பலகோடி ஆசை காட்டும் எஸ்.எம்.எஸ்.,கள்: உஷார்

posted in: மற்றவை | 0

tblsambavamnews_92192804814மதுரை: “”பல கோடி ரூபாய் பரிசுக்கு உங்கள் மொபைல் எண் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது,” எனக் கூறி பரவும் எஸ்.எம்.எஸ்.,களை நம்பி ஏமாறாமல், பொதுமக்கள் கவனமாக இருக்க வேண்டும். இன்டர்நெட்டில் இ-மெயில் அறிமுகமான காலத்திலேயே மோசடித்தனமும் அறிமுகமானது.


“”அமெரிக்காவில் நடத்தப்பட்ட மிகப்பெரிய லாட்டரி குலுக்கலில் உங்கள் இ-மெயில் முகவரி தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் நீங்கள் பெறப்போகும் பரிசுத் தொகை 45 கோடி ரூபாய். இந்தப் பணத்தை அனுப்பி வைக்க உங்களது வங்கிக் கணக்கு எண்ணைத் தாருங்கள். பணத்தை அனுப்பும் செலவாக ஐந்து லட்சம் ரூபாயை மட்டும் எங்களுக்கு நீங்கள் அனுப்பி வைத்தால் போதும்,” எனக் குறிப்பிடப்பட்டு இ-மெயில்கள் வந்துகொண்டிருந்தன.

மொபைல் போன்களின் புழக்கம் அதிகரித்த பிறகு தற்போது எஸ்.எம்.எஸ்.,கள் மூலம் பல கோடி ரூபாய்க்கு ஆசை காட்டப்படுகிறது. இந்த எஸ்.எம்.எஸ்.,களில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது: “”வாழ்த்துகள், 2009 சர்வதேச லைவ் போட்டியில் உங்களது மொபைல் எண்ணுக்கு 7 லட்சத்து 50 ஆயிரம் அமெரிக்க டாலர் (சுமார் 3 கோடியே 75 லட்சம் ரூபாய்) பரிசு விழுந்துள்ளது. உங்கள் இ-மெயில் முகவரி மற்றும் மொபைல் எண்ணை, “”கோக்மொபைல்டிரா@லைவ்.காம்” என்ற இணையதளத்திற்கு அனுப்புங்கள்,” என்று மட்டுமே குறிப்பிடப்பட்டுள்ளது.

சில எஸ்.எம்.எஸ்.,களில், “வாழ்த்துகள், இங்கிலாந்தில் நடந்த சர்வதேச மொபைல் எண்கள் பரிசுப் போட்டியில் ஐந்து லட்சம் டாலர் (இரண்டரை கோடி ரூபாய்) பரிசுக்கு உங்கள் எண் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இப்பணத்தைப் பெற உங்களது இ-மெயில் முகவரியை “”கிளெய்ம்29@லைவ்.சிஓ.யுகே” என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்,” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இதை நம்பி, அந்த இணையதளத்திற்குள் நுழைந்து, இ-மெயில் விலாசத்தைத் தந்தால் தொடர்ந்து உங்கள் இ-மெயில் விலாசத்திற்கு தொடர்ந்து மெயில்கள் வரத் துவங்கும். எல்லாமே ஆசை காட்டும் விதத்தில் அமையும். “”பணம் இங்கிலாந்தில் ஒரு வங்கியில் சிக்கிக் கொண்டுள்ளது. அதை விடுவிக்க, 10 லட்சம் ரூபாய் செலவாகும். அந்தப் பணத்தை மட்டும் எங்களுக்கு அனுப்பி வையுங்கள் அல்லது எங்கள் ஆட்கள் உங்களைத் தொடர்பு கொள்வர். அவர்களிடம் கொடுத்து விடுங்கள்” எனக் கூறப்பட்டிருக்கும்.

தப்பித்தவறி பணத்தைத் தந்துவிட்டால், அவ்வளவு தான்… நமக்கு எந்தக் கோடியும் கிடைக்காது; தெருக்கோடியில் நிற்க வேண்டியது தான். ஏற்கனவே பெங்களூரு, புதுச்சேரியில் சில படித்தவர்களே ஏமாந்து, பணத்தை இழந்து போலீசில் புகார் செய்துள்ளனர். இருப்பினும், ஆசை காட்டும் எஸ்.எம்.எஸ்.,கள் வருவது மட்டும் குறைந்தபாடில்லை. இனிமேலும் மோசடி எஸ்.எம்.எஸ்.,கள் பரவாமல் தடுக்க, மத்திய தொலைதொடர்புத் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *