இன்ஜினியரிங் சேர்க்கைக்கு மே 16ம் தேதி விண்ணப்பம்

posted in: கல்வி | 0

சென்னை : “”இன்ஜினியரிங் மாணவர் சேர்க்கைக்கு, மே 16ம் தேதி முதல் விண்ணப்பம் வழங்கப்படும்,” என, அண்ணா பல்கலை துணைவேந்தர் மன்னர் ஜவகர் தெரிவித்தார்.

தமிழகத்தில், 486 இன்ஜினியரிங் கல்லூரிகள் உள்ளன. இந்த கல்லூரிகளில் உள்ள 1 லட்சத்து 90 ஆயிரம் இடங்களில், 65 சதவீத இடங்கள் அரசுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன.ஆண்டுதோறும், இந்த இடங்களுக்கான மாணவர் சேர்க்கையை, அண்ணா பல்கலை நடத்தி வருகிறது. பிளஸ் டூ தேர்வுகளுக்கான முடிவுகள், மே மாதம் 15ம் தேதி வெளியிட வாய்ப்புள்ளது. எனவே, மே மாதம் 16ம் தேதி முதல் மே மாதம் இறுதி வரை, இன்ஜினியரிங் சேர்வதற்கான விண்ணப்பம் வழங்கப்பட உள்ளது.

இதுகுறித்து, அண்ணா பல்கலை துணைவேந்தர் மன்னர் ஜவகர் நிருபர்களிடம் கூறியதாவது: “பிளஸ் டூ’ தேர்வுகள், கடந்த 25ம் தேதி முடிந்துள்ளது. இத்தேர்வுக்கான முடிவுகள், மே இரண்டாவது வாரத்தில் வெளியாகலாம். அதனால், 2011-12ம் ஆண்டுக்கான இன்ஜினியரிங் மாணவர் சேர்க்கைக்கு, மே 16ம் தேதி முதல் விண்ணப்பங்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன.கடந்தாண்டு, 2 லட்சத்து 5 ஆயிரம் விண்ணப்பங்கள் அச்சடிக்கப்பட்டு வழங்கப்பட்டன. இந்தாண்டு, கூடுதலாக 15 ஆயிரம் விண்ணப்பங்கள் அச்சடிக்கப்பட்டுள்ளன. மேலும், விண்ணப்பங்கள் தேவைக்கு ஏற்ப கூடுதலாக அச்சடிக்கப்படும்.மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பம், சென்னை அண்ணா பல்கலை, அனைத்து அண்ணா தொழில்நுட்ப பல்கலை, அரசு உதவி பெறும் இன்ஜினியரிங் கல்லூரிகள் ஆகியவற்றிலும் விண்ணப்பம் வழங்கப்படும்.

விண்ணப்பம் வழங்கும் விவரம் மற்றும் கவுன்சிலிங் நடக்கும் நாட்கள் ஆகியவை குறித்த முழு விவரம், மே இரண்டாவது வாரத்தில் வெளியிடப்படும்.கவுன்சிலிங் நடைபெறுவதற்கான அனைத்து பணிகளையும், அண்ணா பல்கலை துவங்கியுள்ளது. இந்தாண்டு, புதிதாக 42 கல்லூரிகள் துவங்க, 42 பேர் விண்ணப்பித்துள்ளனர். இதில், இன்ஜினியரிங் கல்லூரிகள் துவங்க அனுமதி கேட்டு, ஏ.ஐ.சி.டி.இ.,க்கு 24 பேர் விண்ணப்பித்துள்ளனர். மீதமுள்ளவர்களில் எட்டு பாலிடெக்னிக் துவங்கவும், எம்.இ., எம்.டெக்., துவங்கவும் விண்ணப்பித்துள்ளனர்.இவ்வாறு மன்னர் ஜவகர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *