சென்னை : தேர்தல் அறிவிப்புக்கு முன் ஓட்டுனர் இடமாற்றம் செய்யப்பட்டதால், அவரை பணியில் இருந்து விடுவிக்குமாறு, சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
கோவை மாவட்டம், குனியமுத்தூரைச் சேர்ந்த ஓட்டுனர் வி.ரவி தாக்கல் செய்த மனுவை, நீதிபதி என்.பால்வசந்தகுமார் விசாரித்தார். மனுதாரர் சார்பில் வக்கீல் ஜார்ஜ் வில்லியம்ஸ் ஆஜரானார். மனுவை விசாரித்த நீதிபதி என்.பால்வசந்தகுமார் பிறப்பித்த உத்தரவு:
போக்குவரத்துக் கழகம் சார்பில் ஆஜரான வக்கீல் கனகராஜ், “தேர்தல் அறிவிப்பு வெளியிடப்பட்டு விட்டதால், இடமாறுதல் உத்தரவை அமல்படுத்த முடியவில்லை’ என, தெரிவித்துள்ளார். இடமாறுதல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டு நீண்ட காலத்துக்குப் பின் தான், தேர்தல் அறிவிப்பு வெளியிடப்பட்டது. ஜனவரி 13ம் தேதி இடமாறுதல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. மார்ச் மாதத்தில் தான் தேர்தல் அறிவிப்பு வெளியிடப்பட்டது.
கடந்த ஜனவரி மாதமே இடமாறுதல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டு விட்டதால், மனுதாரரை பணியில் இருந்து விடுவிக்க ஒண்டிப்புதூர் கிளை மேலாளருக்கு எந்த தடையும் இல்லை. எனவே, ஒரு வாரத்துக்குள் பணியில் இருந்து விடுவித்து, ஒண்டிப்புதூர் கிளை மேலாளர் உத்தரவிட வேண்டும். இவ்வாறு நீதிபதி என்.பால்வசந்தகுமார் உத்தரவிட்டுள்ளார்.
ஐகோர்ட்டில் ரவி தாக்கல் செய்த மனுவில், “குடும்ப சூழ்நிலை காரணமாக ஒண்டிபுதூர் கிளையில் இருந்து மருதமலை கிளைக்கு இடமாற்றம் செய்ய கோரினேன். அதற்கு கோவை மாவட்ட பொது மேலாளர் அனுமதியளித்தார். ஆனால், ஒண்டிபுதூர் கிளையில் இருந்து என்னை விடுவிக்கவில்லை. அதனால், மருதமலை கிளையில் பணியில் சேர முடியவில்லை. பணியில் இருந்து விடுவிக்க ஒண்டிப்புதூர் கிளை மேலாளருக்கு உத்தரவிட வேண்டும்’ என கூறியுள்ளார்.
Leave a Reply