லண்டன்: ஆஸ்திரேலியா , நியூசிலாந்து இணைந்து 2015ம் ஆண்டு நடத்தவுள்ள 11வது உலகக் கோப்பைக் கிரிக்கெட் தொடரில் 10 அணிகள் மட்டுமே பங்கேற்கும் என்று சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் கூறியிருப்பதற்கு அயர்லாந்து கடும் ஆட்சேபனையும், கோபத்தையும் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் முடிவடைந்த உலகக் கோப்பைக் கிரிக்கெட் போட்டியில், ஆச்சரியமூட்டிய அணிகளில் ஒன்று அயர்லாந்து. வலுவான இங்கிலாந்தையே தோற்கடித்து ஆப்படித்தது அயர்லாந்து.
ஆனால் அயர்லாந்து போன்ற அணிகளின் வருகையை ரசிக்காத ஆஸ்திரேலிய கேப்டன் ரிக்கி பான்டிங் உள்ளிட்ட சிலர் அடுத்த உலகக் கோப்பைப் போட்டியின்போது இந்த குட்டி அணிகளை சேர்க்கக் கூடாது என்று வலியுறுத்தியிருந்தனர்.
இந்த நிலையில்தான் ஐசிசியின் முடிவு வந்துள்ளது. இதற்கு அயர்லாந்து கேப்டன் வில்லியம் போர்ட்டர்பீல்ட் அதிருப்தி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் இது மிகவும் அவமானமாக இருக்கிறது. வளரும் அணியான எங்களை அவமானப்படுத்தியுள்ளது ஐசிசி.
ஏன் இப்படி ஒரு முடிவை எடுத்துள்ளனர் என்பது புரியவில்லை. நாங்கள் தரவரிசையில் ஜிம்பாப்வே அணியை விட மேலே, 10வது இடத்தில் இருக்கிறோம். நாங்கள் மேலும் வளர மாட்டோம் என்று கூற எந்தக் காரணமும் இல்லை. ஆனால் வளர வாய்ப்பே தராமல் இப்போது கதவை மூடி விட்டது ஐசிசி. இது மிகவும் அதிர்ச்சியாக உள்ளது.
நாங்கள் உலகக் கோப்பைப் போட்டியில் சிறப்பாகவே செயல்பட்டோம். இங்கிலாந்தை தோற்கடித்தோம். உலகக் கோப்பைப் போட்டி வரலாற்றிலேயே விரைவான செஞ்சுரியை அடித்தது எங்களது அணிதான். ஆனால் திறமைகளை வளர்த்துக் கொண்டு வரும் எங்களுக்கு வாசலை அடைத்து விட்டனர். இது என்ன நியாயம் என்று குமுறலோடு பேசினார் போர்ட்டர்பீல்ட்.
டுவென்டி 20 உலகக் கோப்பைப் போட்டித் தொடரில் குட்டி அணிகளை சேர்க்கலாம் என்று ஐசிசி கூறியிருப்பதையும் ஆட்சேபித்துள்ளார் போர்ட்டர்பீல்ட். இதுகுறித்து அவர் கூறுகையில்,
இது மிகவும் கேலிக்கூத்தாக உள்ளது. அனைவருக்குமே ஒரு நாள் உலகக் கோப்பைப் போட்டியில் பங்கேற்பதுதான் கனவாக இருக்குமே தவிர டுவென்டி 20 உலகக் கோப்பை நிச்சயம் கனவாக இருக்க முடியாது.
மேலும் ஐசிசியின் இந்த முடிவால் உலக அளவில் கிரிக்கெட்டின் வளர்ச்சி கடுமையாக பாதிக்கும். கிரிக்கெட் ஆர்வம் உள்ள பல நாடுகள் இப்போது பெருகியுள்ளன. அந்த நாடுகள் எல்லாம் பின்வாங்கும் நிலை உருவாகும்.
அயர்லாந்து மட்டுமல்ல, கனடா, ஹால்ந்து உள்ளிட்ட நாடுகளும் கூட ஐசிசியின் இந்த முடிவால் அப்செட் ஆகியுள்ளன என்றார்.
அயர்லாந்து கிரிக்கெட் வாரிய தலைமை செயலதிகாரி வாரன் டியூட்ரம், ஐசிசியின் முடிவை கடுமையாக விமர்சித்துள்ளார். இந்த முடிவு கடும் கோபத்தை கொடுப்பதாக உள்ளது. இதை நாங்கள் சாதாரணமாக எடுத்துக் கொள்ள மாட்டோம். இது மிகப் பெரிய துரோகச் செயலாகும். உலக்க கோப்பையில் அயர்லாந்து மிக அருமையாக விளையாடியது. பெரிய நாடுகளுடன் மோதி அவர்களை திணறடித்தது. இதை யாரும் மறந்து விடக் கூடாது.
உலகின் மிகச் சிறந்த அணிகளுடன் சிறப்பாக விளையாடுவது என்பது சாதாரண விஷயம் அல்ல என்றார் அவர்.
Leave a Reply