ஜப்பானில் வசித்த வெளிநாட்டவர்கள் சொந்த நாட்டுக்கு ஓட்டம்

posted in: உலகம் | 0

டோக்கியோ : ஜப்பானின் புக்குஷிமா அணு உலைகளில் வெப்பத்தை தணிக்க, ஹெலிகாப்டர் மூலம் தண்ணீர் ஊற்றும் முயற்சி கதிர்வீச்சு அபாயத்தால், தோல்வியில் முடிந்தது.

நான்கு உலைகளின் உண்மையான நிலை என்ன என்ற கேள்வி எழுந்துள்ளது. அதேநேரத்தில், கதிர்வீச்சு அபாயத்தால் ஜப்பானில் உள்ள வெளிநாட்டவர்கள் தங்கள் சொந்த நாடுகளுக்குத் திரும்பி வருகின்றனர். புக்குஷிமா டாய் இச்சியில் ஆறு அணு உலைகள் செயல்பட்டு வருகின்றன. கடந்த ஐந்து நாட்களில் நான்கு உலைகளில் வெடிவிபத்து ஏற்பட்டது. உலைகளை இயக்கி வரும், டோக்கியோ எலக்ட்ரிக் பவர் கம்பெனி, அவற்றின் உண்மை நிலை என்ன என்பது பற்றி சரிவரத் தெரிவிக்கவில்லை. அணுமின் நிலையங்களில் தொடர்ந்து கதிர்வீச்சு வெளியாகிக் கொண்டிருப்பது மட்டும் தெளிவாகிறது.

என்ன சேதம்? : நேற்று முன்தினம், 2 மற்றும் 4ம் உலைகளில் ஏற்பட்ட விபத்தை அடுத்து, கதிர்வீச்சு அபாயம் கருதி, நிலையப் பணியாளர்கள் 750 பேர் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டனர். மீதி 50 பேர் மட்டும், ஆறு உலைகளின் வெப்பத்தைத் தணிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். வெடிவிபத்துக்களில், 1, 3 மற்றும் 4ம் உலைகளில் இரண்டாம் நிலைச் சுற்றுச் சுவர்கள் பலத்த சேதம் அடைந்துள்ளன. 2ம் உலையில், உலைக்கு அடிப்புறம் வைக்கப்பட்டிருக்கும் நீர் கொள்கலனில் சேதம் ஏற்பட்டுள்ளது. இந்த இரு வகையான சேதங்களாலும், உலைகளில் வெப்பம் அதிகரித்துள்ளது.

கதிர்வீச்சு அதிகரிப்பு: வெடிவிபத்துக்குப் பின் உலைகளில் இருந்த நீர் வற்றிப் போய்விட்டதால், தொடர்ந்து கடல் நீர் உள்ளே செலுத்தப்பட்டது. இப்பணியில் ஆறு உலைகளிலும் 50 பேர் ஈடுபடுத்தப்பட்டனர். மின்சாரம் இல்லாததால், தற்காலிக தீயணைப்பு குழாய்கள் மூலம் கடல் நீர் உள்ளே செலுத்தப்பட்டது. ஆனால், தண்ணீர் செலுத்தப்படும் வேகத்தை விட, வெப்பம் பல மடங்கு அதிகரித்தது. ஒருகட்டத்தில் யாரும் உலைக் கட்டடத்திற்கு வெளியில் நிற்க முடியாத நிலை உருவானது. அதேநேரம், காற்றில் கதிர்வீச்சின் அளவும் அதிகரித்தது. நேற்று காலையில் காற்றில் இயல்பை விட 200ல் இருந்து 400 மடங்கு கதிர்வீச்சின் அளவு உயர்ந்தது. சிறிது நேரத்தில் அதுவே 1,000 மடங்காக அதிகரித்தது. இதனால், உலைகளுக்கு கடல் நீர் செலுத்தும் வேலை கைவிடப்பட்டு பணியாளர் 50 பேரும் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

ஹெலிகாப்டர் முயற்சி தோல்வி: ஒவ்வொரு உலையிலும், உலைக்கு மேற்புறம், பயன்படுத்தப்பட்ட யுரேனியம் கம்பிகள், தனியாக ஒரு நீர் கொள்கலனில் வைக்கப்பட்டிருக்கும். உலைகளுக்குள் கடல் நீர் செலுத்தப்படுவது நிறுத்தப்பட்ட உடன், இந்த கம்பிகளில் இருக்கும் பகுதிகளில் வெப்பம் அதிகரித்தது. தொடர்ந்து 3 மற்றும் 4ம் உலைகளில் இருந்து புகை மூட்டம் எழுந்தது. அதேநேரம், காட்டுத் தீயை அணைக்கப் பயன்படுத்தப்படும் ராணுவ ஹெலிகாப்டர்கள் மூலம் உலைகளின் மீது தண்ணீர் ஊற்றும் முயற்சி நடந்தது. ஆனால், அதிக வெப்பம் மற்றும் கதிர்வீச்சு அபாயத்தால் அந்த முயற்சியும் கைவிடப்பட்டது. அமைச்சரவைத் தலைமைச் செயலர் யுக்கியோ எடானோ, “தண்ணீர் ஊற்றுவதால் மட்டுமே இந்தப் பிரச்னை தீர்ந்து பயன்படுத்தப்பட்ட கம்பிகளின் நிலை என்ன, உலையில் நீர்மட்டம் எவ்வளவு இருக்கிறது, கதிர்வீச்சு தொடர்ந்து வெளிவந்து கொண்டிருக்கிறதா என்பது போன்ற பல்வேறு சந்தேகங்களுக்கு, ஜப்பான் அரசோ, டோக்கியோ எலக்ட்ரிக் பவர் கம்பெனியோ இன்னும் சரியான தெளிவான விடையளிக்கவில்லை. இதனால், உலைகளின் உண்மை நிலை என்ன என்பது சந்தேகத்திற்கு உரியதாகவே உள்ளது. இதுகுறித்து ஆராய, அமெரிக்காவின் உதவியை ஜப்பான் நாடியுள்ளது.

வெளிநாட்டவர் பீதி: கதிர்வீச்சு அபாயத்தினால், ஜப்பானில் உள்ள வெளிநாட்டவர்கள் தங்கள் சொந்த நாடுகளுக்குத் திரும்பி வருகின்றனர். பிரான்ஸ் மற்றும் ஆஸ்திரேலிய நாடுகள் தங்கள் அதிகாரிகளை உடனடியாக ஜப்பானை விட்டு வெளியேறும்படி அறிவுறுத்தியுள்ளன.

இந்தியர்கள் பத்திரம் : “”ஜப்பானில் உள்ள இந்தியர்கள் பத்திரமாக இருக்கின்றனர்’ என, அந்நாட்டுக்கான இந்தியத் தூதர் அலோக் பிரசாத் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது: இந்தியர்கள் யாரும் நிலநடுக்கத்தில் பலியாகவில்லை. அனைவரும் பத்திரமாக உள்ளனர். செண்டாயில் சிக்கியிருந்த இந்தியர்கள் டோக்கியோவுக்கு அனுப்பப்பட்டு விட்டனர். அவர்களில் பலர் இந்தியாவுக்குத் திரும்ப விருப்பம் தெரிவித்துள்ளனர். அவர்களுக்கு கதிர்வீச்சு பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை. டோக்கியோவில் கதிர்வீச்சு அபாயம் இல்லை என்று ஜப்பான் அரசு எங்களிடம் தெரிவித்துள்ளது. டோக்கியோ விமான நிலையம் வழக்கம் போல் இயங்கி வருகிறது. இந்தியர்கள் யாராவது ஜப்பானை விட்டு வெளியேற விரும்பினால், இந்தியத் தூதரகம் அதற்கான உதவிகளைச் செய்யத் தயாராக உள்ளது. இவ்வாறு பிரசாத் தெரிவித்தார். அதேநேரம், ஜப்பானில் இருந்து இந்தியாவுக்கு வரும் உணவுப் பொருட்கள் அனைத்தும் கதிர்வீச்சு பரிசோதனை செய்யப்பட வேண்டும் என, இந்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

சீனா, கொரியா பீதி

* ஜப்பானில் அணு உலைகளுக்கு ஏற்பட்ட கதியை அடுத்து, புதிய அணு உலைகளை நிறுவுவதாக போட்டிருந்த திட்டத்தை சீனா ரத்து செய்து விட்டது.
* 20 அணுமின் உலைகள் கொண்ட தென்கொரியா, தனது அணு உலைகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் முயற்சியில் இறங்கியுள்ளது.
* ஜப்பானின் வடகிழக்குப் பகுதியில் நேற்று மீண்டும் 6 ரிக்டர் புள்ளி அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
* “ஒருவேளை ஜப்பானில் இருந்து அமெரிக்கா நோக்கி கதிர்வீச்சு கசிவு வந்தாலும், ஹவாய் தீவை அது அடையும் முன்பே வலுவிழந்து விடும். அதனால், அமெரிக்கா கதிர்வீச்சால் பாதிக்கப்படாது’ என்று அமெரிக்க அதிபர் ஒபாமா தெரிவித்துள்ளார்.
* அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் இரு அணு உலைகள் உள்ளன. அதனால், அங்குள்ள மக்கள் பீதி அடைந்துள்ளனர். அவர்களின் சந்தேகத்தைப் போக்கும் முயற்சியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். உலைகள் பாதுகாப்பாக இருப்பதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
* ஜப்பானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால், கொரிய தீபகற்பம், கிழக்கு நோக்கி 5 செ.மீ., அளவில் நகர்ந்துள்ளதாக அந்நாட்டு நிபுணர்கள் கூறியுள்ளனர்.
* ஜப்பானில் நிலநடுக்கம் மற்றும் சுனாமியில் இறந்தவர்களின் அதிகாரபூர்வ எண்ணிக்கை 3,676 ஐயும், காணாமல் போனோர் எண்ணிக்கை 7,843 ஐயும் தொட்டுள்ளது.
* ஜப்பானில் தங்கியிருக்கும் வெளிநாட்டவர், அந்தந்த உள்ளூர் அரசு அலுவலகங்களில் தங்களது கைரேகைகள் உள்ளிட்ட விவரங்களைப் பதிவு செய்து கொள்ளும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
* அவோமோரி, ஐவேட், மியாகி மற்றும் புக்குஷிமா மாகாணங்களில் தங்கியிருந்து தற்போது நாட்டை விட்டு வெளியேறிய வெளிநாட்டவர் பற்றிய விவரங்களைத் தர, அந்நாட்டு குடியேற்றத் துறை ஏற்பாடு செய்து வருகிறது.
* ஜப்பானில் இருந்து வரும் சரக்கு மற்றும் உணவுப் பொருட்கள் கதிர்வீச்சுப் பரிசோதனை செய்யப்படும் என்று ஷாங்காய் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
* “ஜப்பானில் இருந்து வெளிவரும் கதிர்வீச்சு உலகளவில் பரவவில்லை. அதனால், தயவு செய்து வதந்திகளைப் பரப்ப வேண்டாம். அமைதியைக் கடைப்பிடிக்க வேண்டும்’ என்று ஐ.நா.,வின் உலக சுகாதார நிறுவனம் கேட்டுக் கொண்டுள்ளது.

மேலும் உலகம் செய்திகள்:

* இந்தியன்வெல்ஸ் டென்னிஸ் போட்டி : நடால் வெற்றி
* ஆசிய சந்தையில் கச்சா எண்ணெய் விலை சரிவு
* லிபிய கலவரத்தில் 4 பத்திரிகையாளர்கள் மாயம்
* எச்சரிக்கையை புறக்கணித்ததா ஜப்பான்?
* நெக்லஸ் திருடிய ஹாலிவுட் நடிகைக்கு 90 நாள் சிறை
* பாக்.மாஜி பிரதமருக்கு திடீர் மாரடைப்பு : மருத்துவமனையில் அனுமதி
* ரேமாண்ட்‌ டேவிஸை விடுவித்தது லாகூர் கோர்ட்
* அமெரிக்க வங்கி வாரிய இயக்குனராக முகேஷ் அம்பானி தேர்வு
* ஜப்பான் நிலநடுக்கத்தால் பூமி சுற்றும் வேகம் அதிகரிப்பு
* பாகிஸ்தான் அணு ஆயுதங்கள் அமெரிக்க தளபதி எச்சரிக்கை
* இன்டர்நெட் ஒரு உளவாளி இயந்திரம் விக்கிலீக்ஸ் அசாஞ்ச் புகழாரம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *