ஈரோடு : “”அக்கால காங்கிரஸ் தலைவர்கள் தூய மனமும், தூய சிந்தனையுடன் இருந்தனர். ஆனால், இன்றைய தலைவர்கள் கட்டிய மனைவியையே ஏமாற்றும் நிலையில் உள்ளனர்,” என, ஈரோட்டில் முன்னாள் மத்திய அமைச்சர் இளங்கோவன் பேசினார்.
ஈரோட்டில் கோவை செழியன் வாழ்க்கை வரலாறு குறித்த, “வணங்காமுடி வாழ்க்கை’ நூல் வெளியீட்டு விழா நடந்தது.
நூலை வெளியிட்டு, முன்னாள் மத்திய இணையமைச்சர் இளங்கோவன் பேசியதாவது: எனக்கு தெரிந்த, உயர்ந்த 50 தலைவர்களில் முதலிடத்தில் கோவை செழியன் உள்ளார். என் பள்ளிப் பருவத்தில் அவரை தினமும் பார்ப்பேன். சிலரை பார்த்தவுடனேயே பாசம் வரும். சிலரை பார்க்காமலேயே கோபம் வரும்.பார்த்தவுடன் பாசம் வரும் தலைவர் கோவை செழியன். எந்த இடத்திலும் தயங்காமல் தன் மனதில் உள்ள கருத்தை பேசுவார். அவரிடம் தான், மனதில் உள்ளதை அப்படியே பேசும் கலையைக் கற்றுக் கொண்டேன்.எம்.ஜி.ஆர்., காலத்தில் சினிமா உலகம் மட்டுமல்லாமல் அரசியலையும் இறுதி வரை தனது கைக்குள் வைத்திருந்தார். இன்று ஆட்சியில் உள்ளவர்கள் ஒருவரை பிடிக்காவிட்டால் மற்றவர்களுக்கு ஓட்டு போடுங்கள் என்று கூறும் நிலை உள்ளது. ஆனால், மக்கள் சக்தியை எம்.ஜி.ஆர்., கையில் வைத்திருந்தார்.
“திராவிட நாடு வேண்டும்’ என, தமிழர் தேசிய கட்சி கேட்டது. நாட்டில் பிரிவினை குறித்து பேசினால், நடவடிக்கை எடுக்கப்படும் என, அரசு உத்தரவிட்டது. அப்போதும் தேசியம் குறித்து கோவை செழியன் பேசினார். 1962ல் தேர்தலில் என் தந்தை போட்டியிட்ட போது, பல கார்களை கோவை செழியன் அனுப்பினார். அவர் முதல்வராக நாடு கொடுத்து வைக்கவில்லை.இன்று நாளிதழ்களில் படித்திருப்பீர்கள்.இன்றைய தலைவர்கள் மக்களை மட்டும் ஏமாற்றவில்லை; ஒரு தலைவர் தன் மனைவியையே ஏமாற்றிவிட்டார். நல்ல தூய்மையான சிந்தனையாளர்கள் கட்சிக்கு வர வேண்டும். போராட்டம் நடத்தியும் ஒன்றும் நடவடிக்கை இல்லை என இருக்கிறீர்கள். விரைவில் கரு மேகங்கள் கூடி இருள் சூழ்ந்து, மழை வரும். அப்போது நல்லது நடக்கும்.இவ்வாறு இளங்கோவன் பேசினார்.
Leave a Reply