புதுடில்லி : நடிகர் விஜயகாந்த் தலைமையிலான தேசிய முற்போக்கு திராவிட கழகத்துக்கு, பொதுச்சின்னம் ஒதுக்க, தேர்தல் கமிஷனுக்கு உத்தரவிட முடியாது என, சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளது.
சட்டசபை தேர்தலில் போட்டியிடும் தங்களுக்கு, பொதுச் சின்னம் ஒதுக்க, தேர்தல் கமிஷனுக்கு உத்தரவிட வேண்டும் என, தே.மு.தி.க., – விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, கொங்கு நாடு முன்னேற்ற கழகம் உள்ளிட்ட, 11 கட்சிகள், சுப்ரீம் கோர்ட்டில் மனு செய்திருந்தன. கடந்த லோக்சபா தேர்தலின் போது, சுப்ரீம் கோர்ட்டின் தலையீட்டின் பேரில், தே.மு.தி.க., – பிரஜா ராஜ்யம் உள்ளிட்ட கட்சிகளுக்கு தற்காலிகமாக பொதுச்சின்னம் ஒதுக்கப்பட்டது. தங்களுக்கு நிரந்தரமாக இந்த பொதுச் சின்னத்தை அளிக்க வேண்டும் என, இந்த கட்சிகள், தேர்தல் கமிஷனிடம் கோரியிருந்தன. “லோக்சபா தேர்தலில் ஒரு இடத்தைக்கூட பிடிக்க முடியாத, சட்டசபையிலும் போதுமான இடங்களை பெறாத இந்த கட்சிகளுக்கு, நிரந்தரமான சின்னத்தை ஒதுக்க முடியாது’ என, தேர்தல் கமிஷன் மறுத்து விட்டது. இதை எதிர்த்து, தே.மு.தி.க., உள்ளிட்ட கட்சிகள், சுப்ரீம் கோர்ட்டில் மனு செய்தன. இம்மனுவை, நீதிபதிகள் அல்டாமாஸ் கபீர், சிரியாக் ஜோசப் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் நேற்று விசாரித்தது. கடந்த முறை, தே.மு.தி.க., உள்ளிட்ட சில கட்சிகளுக்கு சுப்ரீம் கோர்ட் தனி சின்னம் ஒதுக்கி உத்தரவிட்டதை எதிர்த்து, தேர்தல் கமிஷனின் சார்பில் அப்பீல் மனு செய்யப்பட்டுள்ளது. இந்த மனுக்களை விசாரித்த நீதிபதிகள், “பதிவு செய்யப்பட்டுள்ள இந்த கட்சிகள் அங்கீகாரம் பெறாதவை. எனவே, இந்த கட்சிகளுக்கு சுயேச்சைகளுக்குரிய சின்னம் தான் ஒதுக்க முடியும். குறிப்பிட்ட சின்னத்தை நிரந்தரமாக ஒதுக்க, தேர்தல் கமிஷனுக்கு உத்தரவிட முடியாது. இந்த கட்சிகள் மீண்டும் தேர்தல் கமிஷனை அணுகலாம். தேர்தல் கமிஷனும் இவர்களது மனுவை பரிசீலித்து முடிவு செய்யலாம்’ என தெரிவித்துள்ளனர். மீண்டும் இந்த மனுக்களின் மீதான விசாரணை மே மாதம் 3ம் தேதி நடைபெற உள்ளது. சுப்ரீம் கோர்ட்டின் இந்த கருத்தால், தற்போதைய சட்டசபை தேர்தலில் தே.மு.தி.க., – விடுதலை சிறுத்தை கட்சி உள்ளிட்ட கட்சிகளுக்கு பொதுச்சின்னம் கிடைக்காது, என்பது உறுதியாகியுள்ளது.
Leave a Reply