மருத்துவ படிப்பில் சேர நுழைவுத்தேர்வா? : மருத்துவக் கவுன்சில் உத்தரவுக்கு ஐகோர்ட் தடை

posted in: கோர்ட் | 0

சென்னை : மருத்துவப் படிப்பில் சேர்வதற்கு நுழைவு மற்றும் தகுதி தேர்வை நடத்த வேண்டும் என, இந்திய மருத்துவ கவுன்சில் பிறப்பித்த உத்தரவுக்கு சென்னை ஐகோர்ட் தடை விதித்துள்ளது.


திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள டி.டி., மருத்துவக் கல்லூரியின் தலைவர் டாக்டர் டி.டி.நாயுடு சார்பில், வக்கீல் எம்.அந்தோணி செல்வராஜ் தாக்கல் செய்த மனுவை, நீதிபதி ஜோதிமணி விசாரித்தார். மனுதாரர் கல்லூரியைப் பொறுத்தவரை, கடந்த டிசம்பர் 21ம் தேதி இந்திய மருத்துவ கவுன்சில் பிறப்பித்த உத்தரவுக்கு நீதிபதி ஜோதிமணி இடைக்கால தடை விதித்தார்.

ஐகோர்ட்டில், டி.டி. மருத்துவக் கல்லூரி சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு: மருத்துவக் கல்லூரிக்கு அனுமதி பெறும் போது, ஒவ்வொரு கல்லூரியும் ஒன்பது கோடியே 50 லட்சம் ரூபாய் டிபாசிட் செய்ய வேண்டும். மருத்துவ கவுன்சில் அதிகாரிகள் ஒவ்வொரு முறை ஆய்வு செய்யும் போது, ஏழு லட்சம் ரூபாய் செலுத்த வேண்டும். மருத்துவ கவுன்சிலை பொறுத்தவரை, எதையும் இலவசமாக செய்வதில்லை. அவ்வப்போது, எந்த நிபந்தனையாவது விதித்து அதை பின்பற்ற வேண்டும் என, கல்லூரி நிர்வாகத்தை மருத்துவ கவுன்சில் அதிர்ச்சிக்குள்ளாக்கும். இந்நிலையில், கடந்த டிசம்பர் 21ம் தேதி ஒரு அறிவிப்பாணையை இந்திய மருத்துவ கவுன்சில் பிறப்பித்துள்ளது. எம்.பி.பி.எஸ்., மற்றும் எம்.டி., எம்.எஸ்., வகுப்புகளில் சேர, தேசிய அளவில் நுழைவு மற்றும் தகுதித் தேர்வு நடத்த வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது. இதில் பெறும் மதிப்பெண் அடிப்படையில் மாணவர்கள் சேர்க்கை இருக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது. தமிழக அரசு தெரிவித்த ஆட்சேபனைகளை கருத்தில் கொள்ளாமல், இந்த உத்தரவை மருத்துவ கவுன்சில் பிறப்பித்துள்ளது. மத்திய அரசிடம் இருந்தும் மருத்துவ கவுன்சில் முன்அனுமதி பெறவில்லை. எனவே, இது செல்லாது. கல்வி நிறுவனங்களை துவங்கி, நிர்வகிக்க சிறுபான்மையினருக்கு சுதந்திரம் உள்ளது. இந்த உரிமையில், அரசோ, மருத்துவ கவுன்சில் மற்றும் பல்கலைக்கழகங்களோ குறுக்கிட முடியாது. ஏற்கனவே, தொழிற்கல்விக்கான நுழைவுத் தேர்வை தமிழக அரசு ரத்து செய்துள்ளது. எனவே, இந்திய மருத்துவ கவுன்சில் பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும். அதை ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *