68 தான், முடியாது 70 வேணும்: இழுபறியில் காங்., திரிணாமுல் காங். பேச்சுவார்த்தை

posted in: அரசியல் | 0

கொல்கத்தா: தொகுதி பங்கீடு தொடர்பாக திருணாமுல் காங்கிரஸ் மற்றும் காங்கிரஸுக்கு இடையே நேற்றிரவு நடந்த பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தது. மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தப்போவதாக காங்கிரஸ் அறிவித்துள்ளது.

மேற்கு வங்க சட்டசபை தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ், காங்கிரஸுடன் கூட்டணி வைத்து போட்டியிடுகிறது. இந்த இரு கட்சிகளுக்கு இடையே தொகுதி பங்கீடு குறித்து பல கட்ட பேச்சுவார்த்தை நடந்துவிட்டது. இன்னும் உடன்பாடு எற்பட்டபாடில்லை.

இந்நிலையில் நேற்றரவு திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கட்சயின் உயர் மட்டக் குழு பேச்சுவார்த்தை நடந்தது. இதில் திரிணாமுல் காங்கிரஸ் சார்பில் கட்சித் தலைவர் மம்தா பானர்ஜி, பொதுச் செயலாளர் முகுல்ராய், பாப்பி ஹக்லீம், காங்கிரஸ் சார்பில் மத்திய மந்திரி பிரணாப் முகர்ஜி, மேலிட பொறுப்பாளர் ஷகீல் அகமது, மேலிட தேர்தல் பார்வையாளர் ஜனார்த்தனன் பூஜாரி ஆகியோர் கலந்து கொண்டனர்.

பிரணாப்முகர்ஜி வீட்டில் நடந்த இந்த பேச்சுவார்த்தை சுமார் 1 மணி நேரம் நடந்தது. ஆனால் தற்போதும் உடன்பாடு ஏற்படாமல் பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தது.

மேற்கு வங்கத்தில் மொத்தம் 294 தொகுதிகள் உள்ளன. அதில் மூன்றில் ஒரு பங்கு என்று 98 தொகுதிகள் வேண்டும் என்றது காங்கிரஸ். ஆனால் திரிணாமுல் காங்கிரஸ் முதலில் 40 இடம் தான் கொடுக்க முடியும் என்றும் பின்னர் 64 இடங்கள் தருகிறோம் என்றது. அதற்கு காங்கிரஸ் 70 இடங்கள் கேட்டது. நேற்றிரவு நடந்த பேச்சுவார்த்தையில் 68 இடங்கள் தர திருணாமுல் முன்வந்தது. ஆனால் காங்கிரஸ் 70 தான் வேண்டும் என்று பிடிவாதமாக கூறியது. மேலும் புதிதாக உருவாக்கப்பட்ட கொல்கத்தா துறைமுகம், மெடியாபுரூஷ் தொகுதிகள் பங்கீடு செய்வதிலும் பிரச்சினை ஏற்பட்டது.
இதனால் பேச்சுவார்த்தை தோல்வியடைந்தது.

பேச்சுவார்த்தை முடிந்து வெளியே வந்த பிரணாப் முகர்ஜி நிருபர்களிடம் கூறியதாவது,

பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை. மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தவிருக்கிறோம் என்றார். ஆனால் மம்தா எதுவும் கூறாமல் மௌனமாக சென்றுவிட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *