செஞ்சுரி அடித்தும் அணியை ஜெயிக்க வைக்க முடியாத முதல் வீரர் ஜெயவர்த்தனே

மும்பை: உலகக் கோப்பை இறுதிப் போட்டி ஒன்றில் சதம் கண்டும் கூட அணியை ஜெயிக்க வைக்க முடியாத முதல் வீரர் என்ற பெயர் இலங்கை வீரர் மஹேளா ஜெயவர்த்தனேவுக்குக் கிடைத்துள்ளது.
Mahela Jayawardena
Getty Images

இதற்கு முன்பு நடந்த உலகக் கோப்பைப் போட்டிகளில் சதம் அடித்த வீரர்கள் அந்த அணியை வெற்றி பெற வைத்ததுதான் வரலாறாக இருந்தது. ஆனால் அந்த வரலாற்றை மாற்றி எழுதியுள்ளார் ஜெயவர்த்தனே.
இறுதிப் போட்டியில் சிறப்பாக விளையாடிய ஜெயவர்த்தனே 103 ரன்களைக் குவித்தார். கடைசி வரை ஆட்டமிழக்காமலும் இருந்தார். இவரது ஆட்டம் காரணமாகவே இலங்கை அணியால் 274 ரன்களைக் குவிக்க முடிந்தது.

ஆனால் இவரது சதம் பயன்படாமல் போய் விட்டது. டோணியும், கம்பீரும் சேர்ந்து செய்த ரகளையில் இலங்கை அணி சின்னாபின்னமாகி விட்டது. ஜெயவர்த்தனேவின் சதம் கேட்பாரற்றுப் போனது.

ஒரு இறுதிப் போட்டியில் வீரர் ஒருவர் சதம் அடித்தும் அவரது அணி தோற்றது இதுவே முதல் முறையாகும்.

இதற்கு முன்பு 1975 உலகக் கோப்பைப் போட்டியின் இறுதி ஆட்டத்தில் மேற்கு இந்திய வீரர் கிளைவ் லாயிட் சதமடித்தார். 79 போட்டியில் ரிச்சர்ட்ஸ் சதமடித்தார். 1996ல் அரவிந்த டிசில்வா சதமடித்தார். 2003ல் ரிக்கி பான்டிங்கும், 2007ல் கில்கிறைஸ்ட்டும் சதம் போட்டனர். அந்த சமயத்தில் எல்லாம் அந்த அணிகளே வென்றன.

ஆனால் இப்போது முதல் முறையாக ஜெயவர்த்தனே சதமடித்தும் இலங்கையால் வெல்ல முடியாமல் போய் விட்டது.

இதன் மூலம் சதம் அடித்தும் அணியை வெற்றிக்குக் கொண்டு போக முடியாமல் போன வீரர் என்ற புதிய பெருமையை பெற்றுள்ளார் ஜெயவர்த்தனே.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *