லிபியா மீது ஐந்து நாடுகள் குண்டு மழை, பலி 98 : கடாபி இன்னமும் கர்ஜனை

posted in: உலகம் | 0

பெங்காசி : அமெரிக்கா தலைமையிலான ஐந்து நாடுகளின் போர் விமானங்கள், லிபியா மீது குண்டு வீசி தாக்குதலைத் துவக்கியுள்ளன.


இதற்கு இந்தியா, சீனா, ரஷ்யா, ஜெர்மனி மற்றும் வெனிசுலா நாடுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. அமெரிக்காவை எதிர்த்து மிக நீண்ட போரை, தான் துவக்கி விட்டதாக, லிபிய தலைவர் மும்மர் கடாபி ஆவேசமாக அறிவித்துள்ளார்.

லிபியாவில், அதன் தலைவர் மும்மர் கடாபி நாட்டை விட்டு வெளியேறக் கோரி, கடந்த பிப்வரி 15ம் தேதி தொடங்கிய ஆர்ப்பாட்டம், நாளடைவில், கடாபி ஆதரவாளர்கள் மற்றும் எதிர்ப்பாளர்களுக்கு இடையிலான மோதலாக மாறி, இறுதியில் போராக உருவாகியது. இதையடுத்து, எதிர்ப்பாளர்கள் கிழக்குப் பகுதியின் பெங்காசி உள்ளிட்ட பல்வேறு நகரங்களைத் தங்கள் வசம் கொண்டு வந்தனர். மேலும், தலைநகர் டிரிபோலி அருகில் உள்ள நகரங்களையும் கைப்பற்றினர். ஆனால், தனது நவீன ரக போர் விமானங்கள் மூலம் எதிர்ப்பாளர்கள் வசம் இருந்த நகரங்கள் அனைத்தையும் கைப்பற்றிய கடாபி ராணுவம், கடந்த 17ம் தேதி, பெங்காசி நகரை நெருங்கியது.

ஐ.நா., தீர்மானம்: கடந்த 17ம் தேதி கூடிய ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலில், போர் விமானங்கள் பறக்கத் தடை கொண்டு வரப்பட்டது. இதில் இந்தியா, சீனா, ரஷ்யா, ஜெர்மனி மற்றும் பிரேசில் போன்ற நாடுகள் ஓட்டளிக்கவில்லை. தொடர்ந்து 18ம் தேதி, கடாபி திடீர் போர் நிறுத்தம் அறிவித்தார். இந்த அறிவிப்புக்குப் பின், அவரது படைகள் பெங்காசியில் தாக்குதல் நடத்தின. இதனால், லிபியா மீதான ராணுவ நடவடிக்கை குறித்து ஆலோசித்த ஐ.நா.பாதுகாப்பு கவுன்சில், லிபியா மீது ராணுவ நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று தீர்மானித்தது. இத்தீர்மானத்தை எதிர்த்த ஜெர்மனி, ராணுவ நடவடிக்கையில் தான் பங்கு பெறப்போவதில்லை என்று விலகி விட்டது.

“ஆபரேஷன் ஒடிசி டான்’ : இதையடுத்து அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், இத்தாலி மற்றும் கனடா ஆகிய ஐந்து நாடுகளின் போர் விமானங்கள், கடற்படைகள் மத்திய தரைக்கடலில் தயார் நிலையில் வைக்கப்பட்டன. நேற்று முன்தினம் இரவு முதல் லிபியா மீது, இந்த ஐந்து நாடுகள் கூட்டணியின் போர் விமானங்கள் குண்டு வீசி தாக்குதலைத் துவக்கின.

இந்த ராணுவ நடவடிக்கைக்கு, “ஆபரேஷன் ஒடிசி டான்’ என்று பெயரிடப்பட்டுள்ளது. லிபியாவின் கடற்கரையோரத்தில் உள்ள முக்கியமான 20 இடங்களின் மீது நேற்று, 112 “டோமாஹாக்’ ஏவுகணைகள் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டது. “இதன் மூலம் லிபிய போர் விமானங்கள் பறக்க வழிவகை செய்யப்படும்; லிபிய மக்கள் காப்பாற்றப்படுவர்’ என்று அமெரிக்கா கூறியுள்ளது.

லிபியா மீதான போர் துவங்கியதை அடுத்து, பெங்காசியில் இருந்து நூற்றுக்கணக்கான மக்கள் எகிப்து எல்லையை நோக்கி வெளியேறத் துவங்கியுள்ளனர். அமெரிக்க கூட்டணிப் படைகள், மக்கள் வாழும் குடியிருப்புகள் மீது தாக்குதல் நடத்தியுள்ளதாகவும், இதுவரை 98 பேர் பலியானதாகவும் லிபியா குற்றம் சாட்டியுள்ளது.

கடாபி ஆவேசம்: தாக்குதல் துவங்கியதையடுத்து நேற்று, லிபிய அரசு “டிவி’க்கு தொலைபேசி மூலம் பேட்டியளித்த கடாபி,”அமெரிக்கா, பிரான்ஸ், பிரிட்டன் நாடுகள் காலனி மனப்பான்மை கொண்டவை. அவை மீண்டும் சிலுவைப் போரைத் துவக்கியுள்ளன. இப்போது லிபியாவின் ஆயுதக் கிடங்கை அதன் மக்களுக்குத் திறந்து விட வேண்டிய நேரம் வந்து விட்டது. அமெரிக்காவுக்கு எதிரான மிக நீண்ட போரை லிபியா துவக்கி விட்டது’ என்று ஆவேசமாக முழங்கினார்.

உலக நாடுகள் எதிர்ப்பு: லிபியா மீதான அமெரிக்காவின் போர் குறித்து, சீன வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,”லிபியா மீதான பன்னாட்டு ராணுவ நடவடிக்கை குறித்து சீனா வருந்துகிறது’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. லிபியா மீதான ராணுவ நடவடிக்கை குறித்து வருத்தம் தெரிவித்துள்ள ரஷ்ய வெளியுறவு அமைச்சகம், “அப்பாவி மக்கள் கொல்லப்படுவதைத் தடுக்கும் விதத்தில் இருதரப்பினரும் உடனடியாக போர் நிறுத்தத்தைக் கொண்டு வரவேண்டும்’ என்று கூறியுள்ளது.

தாக்குதல் ஏன்? : வெனிசுலா அதிபர் ஹ்யூகோ சாவேஸ் அளித்த பேட்டியில், “அமெரிக்கக் கூட்டணி, லிபியாவின் எண்ணெய் வளத்தை கைப்பற்ற இந்தத் தாக்குதலை துவக்கியுள்ளது’ என்று சாடியுள்ளார்.

ஆப்ரிக்க யூனியன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,”லிபிய பிரச்னைக்கு ஆப்ரிக்காவில் தான் தீர்வு காணப்பட வேண்டும். உடனடியாக ராணுவ நடவடிக்கை நிறுத்தப்பட வேண்டும்’ என்று கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

லிபியா மீதான ராணுவ நடவடிக்கைக்கு, இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *