மத்திய அரசு ஆதரவுடன் நல்ல திட்டங்கள்: கருணாநிதிக்கு ராகுல் நற்சான்று

posted in: அரசியல் | 0

காரைக்குடி: “”மத்திய அரசின் ஆதரவோடு, முதல்வர் கருணாநிதி, நல்ல திட்டங்களை செயல்படுத்தியுள்ளார்,” என, காங்., பொது செயலாளர் ராகுல் பேசினார்.

காங்., வேட்பாளர்கள் ராமசாமி (காரைக்குடி), ராஜசேகரன் (சிவகங்கை), திருநாவுக்கரசு (அறந்தாங்கி), தி.மு.க., அமைச்சர்கள் பெரியகருப்பன் (திருப்புத்தூர்), தமிழரசியை (மானாமதுரை) ஆதரித்து, காரைக்குடியில் அவர் பேசியது: மத்திய, மாநில அரசுகள் ஒரே கொள்கையை கொண்டவை. ஜாதி, மத வேற்றுமை இன்றி மக்களை ஒற்றுமையாக பார்க்கும் அரசு. அனைவருக்கும் கல்வி, சுகாதாரம் என்பது அரசின் கொள்கை. திட்டங்கள் அடித்தட்டு மக்களுக்கும் சென்றடைய வேண்டும். ஏழைகளுக்கு வேலைவாய்ப்பு அளிப்பது முக்கிய குறிக்கோள். ஊரக வேலை உறுதி திட்டம் வெற்றி பெற்றுள்ளது. மற்ற நாடுகளில் இதுபோன்ற திட்டத்தை செயல்படுத்த ஆவலாக உள்ளனர். விவசாயிகளின் 70 ஆயிரம் கோடி ரூபாய் கடனை ரத்து செய்தோம். விவசாய கடனுக்காக வங்கிகளின் கதவுகளை திறந்து வைத்தோம். பள்ளி குழந்தைகளுக்கு மதிய உணவு திட்டம், அங்கன்வாடி மையம் அனைத்து கிராமங்களிலும் உள்ளது.

நாட்டை முன்னேற்ற பாதையில் கொண்டு செல்ல, பெண்களின் பங்கு முக்கியம். சட்டசபை, பார்லிமென்டில் பெண்களுக்கு மூன்றில் ஒரு பங்கு ஒதுக்கீடு கொண்டுவர பாடுபடுவேன். மத்திய அரசின் ஆதரவோடு, முதல்வர் கருணாநிதி நல்ல திட்டங்களை செயல்படுத்தியுள்ளார். மத்திய அரசு, மாநிலங்களுக்கு ஒரு லட்சம் கோடி ரூபாய் வரை மானியம் வழங்கியுள்ளது. இதில், அதிக மானியத்தை தமிழகம் பெற்றுள்ளது. தொழில், கல்வியில் வளர்ச்சி பெற்று வரும் மாநிலங்களில், தமிழகம் முதலிடம் வகிக்கிறது. மத்திய, மாநில அரசுகள் இணைந்து செயல்படுவோம் என, உறுதியளிக்கிறேன். காரைக்குடியில் மருத்துவ கல்லூரி, விவசாய பல்கலை, தொழில் வளர்ச்சி போன்ற பல திட்டங்களை கொண்டு வர முயற்சிப்பேன், என்றார்.

* ராகுல் பேசுகையில், “”எனக்கும் தமிழக மக்களுக்கும் நெருங்கிய உறவு உண்டு. இந்த உறவை மேம்படுத்துவதில் பெருமை அடைகிறேன்,” என்றார்.

* கூட்டத்திற்கு வந்தவர்களை போலீசார் கடும் சோதனைக்கு பின் உள்ளே அனுப்பினர். கூட்டம் வெளியே நின்றதை பார்த்த அமைச்சர் சிதம்பரம் கேட்டு கொண்டதால், கெடுபிடி தளர்த்தப்பட்டது.

* மாலை 5.35 மணிக்கு மேடைக்கு வந்தார். 5.40 பேச துவங்கி, 5.55 மணிக்கு முடித்தார்.

* வேட்பாளர்கள் பெயருடன் “ஜி’ சேர்த்து அழைத்தார்.

* ராகுல் பேச்சை கார்த்தி சிதம்பரம் மொழி பெயர்த்தார்.

* கூட்டத்தில் திருமயம் வேட்பாளர் சுப்புராம் “மிஸ்சிங்’.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *