யாங்கூன்: மியான்மரில் கடந்த 20 ஆண்டுகளாக நிலவி வந்த ராணுவ ஆட்சி நேற்று முடிவுக்கு வந்தது. இதையடுத்து, புதிய அதிபர் தலைமையிலான அமைச்சரவை பொறுப்பேற்றுக் கொண்டது.
மியான்மரில் தான் ஷ்வே தலைமையிலான ராணுவ ஆட்சி கடந்த 20 ஆண்டுகளாக நடந்து வந்தது. கடந்தாண்டு நவம்பரில் பொதுத் தேர்தல் நடத்தப்பட்டது. இதில், ராணுவத்தின் ஆதரவு பெற்ற ஐக்கிய ஒற்றுமை மேம்பாட்டுக் கட்சி வெற்றி பெற்றது. அதைத் தொடர்ந்து, நேற்று ராணுவ ஆட்சி முடிவுக்கு வந்தது. புதிய அதிபராக தெய்ன் செய்ன் பொறுப்பேற்றுக் கொண்டார். அவருடன் இரண்டு துணை அதிபர்கள், 58 அமைச்சர்கள் உள்ளிட்ட அமைச்சரவையும் நேற்று பொறுப்பேற்றுக் கொண்டது. ராணுவ ஆட்சித் தலைவரான தான் ஷ்வே, எதிர்காலத்தில் என்னென்ன பொறுப்புகள் வகிப்பார் அல்லது ஆட்சிக்கு ஆலோசகராக இருப்பாரா எனப் பல்வேறு சந்தேகங்கள் எழுந்துள்ளன. தற்போது அவர் ராணுவத் தலைவர் பதவியில் இருந்து இறக்கப்பட்டுள்ளார். அவரது பதவிக்கு ஜெனரல் மின் அவுங் ஹைங் நியமிக்கப்பட்டுள்ளார். இந்தப் புதிய அரசு பொறுப்பேற்றதன் மூலம் மியான்மரில் ஜனநாயகம் மலரும் என்று நிபுணர்கள் சிலர் கருதுகின்றனர். ஆனால் அமைச்சர்களில் பலர், ராணுவத்தின் முன்னாள் ஜெனரல்கள் என்பதால், இதுவும் ராணுவ ஆட்சியின் நீட்சியாகவே இருக்கும் என்று பலர் கருத்து தெரிவித்துள்ளனர்.
Leave a Reply