ஒவ்வொரு இந்தியரின் மனதிலும் ‘டபுள் காட்’ போட்டு நிரந்தரமாக படுத்துக் கிடக்கிறார்கள் கபில்தேவின் ‘டெவில்கள்’. அந்த இடத்தைப் பிடிக்க இதுவரை யாரும் வரவில்லை. இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் என்றென்றும் மறக்க முடியாத அருமையான தருணம் அது.
‘மின்னோ’ என்று கூறப்படும் கத்துக் குட்டி அணிதான் அன்றைய இந்திய கிரிக்கெட் அணி. உலகப் பெரும் ஜாம்பவான் அணியாக அன்று திகழ்ந்தது மேற்கு இந்தியத் தீவுகள் அணி. இந்த அணிக்கு முன்பு இந்தியா அப்போது வெறும் ‘சுண்டைக்காய்’தான். கபில்தேவ், மொஹீந்தர் அமர்நாத், மதன்லால், சந்து, ரோஜர் பின்னணி, ஸ்ரீகாந்த் என இன்றைய ஜாம்பவான்கள் நிறைந்திருந்த அந்த அணி அக்காலத்தில் சுண்டைக்காய் அணிதான். கவாஸ்கரும் கூட அப்போது இந்திய அணியில்தான் இருந்தார்.
ஆனால் இந்த சுண்டைக்காய் அணி அன்று சிங்கத்தின் பிடரியைப் பிடித்து ஆட்டி, அலைக்கழித்து செய்த ‘அலப்பரை’யை இன்று வரை இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் மறக்கவில்லை.
1983ம் ஆண்டு உலகக் கோப்பை இந்திய கிரிக்கெட் ரசிகர்களின் மனதில் நிரந்தரமாக இடம் பிடித்து விட்ட ஒன்று. இந்தியா உலகக்கோப்பையை (புரூடென்ஷியல் கோப்பை) வென்றதனால் மட்டுமல்ல அதற்குக் காரணம். மாறாக, கபில்தேவ் என்ற அட்டகாசமான கேப்டனின் அசாத்திய திறமைக்குக் கொடுக்கும் மரியாதை அது. இன்றளவும் இந்திய ரசிகர்களுக்கு கேப்டன் என்றால் கபில்தேவ்தான், அதில் எந்த மாற்றமும் இருக்காது.
இந்தியா இதுவரை வென்று வைத்துள்ள ஒரே உலகக் கோப்பையை இந்தியாவுக்கு சொந்தமாக்க அன்று கபில்தேவும், அவரது டெவில் பட்டாளமும் (இதில் கவாஸ்கர் எந்த சீனிலும் வர மாட்டார், காரணம், அவரது ‘பங்களிப்பு’ அப்படி இருந்தது அப்போது) செய்த முயற்சிகள், உழைத்த உழைப்பு, வகுத்த வியூகங்கள், புத்திசாலித்தனம், சாதுரியம் அசாத்தியமானவை.
ஆயுதமே இல்லாத ஒரு நாடு, அணுகுண்டு வைத்துள்ள வல்லரசு நாட்டை வலியக்க போய் வம்பிழுத்து வெல்ல என்ன தைரியம் வேண்டுமோ, அதே தைரியத்துடன்தான் அன்று மேற்கு இந்தியத் தீவுகள் அணியை இறுதிப் போட்டியில் சந்தித்தது இந்தியா.
அப்போதெல்லாம் 60 ஓவர்களைக் கொண்டதாக இருந்தது ஒரு நாள் போட்டிகள். 1983ம் ஆண்டு ஜூன் மாதம் 25ம் தேதி லண்டன், லார்ஸ்ட் மைதானத்தில் இறுதிப் போட்டி. ஒட்டு மொத்த இந்தியாவும் நம்பவே முடியாத ஆச்சரியத்தில் அந்தப் போட்டியின் முடிவை எதிர்நோக்கியிருந்தது. காரணம், இறுதிப் போட்டியில் இந்தியா என்பதே அப்போது மிகப் பெரிய செய்தி. கபில்தேவ் அன் கோவின் அட்டகாச சாதனையை அப்போது வாய் வலிக்கப் பேசித் தீர்த்தது இந்தியா.
எப்படியோ இறுதிப் போட்டிக்கு வந்து விட்டபோதிலும், மேற்கு இந்தியத் தீவுகள் அணியை எப்படி இந்தியா சமாளிக்கப் போகிறதோ என்ற கவலைதான் அத்தனை இந்தியர்கள் மத்தியிலும். இருந்தாலும் கபில்தேவ் என்ற ஒற்றை மந்திரம் அத்தனை பேர் மனதிலும் ஏதோ ஒரு நம்பிக்கையை விதைத்திருந்தது.
டாஸ் போடப்பட்டது. வென்றார் மேற்கு இந்தியத் தீவுகள் அணியின் கேப்டன் கிளைவ் லாயிட். இதைப் பார்த்து இந்திய ரசிகர்கள் சற்றே மனம் தளர்ந்தனர். அடடா, டாஸ் போச்சே என்ற கவலை அது. ஆனாலும் நம்பிக்கை தொடர்ந்தது.
டாஸ் வென்ற லாயிட், இந்தியாவை முதலில் பேட் செய்யப் பணித்தார். அப்போதெல்லாம் மேற்கு இந்தியத் தீவுகள் அணியின் பந்து வீச்சாளர்களின் புயல் வேகத்தைப் பார்த்தால் பயத்தில் மூத்திரமே வந்து விடும், புதிய வீரர்களுக்கு. அப்படி ஒரு அசகாய சூரர்கள் அவர்கள்.
அவர்களுக்கு முன்பு எப்படி பேட் செய்ய முடியும் நம்மவர்களால்.அதுதான் நடந்ததும் கூட. தொடக்க ஆட்டக்கார்ரகளான கவாஸ்கரும், ஸ்ரீகாந்த்தும் தட்டுத் தடுமாறி ஆடினர். இதில் கவாஸ்கர் படு வேகமாக அவுட் ஆகி விட்டார் – வெறும் 2 ரன்களுடன்.
ஸ்ரீகாந்த் மட்டும் தாக்குப் பிடித்து 38 ரன்களைச் சேர்த்தார்- அது பின்னாளில் மிகப் பெரிய வரலாறாகப் போவதை உணராமல். மொஹீந்தர் அமர்நாத் தன் பங்குக்கு 26 ரன்களைச் சேர்த்தார். சந்தீப் பாட்டீல் 27, கபில் தேவ் 15, மதன் லால் 31, சையத் கிர்மானி 14, பல்வீந்தர் சந்து 11 என சீக்கிரமே சுருண்டு போக இந்தியா 54.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 183 ரன்களை மட்டுமே எடுத்தது.
ஆண்டி ராபர்ட்ஸ் 3, ஹோல்டிங் 2, லாரி கோமஸ் 2 விக்கெட்களை வீழ்த்தினர்.
வெகு எளிதான ஸ்கோர் என்பதால் படு ஹாயாக களம் இறங்கியது மேற்கு இந்தியத் தீவுகள் அணி. ஆனால் எடுத்த எடுப்பிலேயே அந்த அணிக்கு ஷாக் கொடுத்தார் சந்து. அவர் போட்ட பந்தில் 1 ரன் மட்டுமே எடுத்திருந்த கார்டன் க்ரீனிட்ஜ் ஆட்டமிழக்க சற்றே அதிர்ந்தது மேற்கு இந்தியத் தீவுகள் அணி. அதன் பிறகு ஹெய்ன்ஸ் கட்டையைப் போட ஆரம்பித்தார். ஆனாலும் அவர் நீண்ட நேரம் நீடிக்கவில்லை. 13 ரன்கள் எடுத்திருந்த அவரை பெவிலியனுக்கு அனுப்பி வைத்தார் மதன்லால்.
அதிரடி வீரர் ரிச்சர்ட்ஸ் மின்னல் வேகத்தில் 28 பந்துகளில் 33 ரன்களைக் குவித்தார். மதன்லால் பந்தில் தூக்கி அடித்த ரிச்சர்ட்ஸை அழகாக கேட்ச் பிடித்து அனுப்பி வைத்தார்க பில். கிளைவ் லாயிட் 8 ரன்களில் வீழ, இந்தியாவுக்கு நம்பிக்கை அதிகரித்தது. மேற்கு இந்தியத் தீவுகளின் ஆதிக்கம் தளரத் தொடங்கியது.
பின்னர் வந்தவர்களில் விக்கெட் கீப்பர் ஜெப் துஜான் மட்டும் 25 ரன்களைச் சேர்த்தார். மற்றவர்களெல்லாம் வேகமாக சுருண்டு போக யாரும் நமப முடியாத கண்களோடு மேற்கு இந்தியத் தீவுகள் வீழ்வதைப் பார்த்து அதிசயித்தனர்.
கபில்தேவின் புத்திசாலி பந்து வீச்சுப் படை நிகழ்த்திய மாயாஜாலத்திலிருந்து மீள முடியாமல் 52 ஓவர்களிலேயே அனைத்து விக்கெட்களையும் இழந்து 140 ரன்களோடு நின்று போனது மேற்கு இந்தியத் தீவுகள்.
அமர்நாத் 3 விக்கெட்களை வீழ்த்தி மேற்கு இந்தியத் தீவுகள் அணியை நிலை குலைய வைத்தார். இதற்காக அவர் விட்டுக் கொடுத்தது 12 ரன்கள் மட்டுமே. அதேபோல மதன்லாலும் 3 விக்கெட்களைச் சாய்த்து தன் பங்குக்கு மேற்கு இந்தியத் தீவுகள் அணியின் கதையை முடித்து வைத்தார். பேட்டிங்கிலும் ஜொலித்த அமர்நாத்தே இப்போட்டியில் ஆட்ட நாயகனாக தேர்வானார்.
உலகமே இந்தியா உலகக் கோப்பையை வென்றதை நம்பாமல் பொறாமையுடன் பார்த்த நாள் அது. இந்தியாவோ, கபில் உயர்த்திப் பிடித்த புரூடென்ஷியல் கோப்பையை ஆச்சரியத்துடன் பார்த்துப் பார்த்து மகிழ்ந்தது.
கபில்தேவ் தலைமையில் அவரது சிஷ்யர்கள் ஆடிய அந்த அட்டகாச ஆட்டம் இன்று வரை இந்தியாவின் ஒரே பெருமையாக உள்ளது. இதோ நாளை இதே இந்தியா, இன்னும் ஒரு வெற்றிப் படையுடன், டோணி தலைமையில் இலங்கையின் வானரப் படையை சந்திக்கவுள்ளது. இந்த முறை டோணியின் ‘ஏஞ்செல்கள்’, இந்தியாவுக்காக மீண்டும் கோப்பையை வென்று கொடுப்பார்களா, ‘டெவில்’களுக்கு விடை கொடுப்பார்களா, நாளை தெரியும்!.
Leave a Reply