வெஸ்ட் இண்டீஸை வீழ்த்தியது இந்தியா- காலிறுதியில்ஆஸி.யுடன் மோதல்

சென்னை: சென்னையில் நேற்று நடந்த மேற்கு இந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான போட்டியில் ஒரு வழியாக வெற்றி பெற்ற இந்தியா , காலிறுதிப் போட்டியில் வலிமையான ஆஸ்திரேலியாவை சந்திக்கிறது.

நேற்றையப் போட்டியைப் பார்த்த அத்தனை இந்தியர்களுக்கும் ஒருவிதமான ‘கவலை’ இருந்தது. அதே கவலை இந்திய ‘வீரர்களுக்கும்’ இருந்திருக்கும் போல. அதனால்தான் தோற்றுப் போவது போலவே ஆடினார்கள். ஆனால் அதையும் ‘மீறி’ வெற்றி பெற்று விட்டனர்.
கவலைக்குக் காரணம் – இந்தப் போட்டியில் வெற்றி பெற்றால் காலிறுதிப் போட்டியில் வலிமையான ஆஸ்திரேலியாவை சந்திக்க வேண்டும் என்பதாகத்தான் இருந்திருக்கும். அதேசயம் தோற்றிருந்தால் இலங்கையை சந்தித்திருக்கலாம்.

இதனால்தானோ என்னவோ பேட்டிங்கின்போது பல முக்கிய வீரர்கள் ‘சொதப்பலாக’ ஆடினர். இதனால் 300க்கும் மேல் போயிருக்க வேண்டிய ஸ்கோர் 268 ரன்களுடன் நின்று போய் விட்டது.

நேற்றைய ஆட்டத்தில் யுவராஜ் சிங் மட்டுமே சிறப்பாக ஆடி சதம் போட்டார். அதேபோலை விராத் கோலி அரை சதத்தைக் கடந்தார். மற்றவர்கள் எல்லாம் வேண்டா வெறுப்பாக விளையாடியது போலவே இருந்தது.

குறிப்பாக கடைசி பத்து ஓவர்களில் வழக்கம் போல ரன் குவிக்காமல் விக்கெட்டை இழந்து இந்தியா திணறியது.

பின்னர் ஆட வந்த மேற்கு இந்தியத் தீவுகள் அணி வெற்றியை இலக்காக கொண்டு ஆடியது. அந்த அணியின் டேவான் ஸ்மித் சிறப்பாக ஆடி 8 1 ரன்களைக் குவித்தார். ஆனால் பின்னர் வந்தவர்கள் சற்று சொதப்பினர். இருப்பினும் ஸ்மித்தும், சர்வானும் சேர்ந்து விளையாடிய விதம், மேற்கு இந்தியத் தீவுகள் அணி வெல்லுமோ என்ற நிலையை ஏற்படுத்தியது.

இருப்பினும் இந்தியப் பந்து வீச்சாளர்கள் திடீர் சுதாரிப்புடன் பந்து வீசி அவர்களை சமாளித்து அடுத்தடுத்து சரித்தனர். இதனால் மேற்கு இந்தியத் தீவுகள் அணி 150 ரன்களைத் தாண்டியதும் மளமளவென சரிந்தது. இறுதியில் 43 ஓவர்களில் 188 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்து தோல்வியைத் தழுவியது மேற்கு இந்தியத் தீவுகள்.

யுவராஜ் சிங் ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார். இவர் 113 ரன்கள் எடுத்ததோடு, 2 விக்கெட்களையும் வீழ்த்தி அசத்தினார்.

காலிறுதியில் யார் யார்?

மார்ச் 23ம் தேதி காலிறுதிப் போட்டிகள் தொடங்குகின்றன. முதல் போட்டியில் பாகிஸ்தானும், மேற்கு இந்தியத் தீவுகளும் மிர்பூரில் சந்திக்கின்றன.

24ம் தேதி அகமதாபாத்தில் நடைபெறும் போட்டியில், இந்தியாவும், ஆஸ்திரேலியாவும் மோதவுள்ளன.

25ம் தேதி மிர்பூரில் நடைபெறும் போட்டியில், தென் ஆப்பிரிக்காவும், நியூசிலாந்தும் சந்திக்கவுள்ளன.

26ம் தேதி கொழும்பில் நடைபெறும் போட்டியில் இலங்கையும், இங்கிலாந்தும் சந்திக்கின்றன.

அரை இறுதி:

29ம் தேதி முதல் அரை இறுதிப் போட்டி கொழும்பிலும், 30ம் தேதி 2வது அரை இறுதிப் போட்டி மொஹாலியிலும் நடைபெறவுள்ளன.

இறுதிப் போட்டி:

ஏப்ரல் 2ம் தேதி இறுதிப் போட்டி மும்பை வாங்கடே மைதானத்தில் நடைபெறும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *