தேமுதிக அனைத்துத் தொகுதிகளிலும் மண்ணைக் கவ்வி டெபாசிட்டையும் பறி கொடுத்தது. விஜயகாந்த் எம்.எல்.ஏவாக வெற்றி பெற்ற விருத்தாச்சலம் சட்டசபைத் தொகுதியில் அக்கட்சிக்கு குறைந்த ஓட்டுக்களே கிடைத்தன.

இந்த நிலையில் முரசு சின்னத்தை நிரந்தரமாக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் விஜயகாந்த் கட்சி சார்பில் அதன் அவைத் தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது தேர்தல் ஆணையம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில்,

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நடந்த லோக்சபா தேர்தலின்போது, 40 தொகுதிகளிலும், டெபாசிட் தொகையை இழந்த கட்சி தேமுதிக. எனவே அக் கட்சிக்கு தனி சின்னம் ஒதுக்க முடியாது.

அதேபோல, சட்டமன்ற தேர்தலில் ஒரே ஒரு தொகுதியை மட்டுமே வென்றுள்ள தேமுதிக தனி சின்னத்திற்கு உரிமை கோர முடியாது என்று பதிலளித்திருந்தது.

இதையடுத்து விசாரணைக்குப் பின்னர் தீர்ப்பை நீதிமன்றம் ஒத்திவைத்து உத்தரவிட்டது.

அதிமுக கூட்டணியில் சேர்ந்து புதிய அத்தியாயத்தை தொடங்கியுள்ள தேமுதிகவுக்கு தேர்தல் ஆணையத்தின் இந்த ஆணித்தரமான பதில் பெரும் அடியாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 41 தொகுதிகளை அதிமுகவிடம் பேரம் பேசி வாங்கியுள்ள விஜயகாந்த் கட்சிக்கு இந்த தேர்தலில், ஒவ்வொரு தொகுதியிலும் தனித் தனி சின்னம் கிடைக்கும் அபாயமும் நிலவுகிறது. இதன் மூலம் தேமுதிகவின் வேட்பாளர்களுக்கு இந்த சின்னத்தில் வாக்களியுங்கள் என்று கேட்க முடியாத நிலையும் உருவாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *