எதிரணிக்கு தோல்வி பயம் வந்து விட்டது :ஸ்டாலின் பேச்சு

posted in: அரசியல் | 0

பொள்ளாச்சி:””நாம் சாதனையை சொல்லி ஓட்டு கேட்கிறோம். பயன்பெற்ற மக்கள் ஆதரவு கொடுக்கிறார்கள். இதனால் எதிரணிக்கு தோல்வி பயம் வந்து விட்டது,” என துணைமுதல்வர் ஸ்டாலின் கூறினார்.

பொள்ளாச்சி கொ.மு.க., வேட்பாளர் நித்தியானந்தன், உடுமலை கொ.மு.க., வேட்பாளர் இளம்பரிதி ஆகியோரை ஆதரித்து பொள்ளாச்சி திருவள்ளுவர் திடலில், துணை முதல்வர் ஸ்டாலின் பிரசாரம் செய்தார்.

மேடை ஏறாமல் வேனில் இருந்தபடியே ஸ்டாலின் பேசியதாவது:கடந்த ஐந்தாண்டுகளில் மக்களை அடிக்கடி சந்தித்து பல்வேறு பிரச்னைகளை தீர்த்து வைத்துள்ளோம். ஆனால், தேர்தலின் போது மட்டும் மக்களை சந்திக்க வரும் எதிர்க்கட்சி தலைவர் மக்கள் பிரச்னையை தீர்த்து வைக்க மாட்டார். அவரை யாரும் நம்பி மோசம் போகாதீர்கள். தேர்தல் பிரசாரத்திற்கு கூட ஹெலிகாப்டரில் பறந்து வருகிறார். தேர்தல் முடிந்ததும் கொடநாடு எஸ்டேட்டுக்கு பறந்து போய்விடுவார்.அப்படிப்பட்டவருக்கு துணையாக இன்னொரு தலைவர் வந்திருக்கார். சினிமாவில் கதாநாயகனாக நடித்து பெயர் பெற்ற விஜயகாந்த், அரசியலில் வேட்பாளர்களுக்கு தர்மஅடி கொடுத்து வில்லனாக மாறி விட்டார். இப்படிப்பட்டவர்களிடம் நாட்டை ஒப்படைத்தால் எப்படி இருக்கும் என்று யோசித்து ஓட்டு போடுங்கள்.கடந்த தேர்தலில் சொன்ன வாக்குறுதியை நூற்றுக்கு நூறு சதவீதம் நிறைவேற்றியவர் கருணாநிதி. இந்த தேர்தலில் மக்களுக்காக பல்வேறு திட்டங்களை தேர்தல் அறிக்கையில் அறிவித்துள்ளார். அந்த அறிக்கையையும் எதிர்க்கட்சி தலைவர் காப்பியடித்து விட்டார்.நாம் சாதனையை சொல்லி ஓட்டு கேட்கிறோம். பயன்பெற்ற மக்கள் ஆதரவு கொடுக்கிறார்கள். இதனால் எதிரணிக்கு தோல்வி பயம் வந்து விட்டது. இவ்வாறு, ஸ்டாலின் பேசினார்.

கருணாநிதி கரத்தை வலுப்படுத்துங்கள் :திருப்பூரில் ஸ்டாலின் பேச்சு : திருப்பூரில் வீரபாண்டி பிரிவு, தென்னம்பாளையம், பழைய பஸ் ஸ்டாண்ட் பகுதிகளில் தி.மு.க., கூட்டணிக்கு ஆதரவு கேட்டு துணை முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது:வரும் சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் தி.மு.க., ஆட்சி உருவாக மக்கள் துணை நிற்க வேண்டும். அதற்காக, மக்களை தேடி, நாடி உரிமையோடு வந்திருக்கிறோம். தெற்கு தொகுதியில் போட்டியிடும் காங்., வேட்பாளர் செந்தில்குமாரை வெற்றி வேட்பாளராக, மக்கள் எங்களிடம் ஒப்படைக்க வேண்டும்.கடந்த ஐந்தாண்டுகளில் தேர்தல் நேரத்தில் தந்த அத்தனை உறுதிமொழிகளையும் கருணாநிதி நூற்றுக்கு நூறு சதவீதம் நிறைவேற்றி தந்திருக்கிறார். மீண்டும் அவரது தலைமையில் ஆட்சி தொடர வேண்டும். அனைத்து தரப்பு மக்களின் நலன்களும் பாதுகாக்கப்பட வேண்டும்; அதற்கு தி.மு.க., கூட்டணி வெற்றி பெற மக்கள் துணை நிற்க வேண்டும்.நாங்கள் தேர்தல் நேரத்தில் மட்டும் வருபவர்கள் அல்ல; சிலருக்கு தேர்தல் வந்தால்தான் மக்கள் ஞாபகம் வருகிறது; உறுதிமொழிகளை தருகின்றனர்.தமிழக மக்களுக்காக பாடுபடும் கருணாநிதியின் கரத்தை வலுப்படுத்த, மீண்டும் தி.மு.க., ஆட்சி தொடர, மக்களுக்கான திட்டங்களை நிறைவேற்ற வாய்ப்பளிக்கும் வகையில் காங்., வேட்பாளர் செந்தில் குமாரை வெற்றி பெற செய்ய வேண்டும், என்றார்.

பல்லடம்: பல்லடம் தொகுதி கொ.மு.க., வேட்பாளர் பாலசுப்ரமணியத்தை ஆதரித்து ஸ்டாலின் பேசியதாவது:தமிழக முன்னேற்றத்துக்காக கருணாநிதி தொடர்ந்து பாடுபடுகிறார்; உழைக்கிறார்; தொண்டாற்றுகிறார். தி.மு.க.,வின் ஐந்தாண்டு ஆட்சியில் முன்பு கூறியிருந்த தேர்தல் அறிக்கை நிறைவேற்றப்பட்டுள்ளது. மீண்டும் கருணாநிதி முதல்வராக பொறுப்பேற்றால், தற்போது வெளியிட்டுள்ள தேர்தல் வாக்குறுதிகளை முழுமையாக நிறைவேற்றுவார். அந்த நம்பிக்கை உங்களிடம் இருக்கிறதா?( திரண்டு இருந்த பொதுமக்கள் ஆமாம், ஆமாம் என கோஷமிட்டனர்) உங்களின் ஒருவனாக கேட்கிறேன், உங்களின் சகோதரனாக கேட்கிறேன்.உங்கள் வீட்டுப்பிள்ளையாக கேட்கிறேன். எல்லாவற்றுக்கும் மேலாக கருணாநிதி மகனாக உங்களை கேட்கிறேன். தி.மு.க., கூட்டணியில் உள்ள உங்களது கொ.மு.க., வேட்பாளர் பாலசுப்ரமணியத்திற்கு காஸ் சிலிண்டர் சின்னத்தில் ஓட்டளித்து பெருவாரியான ஓட்டு வித்தியாசத்தில் அவரை ஜெயிக்க வைக்க வேண்டும், என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *