மத்திய அரசு வற்புறுத்துவதால்தான் தமிழ்நாடு மின்சார வாரியத்தை மூன்றாகப் பிரிக்கும் முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்று மின் துறை அமைச்சர் ஆர்க்காடு வீராசாமி பேரவையில் கூறினார்.
பேரவையில் மின் துறை மீதான மானியக் கோரிக்கை விவாதத்துக்குப் பதில் அளிக்கும்போது அவர் கூறியதாவது:-
”தமிழ்நாடு மின்சார வாரியத்தைப் பிரிக்க தமிழக அரசு மறுத்து வந்தது. ஆனால், மின்சார வாரியத்தை பிரித்துச் செயல்படும் மாநிலத்துக்கு மட்டுமே நிதியுதவி வழங்கப்படும் என மத்திய அரசு உறுதியாகக் கூறிவிட்டது.
இதையடுத்து தமிழ்நாடு மின்சார வாரியத்தைச் சீரமைக்க கொள்கை அளவில் தமிழக அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. அதன்படி ‘தமிழ்நாடு மின்சார வாரியம் லிமிடெட்’ என்ற தலைமை நிறுவனம், ‘தமிழ்நாடு மின் தொடரமைப்புக் கழகம் லிமிடெட்’, ‘தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மானக் கழகம் லிமிடெட்’ ஆகிய இரண்டு துணை நிறுவனங்கள் நிறுவப்படும்.
இவை தமிழக அரசின் நிறுவனமாக முழுமையாகச் செயல்படும். மின் வாரியத்தின் தலைவரே அனைத்துக்கும் தலைவராக இருப்பார். மின்சார வாரியத்தைச் சீரமைக்க ஆலோசனை நிறுவனம் நியமிக்கப்பட்டுள்ளது. இந்த நிறுவனம் தனது ஆய்வறிக்கையை 3 மாதத்துக்குள் சமர்ப்பிக்கும்.
நெய்வேலி அனல் மின் நிலைய (என்.எல்.சி.) ஒப்பந்தத் தொழிலாளர்களின் ஊதிய பிரச்னை குறித்து தொழிலாளர்களின் சங்கப் பிரதிநிதிகளுடனும் மத்திய அரசுடனும் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. சென்னையில் வரும் வெள்ளிக்கிழமை (ஜூன் 19) மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெறும் போது பிரச்னை தீர்ந்து விடும்.
கூடங்குளம் அணுமின் உற்பத்தி நிலையத்தில் மூலப் பொருள் கிடைக்காததால் மின் உற்பத்தி தாமதமாகியுள்ளது. எனினும் மொத்தம் 1200 மெகாவாட் திறன் கொண்ட இந்த நிலையத்தில், முதல் பிரிவு வரும் டிசம்பரிலும், இரண்டாவது பிரிவு அடுத்த ஆண்டு ஏப்ரலிலும் செயல்படத் தொடங்கும்.
தமிழ்நாடு மின்சார வாரியத்தில் வரவை (ரூ.19,598 கோடி) காட்டிலும் செலவு அதிகம் உள்ளதால், ரூ.7,200 கோடி அளவுக்குப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. தமிழக மின் தேவையைப் பூர்த்தி செய்ய வெளி மாநிலங்களிலிருந்து 11 கோடி யூனிட் அளவுக்கு மின்சாரத்தை வாங்குவதால்தான் இந்த அளவுக்குப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது” என்றார்.
Leave a Reply