சென்னை: வங்கிகளில் வீட்டுக் கடன், கார்-பைக் லோன் போன்றவற்றுக்காக விண்ணப்பித்து, காத்திருப்போருக்கு ஒரு நல்ல செய்தி… இனி வட்டி உயருமோ என்று கவலைப்படத் தேவையில்லை.
இனி வட்டி வீத உயர்வு இருக்காது என்று பல்வேறு முன்னணி வங்கிகளும் அறிவித்துள்ளன.
“இப்போது என்ன வட்டி வீதம் உள்ளதோ இதுவே உயர்ந்தபட்ச வட்டியாக இருக்கும். இதற்கு மேல் வட்டி வீதம் உயராது. வேண்டுமானால் குறைய வாய்ப்பிருக்கிறது,” என அறிவித்துளஅளார் பஞ்சாப் நேஷனல் வங்கியின் செயல் இயக்குநர் மோகன் தாங்க்சேல்.
இந்தியன் ஓவர்ஸீஸ் வங்கியின் தலைவர் எம் நரேந்திரா கூறுகையில், “பொதுவாகவே இனி வட்டிவீதம் உயர வாய்ப்பில்லை. 2011-2012ன் முதல் காலாண்டில் இப்போதுள்ள வட்டிவீதமே தொடரும். அதற்குப் பிந்தைய காலகட்டத்தில் பணவீக்கம் குறைந்தால், வட்டி வீதம் குறையும் வாய்ப்புள்ளது”, என்றார்.
யுனைடட் பேங்க் ஆப் இந்தியா செயல் இயக்குநர் பன்சால் கூறுகையில், ரிசர்வ் வங்கி மேலும் 0.25 சதவீதம் வட்டியை உயர்த்தும் வாய்ப்புள்ளது. இருந்தாலும், வணிக வங்கிகள் வட்டியை உயர்த்துவதில்லை என முடிவு செய்துள்ளன என்றார்.
நிரந்தர வைப்புத் தொகை அளவு கிட்டத்தட்ட 20 சதவீதத்துக்கு மேல் இந்த ஆண்டு அதிகரித்துள்ளதால், வணிக வங்கிகள் கடன்களுக்கான வட்டியை உயர்த்துவதை நிறுத்தி வைத்துள்ளதாகக் கூறப்படுகிறது.
கைவசம் போதிய ரொக்க இருப்பு இருப்பதால், கடன்களை வழங்குவதில் தாராளம் காட்டவே அனைத்து வங்கிகளும் இப்போது விரும்புகின்றன.
Leave a Reply