தூத்துக்குடி: தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகம், சரக்கு பெட்டகங்களை கையாள்வதில் புதிய சாதனை படைத்துள்ளது.
இத்துறைமுகத்தில், நேற்று வரை 4,49,514 டி.இ.யூ., சரக்கு பெட்டகங்களில் சரக்குகள் கையாளப்பட்டுள்ளன. இதன் மூலம், மத்திய அரசால் நிர்ணயிக்கப்பட்ட 4,45,000 டி.இ.யூ., சரக்கு பெட்டகங்களை கையாள வேண்டுமென்ற இலக்கு தாண்டப்பட்டுள்ளது. மேலும், 2007 – 2008ம் நிதியாண்டு முழுமைக்கும், சரக்கு பெட்டக முனையத்தில் அதிகபட்சமாக கையாளப்பட்ட 4,50,398 டி.இ.யூ., என்ற சாதனையை முறியடித்து, புதிய சாதனை படைக்கப்பட்டுள்ளது. இங்குள்ள சரக்கு பெட்டக முனையத்தில் கிரானைட் பொருட்கள், பாலியஸ்டர் பொருட்கள், முந்திரிக்கொட்டை, பஞ்சு, கழிவு காகிதங்கள், ரப்பர் பொருட்கள், பஞ்சாலைகளுக்குத் தேவையான இயந்திரப்பொருட்கள் போன்றவை சரக்கு பெட்டகங்கள் மூலம் இறக்குமதி செய்யப்படுகின்றன. மேலும், சீனி, காகிதப் பொருட்கள், மக்காச்சோளம், கிரானைட் கற்கள், கார்னெட், இலுமினைட் தாது, பின்னலாடைகள், பஞ்சு நூல், பருத்தி ஆடைகள், செம்புப் பொருட்கள், முட்டை, குளிரூட்டப்பட்ட கடல் உணவுப் பொருட்கள், தீப்பெட்டி, உப்பு, டயர்கள் போன்றவை சரக்கு பெட்டகங்களின் மூலம் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இத்தகவலை, துறைமுக தலைவர் சுப்பையா செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.
Leave a Reply