மதுரை கலெக்டர் பேச்சில் தவறில்லை : எதிர்த்த மனு தள்ளுபடி

posted in: கோர்ட் | 0

சென்னை : மாவட்ட தேர்தல் அதிகாரி பொறுப்பில் இருந்து, கலெக்டர் சகாயத்தை மாற்றக் கோரி தாக்கல் செய்த மனுவை, சென்னை ஐகோர்ட் தள்ளுபடி செய்தது.

மதுரை அண்ணாநகரைச் சேர்ந்த சத்தியவாணி என்பவர் தாக்கல் செய்த மனுவில், “மதுரையில் உள்ள பாத்திமா, மீனாட்சி கல்லூரிகளில் நடந்த தேர்தல் விழிப்புணர்வு பிரசாரக் கூட்டங்களில், தேர்தல் அதிகாரியான மாவட்ட கலெக்டர் சகாயம் பேசினார். அப்போது, தேர்தல் மூலம் மற்றம் வர வேண்டும் என கூறியுள்ளார். “இந்த பேச்சு, ஆளுங்கட்சி மாற வேண்டும் என்பதை மறைமுகமாக உணர்த்துவது போல் உள்ளது. தேர்தல் கமிஷன் பிறப்பித்த வழிமுறைகளை இது மீறுவது போல் உள்ளது. மாவட்ட தேர்தல் அதிகாரி பொறுப்பில், இருந்து கலெக்டரை உடனடியாக மாற்ற, தலைமைத் தேர்தல் அதிகாரிக்கு உத்தரவிட வேண்டும்’ என கூறியுள்ளார்.

இம்மனுவுக்கு மாவட்ட தேர்தல் அதிகாரியும், கலெக்டருமான சகாயம் தாக்கல் செய்த பதில் மனு: என் பேச்சை தவறாக திரித்துள்ளனர். தேர்தலில் அதிகார மாற்றம் வர வேண்டும் என நான் பேசியதாக திரித்துள்ளனர். ஓட்டுக்கு பணம் பெறுவதை தடுக்கும் வகையில் விழிப்புணர்வு பிரசாரம் செய்யப்பட்டது. மனுதாரர் கூறுவது போல், தேர்தல் மூலம் அரசில் மாற்றம் வர வேண்டும் என நான் பேசவில்லை. என் பேச்சு முழுவதும் வீடியோவில் பதிவு செய்யப்பட்டுள்ளது. விருப்பு, வெறுப்பின்றி பாரபட்சமின்றி, மாவட்ட தேர்தல் அதிகாரி என்ற முறையில் கடமை ஆற்றுவது தான் என் முக்கிய பொறுப்பு. இவ்வாறு பதில் மனுவில் கூறப்பட்டுள்ளது.

மனுவை விசாரித்த தலைமை நீதிபதி இக்பால், நீதிபதி சிவஞானம் அடங்கிய, “முதல் பெஞ்ச்’ பிறப்பித்த உத்தரவு: மாவட்ட கலெக்டரின் பேச்சுக்கள் அடங்கிய வீடியோவை நாங்கள் பார்த்தோம். “ஓட்டுப் போடுவதற்கு யாரும் பணம் வாங்கக் கூடாது. ஓட்டு விற்பனைக்கு அல்ல’ என, கலெக்டர் பேசியுள்ளார். ஒவ்வொரு கூட்டத்தின் முடிவிலும், மாணவர்களை உறுதிமொழி ஏற்கச் சொல்லியுள்ளார். மாற்றம் வர வேண்டும் என, கலெக்டர் பேசியிருப்பது அரசியல் அதிகார மாற்றம் என கருத முடியாது. மக்கள் மனதில் மாற்றம் வர வேண்டும் என்று தான் கருத முடியும்.

கலெக்டர் கலந்து கொண்ட நான்கு கூட்டங்களிலும் சுதந்திரமான, நியாயமான, ஊழலற்ற தேர்தலை பற்றியை கருத்தை தான் வெளிப்படுத்த முயற்சித்துள்ளார். எனவே, கலெக்டர் பேசிய பேச்சுக்களை, மனுதாரர் கூறியபடி கருத முடியாது.
தேர்தல் கமிஷன் கூறியுள்ளபடி மதுரை மாவட்ட கலெக்டர் கூட்டிய விழிப்புணர்வு கூட்டங்கள் எல்லாம், மக்கள் பிரதிநிதித்துவச் சட்டப்படியான தேர்தல் அதிகாரியின் கடமை மற்றும் பொறுப்பு என்ற வரம்புக்குள் வரும். எனவே, அதிகார வரம்பை கலெக்டர் மீறியதாக மனுதாரரின் வக்கீல் கூறியதை ஏற்க முடியாது. மனுவில் எழுப்பியுள்ள கருத்துக்களுக்கு அடிப்படையில்லை. மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. இவ்வாறு “முதல் பெஞ்ச்’ உத்தரவிட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *