பாலாற்றால் பாழாய் போனது மக்கள் வாழ்க்கை:வேலூர் மாவட்ட நிலவரம்

posted in: மற்றவை | 0

வேலூர் மாவட்டத்தில் தொகுதி மறுசீரமைப்புக்கு பின், 13 சட்டசபை தொகுதிகளே உள்ளன.

தற்போது, வேலூர், ஆற்காடு, ராணிப்பேட்டை, சோளிங்கர், அரக்கோணம் (தனி), காட்பாடி, கே.வி.குப்பம் (தனி), குடியாத்தம் (தனி), அணைக்கட்டு, ஆம்பூர், வாணியம்பாடி, ஜோலார்பேட்டை, திருப்பத்தூர் ஆகிய தொகுதிகள் உள்ளன.
வேலூர் மாவட்டத்தின் ஜீவாதார நதியாக பாலாறு உள்ளது. பாலாற்றில் உள்ள தண்ணீரை நம்பித் தான், 13 சட்டசபை தொகுதிகளிலும் விவசாயம், குடிநீர் பிரச்னை தீர்க்கப்பட்டு வந்தது. வாணியம்பாடி, ஆம்பூர், பேர்ணாம்பட்டு, ராணிப்பேட்டை பகுதிகளில் உள்ள நூற்றுக்கணக்கான தோல் தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர், சுத்திகரிக்கப்படாமல் பாலாற்றில் கொட்டப்படுவதால், நிலத்தடி நீர் மாசுபட்டு வருகிறது.
இந்த தண்ணீரை குடிப்பதால், ஆயிரத்துக்கு பத்து பேர், 25 விதமான நோய்களால் பாதிக்கப்படுவதாக, சுகாதாரத் துறையினர் கவலை தெரிவிக்கின்றனர். அசுத்தமான இடங்களின் பட்டியலில், ராணிப்பேட்டை உலகளவில் 8வது இடத்திலும், ஆம்பூர், வாணியம்பாடி 9வது இடத்திலும் உள்ளதாக, உலக சுகாதார நிறுவனம் பட்டியலிட்டுள்ளது.விரிஞ்சிபுரம், பள்ளிகொண்டா, ஆற்காடு, ராணிப்பேட்டை, வாலாஜா பேட்டை போன்ற பகுதியில் உள்ள பாலாற்றில், அளவுக்கதிகமாக மணல் எடுத்து கர்நாடக மாநிலத்துக்கு பகிரங்கமாக கடத்தி செல்லப்படுகிறது. தி.மு.க., அரசு பொறுப்பேற்ற பிறகு தான், பாலாறு நாசப்படுத்தப்பட்டதாக மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
அணைக்கட்டு சட்டசபை தொகுதியை தவிர, மீதமுள்ள தொகுதியில், தி.மு.க.,வை சேர்ந்தவர்கள், “சிட்டிங்’ எம்.எல்.ஏ,க்களாக உள்ளனர். இவ்வளவு பேர் இருந்தும், பாலாறு பிரச்னைக்கு, நிரந்தர தீர்வு காணவில்லை என்பதே மாவட்ட மக்களின் குற்றச்சாட்டு.தேர்தலில், பாலாறு பிரச்னை தி.மு.க., கூட்டணிக்கு பாதகமாக அமையுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. பாலாறு பிரச்னையை தீர்க்கக் கூடிய கட்சிக்கு மட்டுமே ஓட்டு என பெரும்பாலான மக்கள் கூறிவருகின்றனர். இதனால், தனித்தனி தொகுதிகளின் நிலைமையை தாண்டி, ஒட்டுமொத்த மாவட்ட முடிவாக, தேர்தல் தீர்ப்புகள் அமையலாம்.
வேலூர்: அ.தி.மு.க., சார்பில் டாக்டர் விஜய், காங்கிரஸ் சார்பில் ஞானசேகரன், பாரதிய ஜனதா சார்பில் டாக்டர் அரவிந்த் ரெட்டி ஆகியோர் களத்தில் உள்ளனர். வேலூரில், 10 நாட்களுக்கு ஒரு முறை தான் குடிநீர் வினியோகம் நடக்கிறது. தொகுதியில் நிலவும் இந்த கடுமையான குடிநீர் பற்றாக்குறையை முன்வைத்தே, அ.தி.மு.க., – பாரதிய ஜனதா வேட்பாளர்கள் தீவிர பிரசாரம் செய்து வருகின்றனர்.இருவரும் டாக்டர்கள் என்பதால், இருவரின் செல்வாக்கும் அதிகரித்துள்ளது. எம்.எல்.ஏ., ஞானசேகரன் வாங்கி குவித்துள்ள அளவுக்கதிமான சொத்துக்களை, தேர்தல் கமிஷனிடம் தெரிவிக்கவில்லை என்ற குற்றச்சாட்டு அவருக்கு மிகப் பெரிய பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. வெற்றி வாய்ப்பில் டாக்டர் விஜய் முந்தி வருகிறார்.
காட்பாடி: இத்தொகுதியில் அமைச்சர் துரைமுருகனுக்கு நிலவும் கடும் அதிருப்தியால், அ.தி.மு.க., வேட்பாளர் அப்பு என்கிற ராதாகிருஷ்ணனுக்கு நல்ல வரவேற்பு உள்ளது. காந்தி நகரில், 15 நாட்களுக்கு ஒரு முறை மட்டுமே தண்ணீர் விடும் நிலை நிலவுகிறது. கோஷ்டி பூசல்களை மறந்து அ.தி.மு.க.,வினர் ஒரே அணியில் பிரசாரம் செய்து வந்தாலும், அரசியல் அனுபவம் உள்ள துரைமுருகனை வெற்றி கொள்ள கடுமையாக போராட வேண்டியிருக்கும்.
ஆற்காடு: அ.தி.மு.க., சார்பில் சீனிவாசன், பா.ம.க., சார்பில் இளவழகன், பாரதிய ஜனதா சார்பில் தணிகாசலம் மட்டுமே களத்தில் உள்ளனர். தொகுதிக்கு “சிட்டிங்’ எம்.எல்.ஏ., இளவழகன் எதுவும் செய்யவில்லை என்ற அதிருப்தியால், அ.தி.மு.க., வேட்பாளர் சீனிவாசனுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.
ராணிப்பேட்டை: அ.தி.மு.க., சார்பில் முகமது ஜான், தி.மு.க., சார்பில் “சிட்டிங்’ எம்.எல்.ஏ., காந்தி போட்டியிடுகின்றனர். தொகுதியில் காந்தி மீது கடுமையான அதிருப்தி நிலவியபோதிலும், பணபலத்தால் பிரசார வியூகம் வகுத்துள்ளதை எதிர்கொள்ள முடியாமல் அ.தி.மு.க., வேட்பாளர் திணறுகிறார்.
சோளிங்கர்: இத்தொகுதியில், சிட்டிங் எம்.எல்.ஏ.,வான அருள் அன்பரசு, அவருக்கு போட்டியாக காங்கிரஸ் கட்சி மாவட்டத் தலைவர் முனிரத்தினம் சுயேச்சையாகவும், தே.மு.தி.க., சார்பில் மனோகரனும் களத்தில் உள்ளனர்.இதில், காங்கிரஸ் ஓட்டுகளை அருள் அன்பரசு, முனிரத்தினம் இருவரும் சரிசமமாக பிரிக்கின்றனர். அதே சமயம் தே.மு.தி.க., மனோகரன் தொகுதிக்கு புதியவர் என்பதாலும், வன்னியர்கள் வெற்றியை நிர்ணயிப்பவர்களாக இருப்பதாலும், தற்போதைய நிலையில் வன்னியரான அருள் அன்பரசு கொஞ்சம் முன்னணியில் இருக்கிறார். ஆனாலும், ஓட்டுப் பிளப்பால் தே.மு.தி.க., முந்திக் கொள்ளவும் வாய்ப்பு இருக்கிறது.- தொடர்ச்சி நாளை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *