கோவையில் தெற்கு தொகுதி வேட்பாளர் பொங்கலூர் பழனிசாமி, சிங்காநல்லூர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் மயூரா ஜெயக்குமார், தொண்டா முத்தூர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் எம்.என்.கந்தசாமி ஆகியோரை ஆதரித்து மத்திய மந்திரி ப.சிதம்பரம் கோவையில் தேர்தல் பிரசாரம் செய்தார்.
அவர் பழையூர், ராஜவீதி, சாரமேடு, குனியமுத்தூர், மசக்காளிப் பாளையம் ஆகிய இடங்களில் தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் உதயசூரியன், கை சின்னத்திற்கு வாக்கு சேகரித்து பேசினார். அப்போது அவர் பேசிய தாவது:-
தமிழகத்தில் 2001 முதல் 2006-ம் ஆண்டு வரை அ.தி.மு.க. அரசு ஜெயலலிதா தலைமையில் இருந்தது. 2006 முதல் 2011 வரை தி.மு.க. அரசு இருந்து வருகிறது. ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தபோது ஒரு தேர்தல் அறிக்கையை வெளியிட்டார். பிறகு ஆட்சியில் 5 ஆண்டில் நினைவில் நிற்ககூடிய திட்டங்கள், சாதனைகள் ஏதாவது செய்தாரா? என்று சிந்தித்து பாருங்கள்.
அதன்பிறகு வந்த தி.மு.க. அரசின் சாதனைகளையும் நினைத்து பாருங்கள். இலவச கலர் டி.வி, இலவச நிலம், கூட்டுறவு கடன் தள்ளுபடி என ஏராளமான திட்டங்கள் செய்தது. தேர்தல் வாக்குறுதியில் கூறாத பல திட்டங்களை செய்து சாதனை படைத்தது தி.மு.க. அரசு. அ.தி.மு.க. ஆட்சியின் போது ஒரே நாளில் ஒன்றரை லட்சம் அரசு ஊழியர்களை டிஸ்மிஸ் செய்தது.
சாலைப் பணியாளர்களை பணி நீக்கம் செய்தது. திருமண உதவித் தொகையை ரத்து செய்தது போன்ற வேதனைகள் தான் நினைவுக்கு வருகின்றன. உயர்கல்வி பெறுவதற்கு பொருளாதாரம் தடையாக இருக்கக் கூடாது என்பதற்காக கல்விக்கடன் திட்டம் கொண்டு வரப்பட்டது.
20 லட்சம் பேருக்கு ரூ.40 ஆயிரம் கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது. இதில் தமிழகத்தில் மட்டும் 5 லட்சம் மாணவர்கள் கடன் பெற்றிருக்கின்றனர். கடந்த 5 ஆண்டுகளில் தமிழகத்துக்கு மட்டும் ரூ.97 ஆயிரம் கோடியை நிதியாக மத்திய அரசு வழங்கியுள்ளது. மத்திய அரசிடன் இணக்கமான அரசு இருந்தால் மட்டுமே ஆட்சி சிறப்பானதாக இருக்கும். தமிழகத்தில் தி.மு.க. மீண்டும் ஆட்சிக்கு வருவதே மக்களுக்கு நன்மை தரும். இவ்வாறு அவர் பேசினார்
Leave a Reply