சென்னை: தாங்கள் கேட்ட 21 தொகுதிகளை அதிமுக தர மறுத்து விட்டதால் கடும் அதிருப்தி அடைந்துள்ள தேமுதிகவினர் இன்று கட்சி தலைமை அலுவலகத்தை முற்றுகையிட்டுள்ளனர்.
கட்சி நிர்வாகிகளுடன் அடுத்து என்ன செய்வது என்று விஜயகாந்த் தீவிர ஆலோசனை நடத்தி வருகிறார்.
முதல் கூட்டணியே பெரும் கோணலாக மாறியுள்ளதால் விஜயகாந்த் மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த தேமுதிகவினரும் பெரும் அதிர்ச்சியும், குழப்பமும், வருத்தமும் அடைந்துள்ளனர்.
அதிமுகவிடம் 41 சீட்களை கேட்டுப் பெற்றார் விஜயகாந்த். ஆனால் அவர் கேட்ட தொகுதிகளில் பலவற்றை அதிமுக தரவில்லை. குறிப்பாக 21 தொகுதிகளை அதிமுக தர மறுத்து விட்டதாம். இதனால் விஜயகாந்த் கடும் அப்செட்டாகியுள்ளார்.
இத்தனைக்கும் நேற்று மாலையில்தான் அதிமுக குழுவுடன், விஜயகாந்த்தின் மச்சான் சுதீஷ் தீவிர ஆலோசனை நடத்தினார். ஆலோசனைக்குப் பின்னர் வெளியே வந்த அவர், தேமுதிக போட்டியிடும் தொகுதிகள் முடிவாகி விட்டதாகவும், ஓரிரு நாளில் விஜயகாந்த் அதை அறிவிப்பார் என்றும் கூறி விட்டுச் சென்றார்.
ஆனால் முன்னாள் நடக்க விட்டு விட்டு பின்னால் கதவை மூடுவது போல வேட்பாளர் பட்டியலை அறிவித்து தேமுதிகவுக்கு அதிர்ச்சி வைத்தியம் அளித்து விட்டார் ஜெயலலிதா.
இதனால் விஜயகாந்த் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளார். இதையடுத்து இன்று காலை தேமுதிக தலைமை அலுவலகத்திற்கு வந்த அவர் கட்சி நிர்வாகிகளுடன் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.
மேலும் கட்சித் தொண்டர்களும் பெருமளவில் கட்சி அலுவலகத்தில் கூடியுள்ளனர். அனைவரும் ஜெயலலிதாவின் செயலால் கடும் கோபத்துடனும், அதிருப்தியுடனும் உள்ளனர். பேசாமல் முதலிலேயே நாம் தனித்து போட்டியிட்டிருக்கலாம் அல்லது காங்கிரஸை தனியாக கொண்டு வந்து அணி அமைத்திருக்கலாம் என்று அவர்கள் புலம்புகின்றனர்.
இன்னும் சிறிது நேரத்தில் தேமுதிகவின் முடிவு என்ன என்பது தெரிய வரும். தொண்டர்கள் கொந்தளிப்புடன் உள்ளதால் விஜயகாந்த் தனித்துப் போட்டியிடும் முடிவுக்கு வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Leave a Reply