ஸ்ரீரங்கத்தில் ஜெயலலிதா போட்டி-ஆண்டிப்பட்டியை கைவிட்டது ஏன்?

posted in: அரசியல் | 0

சென்னை: மதுரை மாவட்டத்தை ஒட்டி எந்த இடத்தில் போட்டியிட்டாலும் மத்திய அமைச்சர் அழகிரியின் அதிரடியை மீறி ஜெயிப்பது மிகமிகக் கடினம் என்று எச்சரிக்கப்பட்டதையடுத்து தனது பிராமண ஜாதியினர் அதிகம் வசிக்கும் ஸ்ரீரங்கம் தொகுதியில் போட்டியிட முடிவு செய்துள்ளார் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா.


கடந்த முறை தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி தொகுதியில் போட்டியிட்ட ஜெயலலிதா இந்த முறை கொங்கு மண்டலத்தில் போட்டியிட திட்டமிட்டார். ஆனால், கொங்கு நாடு முன்னேற்றக் கழகத்தை திமுக தனது கூட்டணியில் சேர்த்துக் கொண்டதையடுத்து ஜெயலலிதா அந்த ரிஸ்க் எடுக்கவில்லை.

அதே போல வட மாவட்டங்களில் பாமகவோ விடுதலை சிறுத்தைகளோ கூட்டணியில் இல்லாத நிலையில் வெற்றி வாய்ப்பு குறைவே என்று எச்சரிக்கப்பட்டதையடுத்து அதையும் தவிர்த்துவி்ட்டு ஸ்ரீரங்கத்தை நாடினார் ஜெயலலிதா என்கிறார்கள்.

1989ம் ஆண்டு ஜெயலலிதா முதன் முதலில் போடிநாயக்கனூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்றார். அதன் பின்னர் 1991ம் ஆண்டு பர்கூர், காங்கேயம் தொகுதிகளில் போட்டியிட்டு இரண்டு தொகுதிகளிலும் வெற்றி பெற்றார். இதில் காங்கேயம் தொகுதி உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார்.

1996ம் ஆண்டு மீண்டும் பர்கூரில் போட்டியிட்ட ஜெயலலிலா படுதோல்வி அடைந்தார். திமுகவின் சுகவனத்திடம் அவர் தோல்வியடைந்தார்.

2001ம் ஆண்டு ஏராளமான ஊழல் வழக்குகளில் சிக்கியதால் இவரது வேட்பு நிராகரிக்கப்படும் என்று தெரிந்தும், தேர்தல் ஆணையத்தையே குழப்பும் வகையில் 4 தொகுதிகளில் அடுத்தடுத்து மனு தாக்கல் செய்தார். ஆனாலும் அவை அனைத்தும் நிராகரிக்கப்பட்டன. இதனால் அவர் போட்டியிட முடியவில்லை.

ஆனாலும் கவர்னர் பாத்திமா பீவியின் உதவியோடு முதல்வராகி பின்னர் 2002ம் ஆண்டு நடைபெற்ற இடைத்தேர்தலில் ஆண்டிப்பட்டி தொகுதியில் போட்டியிட்டு 41,000 வாக்கு வித்தியாசத்தில் வென்றார்.

அதைத் தொடர்ந்து, கடந்த சட்டமன்றத் தேர்தலிலும் ஆண்டிப்பட்டி தொகுதியில் போட்டியிட்டு ஜெயலலிதா வென்றார். ஆனால், வாக்கு வித்தியாசம் 25,000 ஆகக் குறைந்தது.

அதே போல 2009ம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில் அழகிரியின் அதிரடியால் பெரிகுளம் தொகுதியில் உள்ளடங்கிய ஆண்டிப்பட்டியில் அதிமுகவின் ஓட்டு எண்ணிக்கை மேலும் பெருமளவு சரிந்தது.

எம்ஜிஆர் காலத்திலிருந்தே அதிமுகவின் மாபெரும் ஓட்டு வங்கியாக இருந்த முக்குலத்தோரின் வாக்குகளை சசிகலாவின் உதவியோடு கட்டிக் காத்து வந்தார் ஜெயலலிதா. இதன்மூலம் ஆண்டிப்பட்டியில் தைரியமாக போட்டியிட்டு வென்று வந்தார். ஆனால், கடந்த சில தேர்தல்களாகவே அந்த சமுதாய மக்கள் ஜெயலலிதாவை புறக்கணிக்க ஆரம்பித்துவிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனால் இனியும் ஆண்டிப்பட்டியில் போட்டியிடுவது பாதுகாப்பில்லை என்ற நிலைக்கு ஜெயலலிதா தள்ளப்பட்டுள்ளார். இதையடுத்தே தனது பிராமண சமூகத்தினர் அதிகம் வசிக்கும் திருச்சி ஸ்ரீரங்கம் தொகுதியைத் தேர்ந்தெடுத்துள்ளார்.

தனது குடும்பத்தின் பூர்வீகம் ஸ்ரீரங்கம் தான் என்று ஜெயலலிதா கூறியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

சட்டசபைத் தேர்தல் அறிவிக்கப்பட்ட பிறகு, விருப்ப மனு பெறப்படும் என்று அதிமுக தலைமைக் கழகத்தில் அறிவிக்கப்பட்ட முதல் நாள், முதல் விருப்ப மனுவாக ஸ்ரீரங்கம் தொகுதியில் ஜெயலலிதா போட்டியிடக் கோரி திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக செயலாளர் ஆர்.மனோகரன் மூலம் மனு அளிக்கவும் ஜெயலலிதா ஏற்பாடு செய்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் தனியார் ஏஜென்சியைக் கொண்டு ஸ்ரீரங்கம் மற்றும் கொங்கு மண்டலத்தில் கவுண்டம்பாளையம் தொகுதியில் தனது வெற்றி வாய்ப்புகுறித்து ஆய்வும் நடத்தினார் ஜெயலலிதா. அதில் ஸ்ரீரங்கமே பாதுகாப்பானது என்று தெரியவந்ததால், இங்கு போட்டியிடுகிறார் ஜெயலலிதா.

2006ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் ஸ்ரீரங்கத்தில் வென்ற அதிமுக வேட்பாளர் பரஞ்சோதி, தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் ஜெரோம் ஆரோக்கியராஜைவிட 10,922 வாக்குகள் அதிகம் பெற்றார். பரஞ்சோதி இங்கு 89,135 வாக்குகள் பெற்றார்.

2009ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் திருச்சி மக்களவைத் தொகுதியில் உள்ள அனைத்து சட்டசபை தொகுதிகளிலும் அதிமுக மண்ணைக் கவ்விய நிலையில், ஸ்ரீரங்கம் சட்டப்பேரவைத் தொகுதிதான் அதிமுகவை காப்பாற்றறியது.

இங்கு பிராமண சமூகத்தினரின் வாக்குகள் அப்படியே அதிமுகவுக்குக் கிடைத்ததால் அதிமுக வேட்பாளர் ப.குமார் வென்றார். வெறும் 4,335 வாக்குகள் வித்தியாசத்தில் தான் அவர் காங்கிரஸ் வேட்பாளர் சாருபாலா தொடிண்டமானை வென்றார். இதில் ஸ்ரீரங்கம் சட்டப்பேரவைத் தொகுதியில் மட்டும் ப.குமாருக்கு கூடுதலாக 20,182 வாக்குகள் கிடைத்தன என்பது குறிப்பிடத்தக்கது.

இதுவரை ஸ்ரீரங்கம் தொகுதியில் நடைபெற்ற 13 சட்டசபைத் தேர்தல்களில் அதிமுக 6 முறையும், காங்கிரஸ் கட்சி 3 முறையம், ஸ்தாபன காங்கிரஸ் கட்சி ஒரு முறையும், ஜனதா கட்சி ஒரு முறையும் வெற்றி பெற்றுள்ளன. திமுகவும் ஒரே ஒரு முறை தான் வெற்றி பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தோழிக்கு சீட் இல்லை:

இந் நிலையில் கட்சியின் முக்கிய நிர்வாகிகளில் ஒருவரான
முன்னாள் அமைச்சர் சி.பொன்னையன், ஜெயலலிதாவின் பள்ளித் தோழியான பதர் சயீத், முன்னாள் அமைச்சர் பாண்டுரங்கன் (கடா மீசை வைத்துள்ள இவர் ஜெயலலிதாவைப் பார்த்தால் கன்னத்தில் பளார் பளார் என்று அறைந்து கொள்வார்.. ஸாரி.. கன்னத்தில் போட்டுக் கொள்வார்) ஆகியோருக்கு இந்தத் தேர்தலில் போட்டியிட ஜெயலலிதா வாய்ப்பு தரவில்லை.

160 பேர் கொண்ட அதிமுக வேட்பாளர் பட்டியலில் 13 பெண்கள் இடம் பெற்றுள்ளனர்.

இந் நிலையில் மதுரையிலிருந்து வரும் நாளை (மார்ச் 18-கூட்டுத் தொகை 9, வெள்ளிக்கிழமை) ஜெயலலிதா தனது தேர்தல் பிரசாரத்தை தொடங்குகிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *