புதுடில்லி: நாட்டின் பணவீக்கம் மற்றும் உணவுப் பொருள்களுக்கான பணவீக்கம் உயர்ந்து வருவதை கட்டுக்குள் கொண்டு வரும் வகையில், ரிசர்வ் வங்கி, நடப்பு நிதியாண்டின், மத்திய காலாண்டிற்கான கடன் கொள்கையை அறிவித்துள்ளது.
இதில், குறுகிய கால அடிப்படையில், வங்கிகளுக்கான முக்கிய கடன்களுக்கான வட்டி விகிதம் 0.25 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. அதேசமயம், வங்கிகள், ரிசர்வ் வங்கியில், வைக்க வேண்டிய ரொக்க இருப்பு விகிதத்தில் (6 சதவீதம்), மாற்றம் எதுவும் செய்யப்படவில்லை.
இதில், ரிசர்வ் வங்கி, வங்கிகளுக்கு வழங்கும், கடனுக்கான ‘ரெப்போ’ வட்டி விகிதத்தை 0.25 சதவீதம் உயர்த்தி, 6.75 சதவீதமாக அதிகரித்துள்ளது. மேலும், ரிசர்வ் வங்கி, வங்கிகளிடமிருந்து வாங்கும் கடனுக்கான, ‘ரிவர்ஸ் ரெப்போ ‘ வட்டி விகிதத்தையும், 0.25 சதவீதம் அதிகரித்து 5.75 சதவீதமாக உயர்த்தியுள்ளது.
நாட்டின் பணவீக்கம், உயர்ந்து வருவதை தடுத்து நிறுத்திடும் வகையில், ரிசர்வ் வங்கி, சென்ற 2010ம் ஆண்டு மார்ச் முதல் இதுவரையிலுமாக, எட்டு முறை, வங்கிகளுக்கான வட்டி விகிதத்தை உயர்த்தியுள்ளது.
ரிசர்வ் வங்கியின் கவர்னர் டீ. சுப்பாராவ், வியாழக்கிழமையன்று வெளியிட்டுள்ள, நிதிக் கொள்கையில், அறிவிக்கப்பட்டுள்ள வங்கி கடன்களுக்கான வட்டி விகித உயர்வு, சந்தை மதிப்பீட்டை ஒட்டியே உள்ளது.
சென்ற பிப்ரவரி மாதத்தில்,நாட்டின் தொழில் துறை உற்பத்தி 3.7 சதவீதம் குறைந்த அளவிலேயே வளர்ச்சி
கண்டுள்ளது.
அதேசமயம், சென்ற 2010ம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில், தொழில்துறை உற்பத்தி வளர்ச்சி 16.8 சதவீதம் என்ற அளவில் மிகவும் அதிகரித்து காணப்பட்டது. குறிப்பாக, தயாரிப்புத் துறையில், பொறியியல் துறையின் வளர்ச்சி குறைந்ததையடுத்து, நாட்டின் தொழில்துறை உற்பத்தி குறைந்து போயுள்ளது.
சென்ற பிப்ரவரி மாதத்தில் மொத்த விலை குறியீட்டு எண் அடிப்படையில் கணக்கிடப்படும், நாட்டின் பொது பணவீக்கம் 8.31 சதவீதமாக அதிகரித்திருந்தது. இது, சென்ற ஜனவரி மாதத்தில், 8.23 சதவீதம் என்ற அளவில் குறைந்து காணப்பட்டது. நடப்பு மார்ச் மாத இறுதியில் பணவீக்கம் 8 சதவீதமாக இருக்கும் என ரிசர்வ் வங்கி மதிப்பிட்டுள்ளது. முன்பு இது, 7 சதவீதமாக இருக்கும் என மதிப்பீடு செய்யப்பட்டிருந்தது.
சென்ற 2010ம் ஆண்டு உணவுப் பொருள்களுக்கான பணவீக்கம் 20 சதவீதம் என்ற அளவில், மிகவும் அதிகரித்து காணப்பட்டது. இது, தற்போது 9.52 சதவீதம் என்ற அளவில் குறைந்துள்ளது என்றாலும், இது, மத்திய அரசு மற்றும் ரிசர்வ் வங்கியின் மதிப்பீட்டை விட அதிகம் என கருதப்படுகிறது.
ரிசர்வ் வங்கி, வங்கிகளுக்கான வட்டி விகிதத்தை 0.25 சதவீதம் உயர்த்தியுள்ளதை அடுத்து வீட்டு வசதி மற்றும் மோட்டார் வாகன கடன்களுக்கான வட்டி விகிதம் மேலும் உயரும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
ஜப்பானின் நிலநடுக்கம் மற்றும் சுனாமியால் அந்நாடு மிகவும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது. இந்நிலையில், அணு உலைகள் வெடிப்பாலும் அதிக இடர்பாடு ஏற்பட்டுள்ளது. ஜப்பானில் ஏற்பட்டுள்ள இயற்கை சீற்றத்தால், உருவாகியுள்ள நெருக்கடி நிலை, இந்தியப் பொருளாதாரத்தில் எந்த அளவிற்கு, தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது குறித்து, தற்போது கருத்து தெரிவிக்க இயலாது.
இருப்பினும், ஜப்பான் நாட்டின் அரசும், அந்நாட்டின் மத்திய வங்கியும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. இதனால், அந்நாடு விரைந்து இயல்பு நிலைக்கு திரும்பும் என ரிசர்வ் வங்கி
தெரிவித்துள்ளது.ஜப்பான் நாட்டின் அணு உலைகள் வெடிப்பால், மின் உற்பத்தி தடைப்பட்டுள்ளது. அதனை ஈடு செய்ய, ஜப்பான் அரசு அனல் மின் உற்பத்தி திட்டங்கள் வாயிலாக, மின் உற்பத்தியை அதிகரிக்க வேண்டும்.இதனால், சர்வதேச அளவில், பெட்ரோலிய பொருள்களின் விலை உயர வாய்ப்புள்ளது. ஜப்பான் நாட்டின் மத்திய வங்கியான பேங்க் ஆப் ஜப்பான், அந்நாட்டில் பணப்புழக்கத்தை அதிகரிக்கும் வகையில், 4,300 கோடி டாலரை (ஒரு லட்சத்து 97 ஆயிரத்து 800 கோடி ரூபாய்) புழக்கத்திற்குவிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.சர்வதேச சந்தையில், கச்சா எண்ணெய் விலை உயர்ந்து வருவதால், உள்நாட்டில், பெட்ரோலிய பொருள்களின் விலை உயரக்கூடும் என்ற அச்சப்பாடு உள்ளது. இதனால், இதரப் பொருள்களின் விலையும் அதிகரிக்கக்கூடும்.
எனவே, ரிசர்வ் வங்கி பணவீக்கத்தை கட்டுக்குள் கொண்டு வரும் வகையில், வரும் ஏப்ரல் மாதத்தில் அதன் நிதி, ஆய்வறிக்கையில், வங்கிகளுக்கான வட்டி விகிதத்தை மேலும் உயர்த்தக்கூடும் என சந்தை வட்டாரத்தினர் கருத்து தெரிவித்தனர்.இதுகுறித்து தனியார் துறை வங்கியின் உயரதிகாரி ஒருவர் கூறும்போது, ‘ ரிசர்வ் வங்கியின் வட்டி விகித உயர்வு சந்தை மதிப்பீட்டை ஒட்டியே உள்ளது.
நாட்டின் பொருளாதார வளர்ச்சி பாதிக்கப்படாமல், பணவீக்கத்தை குறைப்பதற்கு, இது தான் வழி. பணவீக்கத்தை பொறுத்து, ரிசர்வ் வங்கி, வரும் நிதியாண்டில், இக்கடன் விகிதத்தை 0.50 -0.75 சதவீத அளவிற்கு உயர்த்தக்கூடும்’ என்று தெரிவித்தார்.
Leave a Reply