மாணவி ஜெயலலிதாவின் ”ஈ அடிச்சான் காப்பி”-ப.சிதம்பரம் கிண்டல்

posted in: அரசியல் | 0

ஸ்ரீபெரும்புதூர்: திமுக கொடுத்த வாக்குறுதிகளை முழுமையாக நிறைவேற்றியிருப்பதால் நெஞ்சை நிமிர்த்தி மீண்டும் வாக்கு கேட்கிறோம் என்று மத்திய உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம் கூறினார்.

ஸ்ரீபெரும்புதூர் காங்கிரஸ் வேட்பாளர் யசோதாவுக்கு ஆதரவாக மாங்காடு, குன்றத்தூர் ஆகிய பகுதிகளில் வாக்கு சேகரித்து சிதம்பரம் பேசுகையில்,

கடந்த 5 ஆண்டுகால திமுக ஆட்சியில் கொடுத்த வாக்குறுதிகளை முழுமையாக நிறைவேற்றி இருப்பதால் நாங்கள் தலை நிமிர்ந்து, நெஞ்சை நிமிர்த்தி மீண்டும் வாக்கு கேட்கிறோம்.

தேர்தல் வாக்குறுதியில் கூறியபடி, ரூ.2க்கு ஒரு கிலோ அரிசி, டிவி, இலவச காஸ், வீட்டு மனைப்பட்டா, நிலம் இல்லாதவர்களுக்கு நிலம் என சொன்னதை செய்தது. ஆனால், அறிக்கையில் சொல்லாத கலைஞர் காப்பீடு திட்டம், 108 ஆம்புலன்ஸ், ரூ.1க்கு ஒரு கிலோ அரிசி என பல்வேறு திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

கடந்த தேர்தல் அறிக்கையை கிண்டல் செய்தவர்கள் இந்த முறை ”ஈ அடித்தான் காப்பி” அடிப்பதைப்போல் காப்பி அடித்துள்ளனர். இப்போது 10ம் வகுப்பு தேர்வுகள் நடந்து கொண்டுள்ளன.

படித்துவிட்டு வந்த மாணவர்கள் அவர்களாகவே தேர்வை எழுதுவார்கள், படிக்காமல் வந்த மக்கு மாணவர்கள் என்ன செய்வார்கள். பக்கத்தில் உட்கார்ந்துள்ள நல்ல மாணவனின் விடைத்தாளைப் பார்த்துப் பார்த்து, காப்பி அடித்து தேர்வு எழுதுவார்கள். அதையே தான் ஜெயலலிதா செய்து வருகிறார்.

தான் காப்பி அடித்தது தெரியக் கூடாது என்பதற்காக, திமுகவின் தேர்தல் அறிக்கையை கொஞ்சம் திருத்தி எழுதி, அதை தன்னுடையது போல காட்ட முயன்றுள்ளார்.

தமிழகத்தில் உள்ள சில அரசியல் விமர்சகர்கள், தங்களை படித்த மேதாவியாக காட்டிக் கொள்ளும் ஒரு சிலர், 5 ஆண்டுகள் முதல்வராக இருந்த பின்பு தொடர்ந்து அடுத்த முறை முதல்வராக முடியாது என்கின்றனர்.

டெல்லியில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஷீலா தீட்சித், ஒரிஸ்ஸாவில் நவீன் பட்நாயக், அஸ்ஸாமில் தருன் கோகோய் ஆகியோர் எப்படி தொடர்ந்து முதலமைச்சராக ஆனார்களோ, அதே போல் கருணாநிதி மீண்டும் முதல்வர் ஆவார் என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *