தமிழக சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிடும் 160 வேட்பாளர்களின் பட்டியல் நேற்று முன் தினம் வெளியிடப் பட்டது.
அதில் கூட்டணியில் இடம் பெற்றுள்ள தே.மு.தி.க., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு, மூவேந்தர் முன்னேற்றக் கழகம், பார்வர்டு பிளாக் ஆகிய கட்சிகளின் தொகுதிகளும் இடம் பெற்றிருந்தன.
இதனால் அ.தி.மு.க. கூட்டணி கட்சித் தலைவர்கள் அதிருப்தி அடைந்தனர். தே.மு.தி.க., மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்டு உள்பட 6 கட்சித் தலைவர்கள் இது தொடர்பாக நேற்று இரண்டு தடவை சந்தித்துப் பேசினார்கள். இதையடுத்து இந்த 6 கட்சிகளும் ஒருங்கிணைந்து 3-வது அணி அமைக்கப் போவதாக தகவல்கள் வெளியானது.
இது அ.தி.மு.க. தலைவர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கூட்டணியில் ஏற்பட்டுள்ள தொகுதி பங்கீடு சிக்கலை தீர்க்கும் வகையில் ஜெயலலிதா தன் தேர்தல் பிரசார பயணத்தை ரத்து செய்தார். நேற்றிரவு அவர் அ.தி.மு.க. மூத்த தலைவர்களுடன் ஆலோசனை நடத்தினார். அதில் முக்கிய முடிவுகள் எடுக்கப் பட்டதாகத் தெரிகிறது.
ஜெயலலிதா அறிவுறுத்தலின் பேரில் அ.தி.மு.க. மூத்த தலைவர்கள் இன்று தே.மு. தி.க., மற்றும் இடதுசாரி கட்சி தலைவர்களுடன் சமரசப் பேச்சு நடத்தினார்கள் என்று கூறப்படுகிறது. அப்போது கூட்டணி கட்சிகள் கேட்ட தொகுதிகளை விட்டுக் கொடுக்க அ.தி.மு.க. தலைவர்கள் சம்மதம் தெரிவித்ததாக தெரிகிறது.
இதற்கிடையே கூட்டணியில் ம.தி.மு.க.வை சேர்த்து, அந்த கட்சிக்கு உரிய கவுரவம் அளிக்கும் வகையில் தொகுதிகளை கொடுக்க வேண்டும் என்றும் அ.தி.மு.க. தலைவர்களிடம் கூட்டணி கட்சி தலைவர்கள் கோரிக்கை வைத்துள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்து அ.தி.மு.க. தலைவர்கள் பரிசீலிப்பதாக கூறி உள்ளனர். எனவே இன்று அ.தி. மு.க. கூட்டணியில் தொகுதி பங்கீட்டில் சமரசம் ஏற்படுமா? என்பது தெரிய வரும்.
Leave a Reply