ஜப்பான் துயரம் அதிகரிப்பு: அஞ்சலி நேரத்தில் நிலநடுக்கம்

posted in: உலகம் | 0

டோக்கியோ: ஜப்பானில் நேற்று மீண்டும் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்நிலையில்,

புக்குஷிமா அணு மின் நிலையத்தைச் சுற்றி, மக்கள் வசிக்கத் தடை விதிக்கும் பரப்பளவு அதிகரிக்கப்பட்டுள்ளது.

ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம் மற்றும் சுனாமி நிகழ்ந்து ஒரு மாதம் கடந்த நிலையில், நேற்று அதை நினைவுகூரும் வகையில் நாடு முழுவதும் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்த அஞ்சலி கூட்டங்கள் முடிந்த ஒரு மணி நேரத்தில், புக்குஷிமாவுக்குத் தெற்கில் 81 கி.மீ., தொலைவில் மையம் கொண்ட பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 7.1 புள்ளிகளாக பதிவான இந்நிலநடுக்கத்தால், தலைநகர் டோக்கியோவில் கட்டடங்கள் குலுங்கின. இதனால், இபாராக்கி மாகாணத்தில் மூன்றடி உயரத்தில் சுனாமி அலைகள் தாக்கக் கூடும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டது. எனினும், 50 நிமிடங்களுக்குப் பின் அது திரும்பப் பெறப்பட்டது. நிலநடுக்கத்தால் புக்குஷிமா அணு மின் நிலையத்தில் பணியில் இருந்த ஊழியர்கள், பாதுகாப்பு கருதி உடனடியாக வெளியேற்றப்பட்டனர். ஜப்பான் வானிலை மையம், இன்னும் பல பயங்கர நிலநடுக்கங்கள் நிகழ வாய்ப்பிருப்பதாக எச்சரித்துள்ளது. இந்நிலையில், புக்குஷிமா அணு மின் நிலையத்தில் இருந்து கதிர்வீச்சு தொடர்ந்து வெளியேறிக் கொண்டிருப்பதால், மக்கள் அப்பகுதியில் வசிக்கக் கூடாது என்று அதன் பரப்பளவை அதிகரித்து உத்தரவிட்டுள்ளது. அதன்படி, அணு மின் நிலையத்தில் இருந்து 20 முதல் 30 கி.மீ., சுற்றளவிற்குள் உள்ள நகராட்சிப் பகுதிகள் இதில் அடங்கும். இப்பகுதிகளில் வசிக்கும் மக்கள், வேறு இடங்களுக்குச் சென்று விட வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *