பிரசாரத்திற்கு சோனியா, மன்மோகன் வருவது உறுதி செய்யப்படவில்லை: கருணாநிதி

posted in: அரசியல் | 0

சென்னை : “”தேர்தல் பிரசாரத்திற்கு காங்கிரஸ் தலைவர் சோனியா, பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோர் வருகை இன்னும் உறுதிச் செய்யப்படவில்லை,” என, முதல்வர் கருணாநிதி கூறினார்.

தேர்தல் பிரசாரத்திற்கு இன்னும் குறைவான நாட்களே உள்ள நிலையில், தமிழக சட்டசபை தேர்தல் பிரசாரத்திற்கு,சோனியா, மன்மோகன் சிங் ஆகியோர் வருகை இன்னும் உறுதி செய்யப்படாததால், அவர்கள் பிரசாரத்தில் பங்கேற்பார்களா என்ற கேள்வி, தி.மு.க., கூட்டணி கட்சிகளின் தொண்டர்கள் மத்தியில் எழுந்துள்ளது.”2ஜி’ ஸ்பெக்ட்ரம் விவகாரம், தி.மு.க., – காங்கிரஸ் தொகுதி பங்கீட்டில் ஏற்பட்ட முரண்பாடுகள் போன்ற காரணங்களால், சட்டசபை தேர்தலுக்கான பிரசாரத்தில் சோனியா மற்றும் மன்மோகன் சிங் பங்கேற்பார்களா என்ற ஐயமும் தொண்டர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.இந்நிலையில், தி.மு.க., தலைவர் கருணாநிதி தலைமையில், கூட்டணி கட்சி தலைவர்களின் ஆலோசனை கூட்டம் அறிவாலயத்தில், நேற்று மாலை நடந்தது. இக்கூட்டத்தில், தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலு, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ், விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன், கொங்கு நாடு முன்னேற்ற கழகத்தின் தலைவர் ராமசாமி, பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் தனபாலன், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தலைவர் காதர் மொய்தீன், மூவேந்தர் முன்னேற்ற கழக தலைவர் ஸ்ரீதர் வண்டையார், திராவிட கழக தலைவர் கி.வீரமணி, எம்.ஜி.ஆர் கழக தலைவர் ஆர்.எம்.வீரப்பன் ஆகியோர் பங்கேற்றனர்.

கூட்டத்திற்கு பின், முதல்வர் கருணாநிதி நிருபர்களிடம் கூறும் போது, “”வரும் 23ம் தேதி திருவாரூரில் கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்கும் பொதுக்கூட்டம் நடை பெறுகிறது.தேர்தல் பிரசாரத்திற்கு சோனியா மற்றும் பிரதமர் மன்மோகன் சிங்கின் தமிழக வருகை இதுவரை உறுதி செய்யப்படவில்லை,” என்றார்.

கூட்டணி கட்சி தலைவர்கள் ஆலோசனை கூட்டத்தில், பிரசாரத்தின் போது முன் வைக்க வேண்டிய விஷயங்கள் குறித்தும், தேர்தல் பணியாற்றுவது குறித்தும் விவாதிக்கப்பட்டதாக தெரிகிறது. 234 தொகுதிகளிலும், வார்டு வாரியாக கூட்டணி கட்சி தொண்டர்கள் கூட்டங்களை நடத்துவதும், கடந்த ஐந்தாண்டுகளில் தி.மு.க., அரசு நிறைவேற்றிய திட்டங்களை மக்கள் மத்தியில் எடுத்துச் சொல்வது குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும், தி.மு.க., தேர்தல் அறிக்கையை அனைத்தும் கட்சிகளும் பிரசாரத்தின் போது முன்னிலைப்படுத்த வேண்டுமென கேட்டுக் கொண்டதாகவும் தெரிகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *